பா.ம.க.,வுக்கு 10 தொகுதிகள் : எங்கெல்லாம் போட்டியிட வாய்ப்பு?
பா.ஜ., கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், பா.ம.க., போட்டியிடக் கூடிய தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ஜ., - பா.ம.க., இடையே இன்று கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, பா.ம.க.,வுக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பா.ம.க., உடனான கூட்டணி ஒப்பந்தம் குறித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறுகையில், "டாக்டர் ராமதாஸ் யோசித்துக் கொண்டிருக்கும் பல விஷயங்களை நாடு முழுவதும் மோடி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். 2024 லோக்சபா தேர்தலில் மக்கள் வெற்றியை கொடுப்பார்கள் என்ற முழு நம்பிக்கையுடன் களமிறங்கியிருக்கிறோம்.
தமிழகத்தில் நேற்று இரவில் இருந்து அரசியல் மாறியிருக்கிறது. பா.ம.க.,வின் முடிவு, அரசியல் களத்தை மாற்றியிருக்கிறது" என்றார்.
பா.ம.க., போட்டியிடக் கூடிய தொகுதிகள் குறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
பத்து தொகுதிகளில் மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஆரணி, சிதம்பரம், விழுப்புரம், கடலூர் அல்லது கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், சேலம், தருமபுரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படலாம்.
சிதம்பரம், விழுப்புரம் என இரு தொகுதிகளிலும் பா.ம.க., போட்டியிடும் முடிவில் உள்ளது. அங்கு வி.சி., வேட்பாளர்களாக களமிறங்கும் திருமாவளவனையும் ரவிக்குமாரையும் தோற்கடிக்க வேண்டும் என்பதில் அக்கட்சி உறுதியாக இருக்கிறது.
இவற்றில் மத்திய சென்னை தவிர, மற்ற தொகுதிகள் அனைத்தும் பா.ம.க வலுவாக உள்ள தொகுதிகள். கடந்த லோக்சபா தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் பா.ம.க., சார்பாக தொழிலதிபர் சாம் பால் போட்டியிட்டார்.
மத்திய சென்னையில் பா.ம.க.,வுக்கு பெரிதாக செல்வாக்கு இல்லை என்றாலும் மீண்டும் சாம்பால் களமிறங்கலாம். இந்தமுற, மத்திய சென்னையில் பா-ஜ., சார்பில் வினோஜ் செல்வம் போட்டியிடுவதாக கூறப்பட்டது. பா.ம.க வருகைக்குப் பின், மத்திய சென்னை தொகுதியில் மாற்றம் வரலாம். ஓரிரு நாள்களில் முழு விவரங்களும் வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து