தமிழகத்தில் பா.ஜ., அழிவு ஆரம்பமாகிவிட்டது: கோவை அ.தி.மு.க., வேட்பாளர் ஆவேசம்
"பா.ஜ.,வை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.,க்களை வெற்றி பெற வைத்தோம். அதுவரையில் நோட்டாவுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். சமூக வலைதளங்களில் மட்டும் இருந்தால் எந்த இயக்கமும் வளர முடியாது" என, கோவை அ.தி.மு.க., வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அ.தி.மு.க., வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் கூறியதாவது:
தேனியில் அண்ணாமலை பேசும்போது 'தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க., டி.டி.வி.தினகரன் பக்கம் போகும். அ.தி.மு.க.,வை அழித்துவிடுவேன்' என்கிறார். தோல்வி பயத்தில் அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கிறார்.
அ.தி.மு.க., கூட்டணிக்காக கடைசி வரைக்கும் பா.ஜ., கெஞ்சிக் கொண்டிருந்தது. மோடியின் முதல் கூட்டத்தில் பன்னீர்செல்வத்தையும் தினகரனையும் அழைக்காமல் அவமதித்தனர்.
'பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பல இடங்களில் உறுதியாக கூறிய பிறகு தான் அவர்கள் இருவரையும் அழைத்தனர். கடந்த 3 வருடங்களாகத் தான் அண்ணாமலை அரசியலில் இருக்கிறார். அதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா?
அவரை விட நிறைய படித்தவர்கள் இருக்கிறார்கள். அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை. கடந்த 50 ஆண்டுகளில் மக்களுக்கு எவ்வளவோ நல்ல திட்டங்களை அ.தி.மு.க., கொண்டு வந்துள்ளது. அதைப் பற்றி 100 விஷயங்களை எங்களால் சொல்ல முடியும்.
அண்ணாமலையின் பேச்சைக் கேட்டு பொதுமக்களே அதிருப்தியில் உள்ளனர். கோவையில் வெற்றி பெறுவதற்காக பொய்யாக பேசிக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.,வை அழிக்க நினைத்தவர்கள் எல்லாம் அழிந்து போனது தான் வரலாறு.
தேர்தலில் சொந்தப் பணத்தில் டீ குடித்துவிட்டு அ.தி.மு.க., தொண்டர்கள் வேலை பார்க்கிறார்கள். 'இங்கு அண்ணாமலை டெபாசிட் வாங்கக் கூடாது' என்பது தான் எங்கள் கட்சித் தொண்டர்களின் ஒரே இலக்காக இருக்கிறது.
மறைந்த அண்ணாவைப் பற்றியும் ஜெயலலிதாவை பற்றியும் அண்ணாமலை இழிவாக பேசினார். அரசியல் பக்குவமற்ற தலைவராக அண்ணாமலை இருக்கிறார். கடந்த 3 வருடங்களாக ஊடகங்கள் இவர் முகத்தைக் காட்டாமல் இவர் வெளியில் தெரிந்திருப்பாரா.
ஆனால், 'உப்பு போட்டு சாப்பிடுகிறீர்களா?' என ஊடகங்களைப் பார்த்து கேட்கிறார். அண்ணாமலையின் பேச்சுக்கான பதில் என்ன என்பது தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது தெரியும். இன்று முதல் தமிழகத்தில் பா.ஜ.,வின் அழிவு ஆரம்பமாகிவிட்டது.
அ.தி.மு..க,வின் ஒன்றரை கோடி தொண்டர்களும் பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் இருக்கிறார்கள். தமிழகத்தில் 40 தொகுதிகளில் பா.ஜ., கூட்டணி போட்டியிடுகிறது. ஆனால், கோவைக்கு மட்டும் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள்.
இந்தியாவில் 3650 நாள்கள் மோடி ஆட்சி செய்தார். கடந்த 3 வருடங்களில் 1100 நாள் தலைவராக அண்ணாமலை இருக்கிறார். இதுவரையில் கோவையின் வளர்ச்சிக்காக ஒரு துரும்பாவது கிள்ளிப் போட்டார்களா?
