அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல்: 16ல் 15 புதுமுகங்களுக்கு வாய்ப்பு
லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட உள்ள 16 வேட்பாளர்களின் பெயர்களை பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏப்.,19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. தி.மு.க., தனது கூட்டணிக் கட்சிகளுக்கு 2019 லோக்சபா தேர்தல் பாணியில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது. அ.தி.மு.க., தரப்பிலோ, 'மெகா கூட்டணி அமைக்கப்படும்' எனக் கூறிவிட்டு, தே.மு,தி.க, பா.ம.க., ஆகிய கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சை நடத்தி வந்தது.
'இலை பக்கம் மாம்பழம் சாயும்' எனப் பேசப்பட்டு வந்த நிலையில், தாமரை பக்கம் தைலாபுரம் தோட்டம் சென்றுவிட்டதால், கடும் நெருக்கடிக்கு ஆளானார் பழனிசாமி. தே.மு.தி.க,, தரப்பில், 'ஒரு ராஜ்யசபா சீட் கட்டாயம் வேண்டும்' எனக் கோரிக்கை வைத்ததால், கூட்டணியில் இழுபறி நீடித்தது.
இதையடுத்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது, அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் ஆகியவை குறித்து விவாதித்தார்.
இந்நிலையில், லோக்சபா தேர்தலில் போட்டியிடக் கூடிய 16 வேட்பாளர்களின் பட்டியலை பழனிசாமி வெளியிட்டுள்ளார். இதில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, "மக்கள் மத்தியில் அ.தி.மு.க.,வுக்கு செல்வாக்கு கூடியுள்ளது. தே.மு.தி.க.,வுக்கு 5 இடங்களை ஒதுக்கியுள்ளோம். புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்கியுள்ளோம்" என்றார்.
அ.தி.மு.க.,வில் யார் யாருக்கு வாய்ப்பு?
வடசென்னை - ராயபுரம் மனோ தென்சென்னை - ஜெ.ஜெயவர்தன், காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர், அரக்கோணம் - ஏ.எல்.விஜயன், கிருஷ்ணகிரி - வி.ஜெயப்பிரகாஷ், ஆரணி - ஜி.வி.கஜேந்திரன், சேலம் - விக்னேஷ், தேனி - நாராயணசாமி, விழுப்புரம் (தனி) - ஜெ.பாக்யராஜ், நாமக்கல் - தனிமொழி, ஈரோடு - ஆற்றல் அசோக்குமார், கரூர் - கே.ஆர்.எல்.தங்கவேல், சிதம்பரம் (தனி) - சந்திரஹாசன், நாகப்பட்டினம் (தனி) - சுர்சுத் சங்கர், மதுரை - பி.சரவணன், ராமநாபுரம் - பா.ஜெயபெருமாள்
வாசகர் கருத்து