ஓட்டு கேட்டு வர வெட்கமாக இல்லை: நாகையில் இ.கம்யூ., நாம் தமிழர் மோதல்
நாகப்பட்டினத்தில் இ.கம்யூ., வேட்பாளருக்கும் நாம் தமிழர் வேட்பாளருக்கும் பிரசாரத்தின் இடையே நடந்த மோதல் காட்சிகள், இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
லோக்சபா தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் இ.கம்யூ., வேட்பாளராக வை.செல்வராஜும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கார்த்திகாவும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், இன்று இ.கம்யூ., வேட்பாளரும் நாம் தமிழர் வேட்பாளரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இ.கம்யூ., வேட்பாளரை நாம் தமிழர் வேட்பாளர் விமர்சித்துப் பேசியதால், அவரின் வாகனத்தை மறித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் மறித்து சத்தம் போட்டுள்ளனர். இதனைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து இ.கம்யூ., வேட்பாளரை கார்த்திகா விமர்சனம் செய்தார்.
அப்போது பேசிய அவர், "கம்யூ., கட்சியை சேர்ந்த ஒருவர் சிபிசிஎல் நிறுவனத்துக்கு ஏஜென்டாக செயல்பட்டார். இதுவரை 4 முறை எம்.பியாக இருந்த மா.செல்வராஜ் தொகுதிக்கு என்ன செய்தார். இந்த லட்சணத்தில் ஓட்டு கேட்டு வருகிறீர்கள். வெட்கமாக இல்லை.
கம்யூனிஸ்ட்டாக இருந்து கொண்டு அரசு நிர்வாகத்தைப் பிடித்துக் கொண்டு ஓட்டு கேட்கிறீர்கள். உங்க லட்சணம் என்னவென்று தெரியும். கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொண்டு கொள்ளையடிக்கிறீர்களே. இதையெல்லாம் வேறு எங்காவது வைத்துக் கொள்ள வேண்டும்" என கடுமையாக விமர்சித்தார்.
இதனை எதிர்த்து இ.கம்யூ., வேட்பாளர் வை.செல்வராஜ் பேசிய போதும் நாம் தமிழர் வேட்பாளர் தொடர்ந்து விமர்சித்துப் பேசியதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இ.கம்யூ., வேட்பாளர் தரப்பினர் அப்பகுதியில் இருந்து கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து