பா.ஜ., எதிர்க்கட்சிகளை ஒடுக்குகிறதா? அரவிந்த் கெஜ்ரிவால் கைது சரியா?
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமல்லாது, மதுபான கொள்கை ஊழல் வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் அனேக பிரமுகர்களையும் அமலாக்க துறை கைது செய்துள்ளது. ஜார்க்கண்ட் முதல்வராக இருந்தபோதே ஹேமந்த் சோரனை கைது செய்தது. தமிழகத்தில் செந்தில் பாலாஜி, தெலுங்கானா மேலவை உறுப்பினர் கவிதா ஆகியோரையும் அமலாக்க துறை கைது செய்துள்ளது. வருமான வரி ஏய்ப்புக்காக, காங்கிரசின் வங்கி கணக்குகளை வருமான வரி துறை முடக்கியுள்ளது.
இதே போல், பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சியினர் மீது சி.பி.ஐ., அமலாக்க துறை, வருமான வரி துறையை ஏவி, ஜனநாயகத்தின் குரல்வளையை, பா.ஜ., நசுக்குவதாக எதிர்க்கட்சிகள் அனைத்துமே குற்றம் சாட்டுகின்றன.
ஆனால், இம்மாதிரியான வழக்குகள் எவையுமே பா.ஜ., கட்சியினர் மீது போடப்படுவதில்லை. அதுமட்டுமல்ல, வழக்கில் சிக்கியவர் தன் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்துவிட்டால், அவர் புனிதராகிவிடுகிறார் என்பதும் குற்றச்சாட்டு.
இந்த குற்றச்சாட்டுகளை சற்றே தீவிரமாக ஆராய்வோம்.
பாரபட்சம்
பா.ஜ., மட்டுமல்ல, இந்தியாவில் எந்த மாநில, மத்திய அரசுமே தம் கட்சியினர் மீது ஊழல் வழக்குகளை போட்டதில்லை. சில நேரங்களில் எதிர்க்கட்சிகளோ அல்லது பாதிக்கப்பட்டவரோ நீதிமன்றங்களை நாடித்தான் பதவியில் இருப்போர் மீது வழக்கு தொடுக்கவேண்டி இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஆ.ராஜா, கனிமொழி மீதான கைது நடவடிக்கைகள் இப்படி நடந்தவையே.
எனவே பா.ஜ., பாரபட்சமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை விட்டுவிடலாம். அதில் ஒரு கட்சியும் விதிவிலக்கு அல்ல. அதனால், அமலாக்க துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க முகமைகளை பா.ஜ., தவறாக பயன்படுத்துகிறதா என்று மட்டும் பார்ப்போம். அதற்கு அந்த சட்ட அமலாக்க முகமைகளின் வரம்புகளை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
வரம்புகள்
மாநிலங்களில் அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்களை சி.பி.ஐ.,யால் நேரடியாக விசாரிக்க முடியாது. மாநில அரசு கேட்டுக்கொண்டால் அல்லது நீதிமன்றங்கள் ஆணை பிறப்பித்தால் மட்டுமே, வழக்கை சி.பி.ஐ., கையில் எடுக்க முடியும்.
மற்ற நேரங்களில் வழக்குகளை விசாரிப்பது மாநில காவல் துறையின் கீழ் வரும் லஞ்ச ஒழிப்பு துறையே. தி.மு.க., ஆட்சியில், லஞ்ச ஒழிப்பு துறை, அ.தி.மு.க.,வினர் மீது மட்டும் தான் வழக்குகளை பதிவு செய்கிறது என்பதை கவனிக்கவும்.
வருமான வரி துறை, வரி ஏய்ப்பு காரணத்துக்காக யாரை வேண்டுமானாலும் 'ரெய்டு' நடத்த முடியும். ஆனால், யாரையும் கைது செய்ய முடியாது. அவர்களுக்கு ஆதாரம் கிடைத்தால், வரி கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப முடியும். அதிகபட்சம் வங்கி கணக்கை முடக்க முடியும். அதற்குமேல் ஒன்றும் செய்ய முடியாது.
அமலாக்க துறையால், வருமான வரி துறை போல கூட, உங்கள் வீட்டுக்கு சும்மா 'ரெய்டு' வர முடியாது. மாநில லஞ்ச ஒழிப்பு துறை, வருமான வரி துறை போன்றவை அமலாக்க துறையை தொடர்புகொண்டு, ஒருவர் சட்டவிரோதமாக பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதற்கு தம்மிடம் உள்ளசான்றுகளை பகிர்ந்து கொண்டால் தான் அமலாக்க துறையால் நடவடிக்கை எடுக்க முடியும். அப்போதும் கூட அவர்கள் ரெய்டு, சம்மன் மற்றும் விசாரணை, அதற்காக கைது மட்டுமே செய்ய முடியும்.
