பா.ஜ., கூட்டணிக்கு மறுத்ததால் சின்னம் மறுப்பு: சீமான்
லோக்சபா தேர்தலில் மைக் சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. "பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க மறுத்ததால் கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டது" என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
'லோக்சபா தேர்தலில் போட்டியிட ஏதுவாக கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க வேண்டும்' என தேர்தல் கமிஷனில் நாம் தமிழர் கட்சி கடிதம் கொடுத்தது. ஆனால், தாமதமாக விண்ணப்பம் செய்ததால் கர்நாடகாவை சேர்ந்த பிரஜா ஐக்கியதா என்ற கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது.
இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படவில்லை. தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தும் சின்னம் கிடைக்கவில்லை.
தேர்தலுக்கான தேதி நெருங்கிக் கொண்டிருந்ததால், ஒலிவாங்கி (மைக்), படகு, பாய்மரப்படகு என பொது சின்னங்களில் ஒன்றை ஒதுக்குமாறு நாம் தமிழர் கட்சி கோரியது. இதில், மைக் சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியது.
ஆனால், 'இந்தச் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படும். எனவே, படகு அல்லது பாய்மரப் படகு சின்னத்தை ஒதுக்குங்கள்' என சீமான் கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம், மைக் சின்னத்திலேயே போட்டியிடுமாறு தெரிவித்தது. இதனால், மைக் சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலைக்கு நாம் தமிழர் கட்சி தள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து சீமான் கூறியதாவது:
சின்னம் விவசாயியாக இருப்பது பெரிதல்ல. உலகின அன்னமே விவசாயிகள் தான். முதலிலேயே சின்னம் கிடைத்திருந்தால் பாதி ஊர்களில் பிரசாரத்துக்காக நாளை முதல் பிரசாரத்தை துவங்க உள்ளேன். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று தான் கடைசி நாள்.
சின்னம் என்னவென்று தெரியாமல் போட்டியிட முடியாது. கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காவிட்டாலும் நம்பிக்கையோடு போட்டி போடுகிறோம். நாம் தமிழர் கட்சிக்கு 40 தொகுதிகளில் 40 சின்னங்களை கொடுப்பதுதான் அவர்களின் எண்ணம்.
ஒரு தனி மனிதனாக 7 சதவீத வாக்குகளை நான் பெற்றது தான் அவர்களுக்கு வியப்பைத் தருகிறது. என்னை பின்னுக்குத் தள்ளிவிட வேண்டும் என நினைத்தார்கள். பா.ஜ., உடன் கூட்டணி வைக்காததால் சின்னம் மறுக்கப்பட்டது.
இதற்கே இப்படி பயந்தால் இந்த தேர்தலில் நான் என்ன செய்யப் போகிறேன் எனப் பாருங்கள். மக்களை நம்பி தேர்தலில் போட்டியிடுகிறேன். பெரும் புரட்சியாளர்கள் தங்களின் முழக்கத்தை முன்வைத்த கருவி இது. இந்த தேர்தலில் ஒலிவாங்கி சின்னத்தில் நாம் தமிழர் போட்டியிடுகிறது. ஜூன் 4ம் தேதி என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.
இவ்வாறு சீமான் கூறினார்.
வாசகர் கருத்து