அப்பாவு கோபம் வேட்பாளர் சோகம்
திருநெல்வேலி காங்., வேட்பாளர் ராபர்ட் புரூசுக்கு ஆதரவாக, சபாநாயகர் அப்பாவுவின் ஆதரவாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கியிருப்பதால், அத்தொகுதிக்கு கூடுதல் பொறுப்பாளராக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை, முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார்.
திருநெல்வேலி லோக்சபா தொகுதியில், திருநெல்வேலி, ஆலங்குளம், பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. அ.தி.மு.க., சார்பில் ஹிந்து நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ஜான்சிராணி போட்டியிடுகிறார்.
தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக, கிறிஸ்துவ நாடாரான ராபர்ட் புரூஸ் போட்டியிடுகிறார். பா.ஜ., அணியில் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த, சட்டசபை பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் தாமதமாகவே அறிவிக்கப்பட்டார். அவருக்கு தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சபாநாயர் அப்பாவு ஆதரவாளர்கள் சரிவர ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறப்படுகிறது.
அப்பாவுவை சந்திக்க வைக்க, அவரது ஆதரவாளர்கள், ராபர்ட் புரூசை காத்திருக்க வைத்துள்ளனர். அப்பாவு ஒதுக்கிய நேரத்தில் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்திக்க ராபர்ட் புரூஸ் சென்று விட்டதால், அவரால் அப்பாவுவை சந்திக்க முடியவில்லை.
இந்த விவகாரம், அப்பாவுவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அப்பாவு மகன் அலெக்ஸ், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட 'சீட்' கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு சீட் தரப்படவில்லை. அதனாலும் அதிருப்தி அடைந்த அப்பாவுவின் ஆதரவாளர்கள், தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
இந்த தகவல் ராபர்ட் புரூஸ் தரப்பிலிருந்து, முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டதும், அத்தொகுதிக்கு பொறுப்பு அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணனை, முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார்.
மேலும், தமிழக அரசின் சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் ஆகியோரையும் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும்படி, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே துாத்துக்குடி தொகுதிக்கு பொறுப்பு அமைச்சராக பணியாற்றி வரும் அனிதா ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி தொகுதியை கூடுதல் பொறுப்பாக ஏற்று, தேர்தல் பணிகளை துவக்கி உள்ளார்.
வாசகர் கருத்து