சொந்த கட்சியே எதிர்த்தும் சுப்பராயனுக்கு வாய்ப்பு: நாகையில் சிட்டிங் எம்.பி.. மாற்றம் ஏன்?
இ.கம்யூ., சார்பில் நாகப்பட்டினம் மற்றும் திருப்பூரில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நாகையில் வை.செல்வராஜும் திருப்பூரில் கே.சுப்பராயனும் போட்டியிட உள்ளனர்.
லோக்சபா தேர்தலில் இ.கம்யூ கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கீடு செய்தது. இதில், திருப்பூரில் மீண்டும் சுப்பராயனே போட்டியிடுவதற்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்தது.
இ.கம்யூ., கட்சி விதிகளின் படி, இரண்டு முறைக்கு மேல் ஒரு நிர்வாகி தேர்தலில் போட்டியிடக்கூடாது; 70 வயதுக்கு மேற்பட்டவர், மற்றவர்களுக்காக வழிவிட்டு கட்சி பொறுப்பிலும் இருக்கக்கூடாது.
ஆனால், இந்த விதிகளை எல்லாம் மீறி சுப்பராயன், வேட்பாளராக நிற்க ஆர்வம் காட்டுவதால், ஈரோடு வடக்கு மாவட்ட குழுக் கூட்டமும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
அதனால், ஈரோடு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பாப்பா மோகன், ஸ்டாலின் குணசேகரன், மாநில துணை செயலர் பெரியசாமி, சிட்டிங் எம்.பி., சுப்பராயன் ஆகியோரை மாவட்ட குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் பரவியுள்ளது.
தற்போது, திருப்பூரில் வேட்பாளராக கே.சுப்பராயன் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் சிட்டிங் எம்.பி.,யாக இருக்கும் என்.செல்வராஜின் பெயர் பரிசீலனையில் இருந்தாலும், உடல்நலக் குறைவு காரணமாக அவர் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறைவு என கூறப்பட்டது.
நாகை தொகுதிக்கு மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ், என்.செல்வராஜ், மாநில குழு உறுப்பினர் லெனின் தட்சிணாமூர்த்தி ஆகியோரின் பெயர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், வை.செல்வராஜை வேட்பாளராக இ.கம்யூ., அறிவித்துள்ளது.
வாசகர் கருத்து