கரூரில் தோற்ற பிறகு அங்கு ஒரே ஒரு திட்டத்தையாவது அண்ணாமலை கொண்டு வந்தாரா. இங்கு தோற்ற பிறகு சென்னைக்குப் போய்விடுவார். கோவையில் விமான நிலைய விரிவாக்கம் என்பது 20 ஆண்டுகால பிரச்னை. நில விரிவாக்கத்துக்காக அதிக தொகையைக் கொடுத்து நிலத்தை ஒப்படைத்து 3 வருடங்கள் ஆகிவிட்டன.
இந்த 3 வருடங்களில் மோடி தானே பிரதமராக இருக்கிறார். தமிழக பா.ஜ., எதாவது செய்ததா. இவருக்கு மக்களுக்கு சேவை செய்வது நோக்கமல்ல. இந்த தேர்தலில் 400 சீட்டுகளை வாங்குவார்களா என மக்கள் சொல்லட்டும்.
கோவைக்கு எய்ம்ஸ் கொண்டு வரப் போவதாக சொல்கிறார். மதுரை எய்ம்ஸில் பத்தாயிரம் பேர் படிக்கிறார்களா. இவர் எம்.பி., ஆன பிறகு மோடியிடம் பேசி திட்டங்களை கொண்டு வருவேன் என்கிறார். ஏன் இப்போது பேச முடியாதா?
கோவையில் பம்ப், மோட்டார், கிரைண்டர், விசைத்தறி, பனியன் தொழில் என அனைத்து துறைகளும் ஜி.எஸ்.டி.,யால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு ஜி.எஸ்.டி.,யை குறைப்பதற்கு மோடியிடம் அண்ணாமலை பேசியிருக்கலாமே. நூல் விலையை கார்ப்பரேட் வசம் ஒப்படைத்துள்ளனர். அதன் விலையேற்றத்தால் தொழிலே முடங்கியுள்ளது.
'நான் 2 தகர டப்பாவுடன் வந்தவன்' என அண்ணாமலை சொல்கிறார். ஆனால், தேனியில் பிரசாரம் செய்வதற்காக ஹெலிகாப்டரில் சென்று திரும்புகிறார். இதற்கு ஏது பணம். ஹெலிகாப்டரில் சென்று வரும் ஒருவர் தேர்தலில் குறைவாக செலவு செய்வாரா. இந்தப் பணம் எங்கிருந்து வந்தது?
பொய் மேல் பொய் சொல்வதால் மெய் ஆகாது. 'கோவை வளரவே இல்லை' என்கிறார். இவர் கேபினட் அமைச்சரான பிறகு வளர்த்தெடுப்பாரா. கோவையின் வளர்ச்சிக்காக மத்தியில் இணை அமைச்சராக இருக்கும் எல்,.முருகன் என்ன செய்தார்?
கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் அ.தி.மு.க., கொண்டு வந்தது. மெட்ரோ, அத்திக்கடவு-அவினாசி திட்டம், பொள்ளாச்சி சாலை விரிவாக்கம் என ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தோம்.
உ.பி.,யில் பா.ஜ., அரசு தானே இருக்கிறது. அங்கு என்ன வளர்ச்சியை கொண்டு வந்தார்கள். அங்கு வசிப்பவர்கள் கோவைக்கு வந்து வேலை செய்கிறார்கள். வளர்ச்சி என்பதை வாயில் சொன்னால் வராது. 2 கோடிப் பேருக்கு வேலை தருவோம் என மோடி சொன்னார். இந்தியாவில் 42 சதவீத பேர் வேலையில்லாமல் உள்ளனர்.
இந்த தொகுதியில் வெற்றி பெறுவோமா என்பதில் தி.மு.க.,வுக்கும் பா.ஜ.,வுக்கும் பயம். அதனால் ஒருவர் ராகுல் காந்தியை கூட்டி வருகிறார். இவர் மோடியையும் நிர்மலா சீதாராமனையும் கூட்டி வருகிறார். இவர்களுக்கு களநிலவரம் தெரியவில்லை.
'கோவை தொகுதியில் போட்டியிட விருப்பமில்லை. மோடி சொன்னதால் நிற்கிறேன்' என அண்ணாமலை சொல்கிறார். ஒரு தொகுதியில் விருப்பமில்லாமல் போட்டியிடும் ஒருவரால் தொகுதிக்கு எப்படி நல்லது செய்ய முடியும்?