ஒருவர் ஓடி ஒளிந்து கொண்டால், அந்த நபரை துரத்திச் சென்று பிடித்து சிறையில் அடைக்க கூட அமலாக்க துறையால் முடியாது. உதாரணம், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார். பல மாதங்களாக அவர் யாராலும் 'கண்டுபிடிக்க முடியாமல்' இருக்கிறார். அமலாக்க துறை அவருக்கு சம்மன் அனுப்பிவிட்டு அவர் வருவார், வருவார் என்று காத்திருக்கிறது.
செந்தில் பாலாஜியோ, ஹேமந்த் சோரனோ, அரவிந்த் கெஜ்ரிவாலோ பொறுப்பான பதவிகளில் இருப்பதால் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை. அப்படி அவர்கள் ஓடி இருந்தால் அசோக் குமாரை போல கைது ஆகியிருக்க மாட்டார்கள்.
ஆக, இந்த முகமைகள், நினைத்தால் குண்டர் சட்டத்தில் வழக்கு பதியும் போலீஸ் போல அல்ல. குற்றத்திற்கான முகாந்திரம் இருந்தால் தான் கைது செய்ய முடியும்.
கடுமையான சட்டம்
சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான சட்டங்கள் மிக கடுமையானவை. இந்த சட்டங்களை இயற்றியது காங்கிரஸ் அரசு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவற்றில் ஒருவர் கைதானால், பிணை கிடைப்பது மிகவும் கடினம். எனவேதான், 32வது முறையாக செந்தில் பாலாஜிக்கு பிணை மறுக்கப் பட்டு உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் பல நாட்கள் சிறையில் இருக்க வேண்டி இருக்கும். உச்ச நீதிமன்றம் வரை எந்த நீதிமன்றத்திற்கு சென்றாலும் திரும்பத் திரும்ப பிணை மறுக்கப்படும்.
பா.ஜ., அரசின்கீழ் இயங்கும் அமலாக்க துறை சொல்கிறது என்பதாலேயே, இந்த நீதிமன்றங்கள் பிணையை மறுப்பதில்லை. சட்டம் அப்படி மிக கடுமையாக இருக்கிறது. பா.ஜ., நிச்சயமாக அதை பயன்படுத்திக் கொள்கிறது. தன் அரசியல் எதிரிகள் மீது அமலாக்கதுறையை ஏவுகிறது. ஆனால் ஏவுவதற்கு ஏற்றார்போல், இவர்களும் இடம் கொடுக்கின்றனர்.
வழக்கு பொய்யா, ஆதாரங்கள் உள்ளனவா, சட்டத்துக்குப் புறம்பான பணப் பரிமாற்றம் நடந்ததா, இல்லையா என்பது வழக்கு நடக்கும்போது தான் தெரியவரும். ஆனால், அதுவரையில் பிணைபெறுவது எளிதல்ல என்பதுதான் சட்டம் சொல்வது.
நாளை ஒருவேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த கடுமையான சட்டங்களை தளர்த்துமா என்றால், நிச்சயமாக இல்லை. தங்கள் எதிரிகள் மீது இதே முகமைகளை ஏவ தயாராக இருப்பர். ஏற்கனவே காங்கிரஸ் மீதும் அதன் தோழமை கட்சிகள் மீதும் போடப்பட்டுள்ள வழக்குகள் தளர்த்தப்படலாம். பா.ஜ., மற்றும் தோழமை கட்சிகள் மீது புது வழக்குகள் போடப்படும்.
ஒரு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி, 'இம்மாதிரி மாறி மாறி வழக்குகள் தொடுப்பதை உண்மையில் வரவேற்கிறேன். அப்படியாவது ஒரு பாதி குற்றவாளிகள் மாட்டுகின்றனரே' என்று கருத்து சொன்னார்.
பரிந்துரை
நியாயத்தை கருத்தில் கொண்டு நான் சில மாற்றங்களை பரிந்துரைப்பேன். சட்டவிரோத பண பரிமாற்றம், லஞ்சம், ஊழல் போன்ற பொருளாதார குற்றங்களின் சில கடுமையான ஷரத்துகள் கட்டாயம் மாற்றப்பட வேண்டும்.
கொலை, கூட்டு வன்புணர்வு, தேச பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் எதிரான செயல்கள் போன்ற கடுமையான கிரிமினல் குற்றங்களை தவிர மற்றவற்றுக்கு விரைவில் பிணை தரவேண்டும். பொருளாதார குற்றங்களை செய்வோருக்கு, வழக்கு நடத்தி, தீர்ப்பு வந்தபின் தண்டனை கொடுத்தால் போதும்.
மற்றபடி, நாம் என்ன தான் சொன்னாலும் சி.பி.ஐ., அமலாக்க துறை போன்ற வற்றை சுதந்திரமான ஓர் அமைப்பின் கீழ் கொண்டு வருவதெல்லாம் இயலாத காரியம். குறைந்தபட்சம் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பாதி குற்றவாளிகளுக்காவது தண்டனை கொடுக்க முடிகிறதே, என்றுதான் நாம் சந்தோஷப்பட்டுக்கொள்ள முடியும்.
-பத்ரி சேஷாத்ரி, பதிப்பாளர்,கிழக்கு பதிப்பகம்
வாசகர் கருத்து