எம்.ஜி.ஆர்., சந்தித்த திருப்பூர் வழக்கு
எம்.ஜி.ஆர்., என்ற மூன்றெழுத்து மந்திரம்தான், இன்றும் தமிழக அரசியலை ஆட்டுவிக்கிறது.
தி.மு.க.,வில் இருந்து வெளியேற்றிய பின், முதல்வராகும் வரை அவர் சந்தித்த சோதனைகள் ஏராளம்.
அதிலும், திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பேசியதாக வழக்கு தொடுத்து அலைக்கழித்த வரலாறு இன்னும் மறைந்துவிடவில்லை. எம்.ஜி.ஆர்., மீது நடந்த ஒரே வழக்கும் அதுமட்டுமே.
திருப்பூரில், 1972ல் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற எம்.ஜி.ஆர்., தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சொத்து சேர்த்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.
அப்போதைய தி.மு.க., எம்.எல்.ஏ., துரைசாமியால், மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டது. விசாரணை தொடர்பாக, இருமுறை எம்.ஜி.ஆர்., திருப்பூருக்கு வந்து சென்றார்.
எம்.ஜி.ஆர்., வருகிறார் என்ற தகவல் பரவினால், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் சேர்ந்துவிடும். அபிமானிகள் வீடுகளில் தங்கிவிட்டு, மறுநாள் சென்னை திரும்புவார். இப்படி, அடிக்கடி எம்.ஜி.ஆர்., திருப்பூர் வந்து சென்றதால்தான், இன்றும் அ.தி.மு.க., வலுவான கட்டமைப்புடன் இயங்கி வருகிறது என்பது, மூத்த நிர்வாகிகளின் வாதம்.
அ.தி.மு.க., திருப்பூர் மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பழனிசாமி கூறியதாவது:
தலைவர் மீது, திருப்பூரில் மட்டுமே வழக்கு நடந்துள்ளது. அதற்காக, இரண்டு முறை திருப்பூர் வந்து சென்றார். 'எம்.எல்.ஏ., சொத்து சேர்த்ததாக பேசினாலும், யாருடைய பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை' என்று கூறி, வழக்கு தள்ளுபடியானது. அதற்கு பின், எம்.ஜி.ஆர்., மீது எந்தவொரு வழக்கும் நடக்கவே இல்லை.
என் திருமணம், லட்சுமி நகர், குலாலர் திருமண மண்டபத்தில், கடந்த, 1982 நவ., 28ல் நடந்தது. அப்போது முதல்வராக இருந்ததால், எம்.ஜி.ஆரை அழைத்தால் கூட்டமாக விடும்; செலவு செய்ய முடியாதென, திருமண அழைப்பிதழ் கூட முதல்வருக்கு அனுப்பவில்லை.
இருப்பினும், தகவல் தெரிந்து, அழைக்காமலேயே, என் திருமணத்துக்கு வந்து வாழ்த்தியதை நினைத்தால், தற்போதும் கண்ணீர் வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
காங்., சாம்ராஜ்யத்தை சாய்க்க, கொங்கு மண்டலம் முழுதும் தி.மு.க., நிர்வாகியாக எம்.ஜி.ஆர்., வலம் வந்தார். அ.தி.மு.க.,வை துவக்கிய பின்னரும், திருப்பூருக்கு 2வது குடிநீர் திட்டம் கொடுத்து, மக்களின் தாகத்தை தணித்தவர். திருப்பூரையும், எம்.ஜி.ஆரையும் என்றுமே பிரிக்கவே முடியாது என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
வாசகர் கருத்து