தி.மு.க., வேட்பாளர்களுக்கு நடிகர் வடிவேலு பிரசாரம்?
லோக்பா தேர்தலில் தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள, நடிகர் வடிவேலுவை தமிழகம் முழுதும் அனுப்பி வைக்க தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டின் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பிரசாரம் மேற்கொண்டார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை எதிர்த்து தீவிரமாக பிரசாரம் செய்தார். ஆனால், தேர்தல் முடிவில் தி.மு.க., தோல்வி அடைந்தது. அதன் பின், 10 ஆண்டு காலமாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார்; அரசியலிலும் தலைகாட்டாமல் ஒதுங்கி இருந்தார்.
தற்போது, தி.மு.க., ஆட்சியில் மீண்டும் அரசியல் ஆசை அவருக்கு துளிர் விட்டது. மாமன்னன் படத்தில் அமைச்சர் உதயநிதியுடன் நடித்து, அவருக்கு நெருக்கமான நண்பராக மாறினார்.
தி.மு.க.,வுடன் அவரது உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு சென்று சுற்றி பார்த்த அவர், இது சமாதி அல்ல; சன்னிதி என புகழாரம் சூட்டினார். தன்னை கருணாநிதியின் தீவிர அபிமானி என்றார்.
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த அவரது வரலாற்று புகைப்பட கண்காட்சியை வடிவேலு பார்வையிட்டார். சென்னையில் நடந்த விழா மேடையில் பங்கேற்று பேசினார்.
தி.மு.க.,வில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு பெரிய அளவில் நட்சத்திர பட்டாளங்கள் இல்லை. அ.தி.மு.க.,வில் நட்சத்திர பட்டாளங்கள் அதிகம்.
எனவே, தி.மு.க.,விலும் நட்சத்திர பட்டாளங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என, அமைச்சர் உதயநிதி விரும்புகிறார்.
பா.ஜ.,வுக்கு ஆதரவாக இந்த தேர்தலில் நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா களம் இறங்குகின்றனர். அ.தி.மு.க.,வில் கவுதமி, காயத்ரி ரகுராம் ஆகியோர் பிரசார பீரங்கியாக வலம் வரவுள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் பதிலடி தரும் வகையில், தி.மு.க., சார்பில் வடிவேலுவை பிரசாரம் மேற்கொள்ள வைக்க, அக்கட்சியின் தலைமை திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
வாசகர் கருத்து