வாய்ப்பு, வசதி இருந்தும் தபால் ஓட்டில் ஆர்வம் இல்லை
லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் பணியில் ஈடுபடுவோர், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், கொரோனா பாதிப்பு அறிகுறி உள்ளோர், பத்திரிகையாளர்கள் என பலரும் தபால் ஓட்டு மூலம், தங்கள் ஓட்டை பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் பெரும்பாலோர் ஏனோ ஆர்வம் காட்டவில்லை.
ஈரோடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதிகளில், 85 வயதுக்கு மேற்பட்டோர், 21,805 பேர், மாற்றுத்திறனாளிகள், 9,824 பேர் உள்ளனர். தபால் ஓட்டுப்பதிவு செய்து கொள்ள, 'படிவம் - 12டி' மூலம் அவர்களது விருப்பத்தை கடந்த, 15 நாட்களுக்கு முன் பெற்றனர். 85 வயதுக்கு மேற்பட்டோரில், 2,201 முதியோர், 800 மாற்றுத்திறனாளிகள் மட்டுமே விருப்ப படிவம் வழங்கினர்.
கடந்த, 4 முதல், 6ம் தேதி வரை, 46 குழு அதிகாரிகள், இந்த வாக்காளர்களுக்கு போன் செய்து, வீடு தேடிச் சென்று ஓட்டை பதிவு செய்து பெட்டி யில் பெற்றனர். அப்போது விடுபட் டோருக்கு, 8ல் மீண்டும் வாய்ப்பு தரப் பட்டும், 3,001ல், 2,866 ஓட்டு மட்டுமே பதிவானது. விருப்ப படிவம் வழங்கிய, 135 பேர் ஓட்டு போடவில்லை.
அதுபோல, ஈரோடு மாவட்ட தேர்தல் பணியில், 10,970 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட பல துறையினர் பணி செய்கின்றனர். தங்கள் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடியில் பணி செய்தால், அங்கேயே தங்கள் ஓட்டை பதிவு செய்ய, படிவம் பெறலாம். பிற தொகுதியில் பணி செய்வோர் தபால் ஓட்டளிக்கலாம்.
இதில், 4,000த்துக்கும் குறைவானவர்களே, தாங்கள் பணி செய்யும் இடத்திலேயே ஓட்டுப்பதிவு செய்து கொள்ள படிவம் பெற்றனர். 1,468 பேர் மட்டுமே தபால் ஓட்டை, பயிற்சி நாளில் பதிவு செய்துள்ளனர். ஓட்டு எண்ணிக்கை நடக்கும் அன்று காலை, 8:00 மணி வரை கூட, இவர்களது ஓட்டு அதற்கான ஓட்டுப்பெட்டியில் போட முடியும்.
இருப்பினும், பெரும்பாலானோர், படிவங்களைக்கூட பெறவில்லை. தங்கள் துறை தலைமையிடம் கையெழுத்து பெற்று ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும். அதற்கான கையெழுத்தும் பெறவில்லை. இதே நிலைதான் மாநில அளவில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது.
கிராமங்களிலும், அறியாத மக்களிடமும், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் தேர்தல் கமிஷன், இதுபோன்று, தேர்தலுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவர்கள், முன் மாதிரியானவர்களிடம், 100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வாசகர் கருத்து