முதல்வர் பதவியை ராஜினாமா செய்வாரா கெஜ்ரிவால்: அடுத்து என்ன நடக்கும்?
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் திகார் சிறையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட உள்ளதால், அவர் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டில்லியில் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், நேரில் ஆஜராவதை அவர் தொடர்ந்து தவிர்த்து வந்தார்.
இது தொடர்பாக, டில்லி உயர் நீ/திமன்றத்தில் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அவரை அமலாக்கத்துறை கைது செய்வதற்கு தடை விதிக்கவும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இதன் காரணமாக, கடந்த மார்ச் 21ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 'சிறையில் இருந்தாலும் அவர் முதல்வராக தொடர்வார்' என ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது.
கெஜ்ரிவாலின் கைதைக் கண்டித்து, நேற்று டில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த கண்டன போராட்டம் ஒன்று நடந்தது. அதில், சிறையில் இருந்தபடியே கெஜ்ரிவால் எழுதிய கடிதம் ஒன்று கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
அதில், 'உங்களிடம் நான் ஓட்டு கேட்கவில்லை. 140 கோடி இந்தியர்களும் இணைந்து புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் உள்ளது, நமது நாடு. சிறையில் இருந்தாலும் எப்போதும் பாரத மாதாவை நினைத்துக் கொண்டிருக்கிறேன்" என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கெஜ்ரிவாலை, ஏப்ரல் 15 வரையில் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
'மீண்டும் கெஜ்ரிவாலை விசாரணைக்கு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை' என அமலாக்கத்துறை தெரிவித்ததன் அடிப்படையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 'சிறையில் இருந்தபடியே முதல்வராக கெஜ்ரிவால் தொடர்வாரா... அடுத்த முதல்வராக யார் பதவியேற்கப் போகிறார்கள்?' என்ற கேள்வி எழுந்துள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, கெஜ்ரிவாலுக்கு திகார் சிறையில் தனி அறை ஒன்று தயாராகி வருகிறது. நீதிமன்றக் காவலை நீட்டிக்கும் வரையில் அவர் சிறையிலேயே இருக்கப் போகிறார்.
முன்னதாக, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்வதற்கு முன்பே தனது முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டார். அதே பாணியை கெஜ்ரிவாலும் முன்னெடுப்பாரா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சிறையில் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டாலும், சிறைத்துறையின் கட்டுப்பாட்டை மீறி முதல்வராக அவரால் உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இல்லை. இதனால் முதல்வராக தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஆம் ஆத்மி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
இண்டியா கூட்டணியில் ஆம் ஆத்மி இணைந்தது, பா.ஜ.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. அவர் சிறையில் இருந்தால் தான் தேர்தல் களம் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கின்றனர். குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ராகுலுடன் இணைந்து கெஜ்ரிவால் பிரசாரம் செய்தால், தேர்தல் களத்தில் பா.ஜ.,வுக்கு பாதிப்பு ஏற்படும்.
இதனால் லோக்சபா தேர்தலில் கெஜ்ரிவால் பிரசாரம் செய்ய முடியாத அளவுக்கு அவரை முடக்கிவிட்டனர். அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கட்சித் தலைமை அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து