கெஜ்ரிவால் கேட்ட 3 புத்தகங்கள்: திகார் சிறையில் என்னென்ன சலுகைகள்?
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் திகார் சிறையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ளார். "லோக்சபா தேர்தல் முடியும் வரையில் அவரை சிறையில் வைத்திருக்க வேண்டும் என்பதே பா.ஜ.,வின் நோக்கம்" என்கிறார், கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா.
டில்லியில் மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதாக எழுந்த புகாரில், கடந்த மார்ச் 21ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 'சிறையில் இருந்தாலும் அவர் முதல்வராக தொடர்வார்' என ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது.
இந்நிலையில், டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கெஜ்ரிவாலை, ஏப்ரல் 15 வரையில் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, "அவர் குற்றம் செய்ததாக நீதிமன்றம் கூறவில்லை. அப்படியிருக்கும்போது அவரை ஏன் சிறையில் அடைக்க வேண்டும். லோக்சபா தேர்தல் முடியும் வரையில் அவரை சிறையில் வைத்திருக்க வேண்டும் என்பதே பா.ஜ.,வின் நோக்கம்" என்றார்.
நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, கெஜ்ரிவாலுக்கு திகார் சிறையில் தனி அறை ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டாலும், சிறைக் கட்டுப்பாட்டை மீறி முதல்வராக அவரால் செயல்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, சிறையில் தனக்கு வேண்டிய வசதிகள் குறித்து கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதில், பகவத் கீதை, ராமாயணம் மற்றும் பத்திரிகையாளர் நீரஜா சௌத்ரி எழுதிய How Prime minister decide ஆகிய 3 புத்தகங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்.
மதம் சார்ந்து அணிந்திருக்கும் பொருள்களை வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். சிறையில் மருந்துகளை தர வேண்டும், உடல்நலனுக்கு ஏற்ற சிறப்பு உணவுகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
தற்போது திகார் சிறையில் கெஜ்ரிவாலுக்கு இரண்டாம் எண் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவரது அறைக்கு வெளியே கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 15 வரையில் நீதிமன்றக் காவலில் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ளதால், டில்லியில் நிர்வாகரீதியான பணிகளை அவர் எப்படி மேற்கொள்ளப் போகிறார், தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வாசகர் கருத்து