ஜி.கே.வாசனே மறந்த சைக்கிள் சின்னம் கிடைக்கிறது, ஆனால்? : திருமா ஆதங்கம்
"தமிழகத்தில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லை. இதனைப் பயன்படுத்தி நுழைந்துவிடலாம் என அண்ணாமலை நினைக்கிறார்" என, வி.சி., தலைவர் திருமாவளவன் பேசினார்..
விழுப்புரத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:
லோக்சபா தேர்தல், நாட்டு மக்களுக்கும் பா.ஜ.,வுக்கும் இடையே நடக்கும் விடுதலைப் போர். இந்த போராட்டத்துக்கு துவக்கப் புள்ளி வைத்தவர், ஸ்டாலின்.
நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக கட்சிகளையும் திரட்டி இண்டியா என்ற கூட்டணியை உருவாக்கியவர், முதல்வர் ஸ்டாலின். தமிழகத்தில் அ.தி.மு.க.,வை எதிர்த்து அரசியல் செய்தால் போதும்.
இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.,வை எதிரியாக பார்க்கவில்லை. மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் மோடி மற்றும் அமித்ஷாவின் கூட்டாளிகளான அதானி, அம்பானி மட்டும் தான் பயனைடந்துள்ளனர்.
இவர்கள் ஆட்சி செய்வது எளிய மக்களுக்காக அல்ல, கொள்ளையடிக்கும் ஆட்சியாகத் தான் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும், நாட்டை கார்ப்ரேட் கும்பலிடம் இருந்து காக்கும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.
பா.ஜ.,வை எதிர்க்கிறோம் என்பதற்காக எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சிறையில் அடைக்கின்றனர். பா.ஜ., வுடன் கூட்டணியில் இருக்கும் டி.டி.வி தினகரனுக்கு விண்ணப்பித்த 3 மணிநேரத்தில் குக்கர் சின்னம் வழங்கப்பட்டது. ஜி.கே.வாசனுக்கே மறந்து போன சைக்கிள் சின்னமும் கிடைக்கிறது.
ஆனால், ம.தி.மு.க.,வுக்கும், வி.சி.,க்கும் சின்னம் தராமல் இழுத்தடிக்கின்றனர். தேர்தல் கமிஷன் சின்னம் தர மறுத்தாலும் பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து