கடந்த சில நாள்களாக சில சமுதாயங்களின் தலைவர்கள் அண்ணாமலைக்காக வீடியோ வெளியிடுகிறார்கள். இதுவரையில் இப்படி வீடியோவை போட்டு பிரசாரம் நடந்ததில்லை. பா.ஜ., பயத்தில் இருக்கிறது. கோவை அமைதியான பூமி. இங்கு பிரிவினைவாதத்தை செய்ய வேண்டாம். அது அண்ணாமலையின் அரசியலுக்கே முற்றுப்புள்ளியாக மாறிவிடும்.
'தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட தர மாட்டேன்' எனக் கூறிய சி.டி.ரவியை அழைத்து வந்து கன்னடம் பேசும் மக்களிடம் கன்னடத்தில் பேசி வாக்கு சேகரிக்க வைக்கிறார். ஓட்டு வாங்குவதற்காக இப்படி சுயநலமாக செயல்படுவது சரியா?
அ.தி.மு.க.,வை ஊழல் கட்சி என அமித்ஷா சொல்கிறார். உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா. தேர்தல் பத்திரங்கள் மூலம் 6500 கோடி ரூபாயை பா.ஜ.,வும் 650 கோடி ரூபாயை தி.மு.க.,வும் வாங்கியுள்ளன. இந்தப் பணம் பரிமாறிய போதெல்லாம் ரெய்டு நடந்துள்ளது. ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு பா.ஜ.,வில் ஒருவருக்கும் தகுதியில்லை. பா.ஜ., வாங்கிய 6500 கோடிக்கு அண்ணாமலை பதில் சொல்லட்டும்.
அண்ணாமலையைப் போல இன்னொரு வெளியூர்க்காரராக டி.ஆர்.பி.ராஜா வந்திருக்கிறார். ஜி.எஸ்.டி., ஒருபுறம் என்றால் தி.மு.க., அரசின் பீக் ஹவர் மின்கட்டணத்தால் தொழில்களை நடத்துகிறவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
கடந்த 3 வருடங்களில் எத்தனையோ மனுக்களை டி.ஆர்.பி.ராஜாவிடம் தொழில் துறையினர் கொடுத்துவிட்டனர். ஏன் எதுவும் செய்யவில்லை. இதை சரிசெய்ய ஒரு நாள் போதுமே. தொழில் துறையினரின் கோரிக்கைக்கு ஸ்டாலினும் உதயநிதியும் டி.ஆர்.பி.ராஜாவும் செவிசாய்க்கவில்லை.
கோவையை நலிவடைய வைப்பதில் தி.மு.க.,வும் பா.ஜ.,வும் ஒன்று. இதைப் பற்றிப் பேசிவிடுவார்கள் என்ற பயத்தில் அண்ணாமலை உளறிக் கெண்டிருக்கிறார். அதை அறைக்குள் கதவை சாத்திக் கொண்டு பேசட்டும். டி.ஆர்.பி.ராஜாவால் முடிந்தால் பீக் ஹவர் மின்கட்டணத்தை சரிசெய்யட்டும்.
ஒருபுறம், 'அ.தி.மு.க.,வை ஒழிப்பேன்' என அண்ணாமலை பேசுகிறார். மறுபுறம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை மோடி புகழ்கிறார். தோல்வி பயத்தில் இவர்கள் மாறி மாறி பேசி வருகின்றனர்.
என்னை, 'தூசிக்கு கூட சமம் கிடையாது' என அண்ணாமலை பேசுகிறார். எந்தக் கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை நாங்கள் மதிப்போம். அனைவருக்கும் சமமான மரியாதையை கொடுக்க வேண்டும். அரவக்குறிச்சியில் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம், 'என்னை எப்படியாவது வெற்றி பெற வைத்துவிடுங்கள்'என அண்ணாமலை கெஞ்சும் போது, அ.தி.மு.க.,வை அழிக்க வேண்டும் என அப்போது அவருக்குத் தோன்றவில்லையா?
பா.ஜ.,வை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.,க்களை வெற்றி பெற வைத்தோம். அதுவரையில் நோட்டாவுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். சமூக வலைதளங்களில் மட்டும் இருந்தால் எந்த இயக்கமும் வளர முடியாது. நிறைகுடம் என்றைக்கும் தளும்பாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து