பவுன்சர்களுடன் வலம் வரும் பா.ஜ., வேட்பாளர்: கட்சிக்குள் அதிகரிக்கும் அதிருப்தி
கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலில், பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர், அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான நரசிம்மன்.
இவர், கல்லுாரி பருவத்திலிருந்து, காங்., கட்சியில் இருந்தவர். கடந்த, 1996ல் காங்.,கிலிருந்து விலகி, த.மா.கா.,வில் இணைந்து சீட் பெற்று எம்.பி.,யானார். பின்னர், த.மா.கா.,விலிருந்து விலகி, காங்.,ல் ஐக்கியமானார். கடந்த, 9 ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.,வில் இணைந்த இவருக்கு, 2016 சட்டசபை, 2019 லோக்சபா தேர்தலில் 'சீட்' கிடைக்கவில்லை.
இதனிடையே பா.ம.க., நிர்வாகிகளை பா.ஜ.,வில் இணைத்தது, கிருஷ்ணகிரி ரயில் திட்டம் குறித்து, பா.ஜ., அரசுதான் இத்திட்டத்தை கொண்டு வந்தது எனக்கூறி சிட்டிங் காங்.,- எம்.பி., செல்லக்குமாரை கடுமையாக விமர்சனம் செய்தது என பல சர்ச்சைகளில் சிக்கினார்.
பா.ஜ., வேட்பாளராயினும் அக்கட்சியினரிடமும், நிர்வாகிகளிடம் நெருக்கம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து பா.ஜ., முக்கிய பிரமுகர் கூறியதாவது:
கிருஷ்ணகிரி பா.ஜ., வேட்பாளர் நரசிம்மனுக்கும், கிழக்கு மாவட்ட தலைவர் சிவபிரகாசுக்கும் ஏற்கனவே கோஷ்டி பூசல் உள்ளது. வேட்புமனு தாக்கல் முடிந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது கூட, சிவபிரகாஷ் உடன் இல்லை. இவர் மாவட்ட, பா.ஜ., நிர்வாகிகளை மதிப்பதில்லை. பா.ம.க.,விலிருந்து வந்தவர்களை உடன் வைத்துக் கொண்டு கோஷ்டி அரசியல் செய்கிறார்.
குறிப்பாக மாநில தலைவர் அண்ணாமலை பெயரை சொன்னாலே கோபமாகி விடுகிறார். கட்சியினரிடம், 'அண்ணாமலைக்கு தான் சப்போர்ட் செய்கிறீர்கள்; எனக்கு வேலை செய்யமாட்டீர்கள்' என கூறி கோபப்படுகிறார்.
மேலும் தன்னுடன் எப்போதும், இரு பவுன்சர்களை வைத்துக் கொள்கிறார். அவர் அருகில் கட்சியினர் வந்தால் அவர்கள் தடுத்து தள்ளி விடுகின்றனர். தேர்தலில் நிற்பவர், மக்களோடு மக்களாக நின்று குறைகளை கேட்காமல் செல்வதும், பவுன்சர்கள் மூலம் கட்சியினரைக் கூட, விரட்டி விடுவதும் பெரும் சர்ச்சையாகிஇருக்கிறது. கட்சி மேலிடம் இவரிடம் பேசி, நடவடிக்கையை மாற்றாவிட்டால் தேர்தலில் எதிர்வினையைத்தான் சந்திப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து