ஓசூரில் குடிநீர் கட்டண உயர்வு: தி.மு.க., நாடகத்தால் மக்கள் அதிருப்தி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில், 90,000த்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 3.50 லட்சம் பேர் வாழ்கின்றனர். இங்கு, 2.23 லட்சம் ஓட்டுகள் உள்ளன. மாநகராட்சி நிர்வாகம் மூலம், குடியிருப்புகளுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீருக்கு மாதம், 40 ரூபாய் வீதம், ஆண்டுக்கு, 480 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்பட்டது.
இக்கட்டணத்தை அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, 2020 அக்., 1ல், மாதம், 125 ரூபாய் என உயர்த்தியதால் ஆண்டுக்கு, 1,500 ரூபாயாக கட்டணம் உயர்ந்தது. மூன்று மடங்கு உயர்த்தப்பட்ட கட்டணம், சாமானிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத போது, மக்களின் கருத்து கேட்காமல் உயர்த்தப்பட்ட இக்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என, நான்கு ஆண்டுகளாக மக்கள் கேட்டு வருகின்றனர்.
ஓசூர் மாநகராட்சியின் தற்போதைய மேயரும், அப்போதைய எம்.எல்.ஏ., வுமான, தி.மு.க.,வை சேர்ந்த சத்யா, கொரோனா தொற்று காலத்தில், குடிநீர் கட்டண உயர்வு கண்டனத்துக்குரியது என தெரிவித்தார். 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட, தி.மு.க., வேட்பாளர் பிரகாஷ், தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பிரகாசும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக உள்ளார். ஆனால், இதுவரை தி.மு.க., அரசு கட்டண உயர்வை திரும்ப பெறவில்லை.
தற்போதைய நிலையில் ஓசூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, 10 நாட்களுக்கு ஒருமுறை கூட குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். லோக்சபா தேர்தலில், ஓசூர் சட்டசபை தொகுதியில் கூடுதல் ஓட்டுகளை பெறும் கட்சி முன்னிலை பெறலாம். தி.மு.க., மீது ஓசூர் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி, கூட்டணியான காங்., வேட்பாளருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என, மக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து, ஓசூர் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
கடந்த, 2020ல் எம்.எல்.ஏ.,வாக இருந்த சத்யா, தற்போதைய எம்.எல்.ஏ., பிரகாஷ் ஆகியோரிடம் மனு கொடுத்தோம். உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். ஆனால், உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்று, 2 ஆண்டுகள் கடந்து விட்டன. தி.மு.க., மேயர் சத்யாவிடம் மனு கொடுத்தோம். 2020ல் கண்டனம் தெரிவித்த அவர், தற்போது நிதி நெருக்கடி இருப்பதாக கூறுகிறார். மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் எழுதியும், பதில் கடிதம் வரவில்லை. இது எங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் எதிர்ப்பு தெரிவித்து விட்டு, தற்போது தி.மு.க., ஆட்சியில் உள்ள போது, கட்டண உயர்வை திரும்ப பெறாமல் ஏமாற்றுவதால், வரும் தேர்தலில் அதற்கான விளைவுகளை தி.மு.க., கூட்டணி சந்திக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து