அனுபவம் இல்லாத வீடியோகிராபர்கள்: குளறுபடிக்கு வாய்ப்பு என குற்றச்சாட்டு
'தேர்தல் பறக்கும் படையில், சொற்ப சம்பளத்திற்கு, அனுபவம் இல்லாத வீடியோகிராபர்கள் பயன்படுத்தப்படுவதால், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யும்போது, குளறுபடி ஏற்படலாம்' என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, சட்டசபை தொகுதிவாரியாக, தலா மூன்று பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, வாகன சோதனை நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு பறக்கும் படையிலும், தாசில்தார் அந்தஸ்து அதிகாரி, இரண்டு காவலர்கள், ஒரு வீடியோகிராபர் இருப்பர். வாகன சோதனையின்போது, 50,000 ரூபாய்க்கு அதிகமான தொகை எடுத்து சென்றாலோ, ஆவணங்கள் இன்றி அதிக அளவில் பரிசுப் பொருட்கள் எடுத்து சென்றாலோ, அவற்றை பறிமுதல் செய்வர்.
இப்பணியை, பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றிருக்கும் வீடியோகிராபர், வீடியோ கேமராவில் பதிவு செய்வார். அந்த வீடியோ பதிவு, தேர்தலுக்குப் பின்பும் முக்கிய ஆதாரமாக இருக்கும்.
பறக்கும் படை வீடியோகிராபர் பணிக்கு, மாவட்ட அளவில், மொத்தமாக தனி நபர் ஒப்பந்தம் எடுத்து, அவர் வழியே ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். ஒப்பந்தம் எடுக்கும் நபர், வீடியோ மற்றும் புகைப்படத் துறையில் அனுபவம் இல்லாத இளைஞர்கள் மற்றும் வெளிமாவட்ட ஆட்களை, குறைந்த சம்பளத்திற்கு பணியமர்த்துகின்றனர்.
வீடியோகிராபர்களுக்கு, தினசரி 500 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆவணங்கள் பறிமுதல் நடவடிக்கையின் போது, அனுபவம் இல்லாத நபர்களால் வெறும் வீடியோ மட்டுமே எடுக்க முடியும்.
மாறாக, அவற்றை காட்சிப்படுத்தும் விதம், முக்கிய அதிகாரிகள் இடம் பெற்றிருக்க வேண்டிய கோணம், பறிமுதல் பொருட்களை பெரிதுபடுத்திக் காட்டும் தன்மை போன்றவை தெரிவதில்லை. விசாரித்து பார்த்தால், இப்பணியில் இடம்பெற்றிருக்கும் பலருக்கும், கேமராவை, ஆன் மற்றும் ஆப் செய்வது மட்டுமே தெரிந்துள்ளது என, சென்னை வீடியோகிராபர் மற்றும் போட்டோகிராபர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில், ''மாவட்ட அளவில் டெண்டர் விடப்பட்டு, மாவட்ட தேர்தல் அலுவலரால், வீடியோகிராபர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், இதுவரை நீங்கள் கூறுவது போன்ற குற்றச்சாட்டு எதுவும் வரவில்லை,'' என்றார்.
சென்னை வீடியோ கிராபர் மற்றும் போட்டோ கிராபர் அசோசியேஷன் வட சென்னை மாவட்ட துணைத் தலைவர் எ. கவுஸ்பாஷா கூறியதாவது: தேர்தல் பறக்கும் படையில் இடம்பெறும் வீடியோகிராபர்கள், தொழிலுக்கு சம்பந்தம் இல்லாத நபர்களாக உள்ளனர். அவர்கள் கேமரா பயன்படுத்தும் விதம் முறையாக இல்லை. ஒப்பந்தம் எடுப்பவர்களும், சரியான நபர்களை பணி அமர்த்துவதில்லை. ஆவணங்கள் கைப்பற்றப்படும்போது, முக்கிய ஆதாரமாக வீடியோ இருக்கும். ஆனால், அனுபவமில்லாத நபர்களால், அதில் கோட்டை விட வாய்ப்புள்ளது.
சென்னை வீடியோ கிராபர் மற்றும் போட்டோகிராபர் அசோசியேஷன் வட சென்னை இணை செயலர் ஏ. பெரோஸ்கான் கூறியதாவது: எங்கள் சங்கத்தில், 6,000 க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். அனைவருமே தகுதி வாய்ந்தவர்கள் தான். எங்களுக்கு, தேர்தல் பறக்கும் படையில், வீடியோகிராபர் பணிக்கு, ஒப்பந்தம் வழியே ஆள் எடுப்பது குறித்து, எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தெரிந்து போய் கேட்டாலும், ஜி.எஸ்.டி., கட்ட வேண்டும் என்பது போன்ற காரணங்களை காட்டி தட்டிக் கழிக்கின்றனர்.
வாசகர் கருத்து