திருமாவளவன் செய்த 3 தவறுகள்: பானைக்கு ஏன் இவ்வளவு போராட்டம்?
லோக்சபா தேர்தலில் வி.சி.,க்கு பானை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. "சின்னத்தை ஒதுக்குவதில் சிரமம் ஏற்பட்டிருக்காது. வி.சி.,யின் அலட்சியம் தான் இவ்வளவு குளறுபடிகளுக்கும் காரணம்" என்கின்றனர், அக்கட்சி வட்டாரத்தில்.
தி.மு.க., கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் வி.சி., போட்டியிடுகிறது. கடந்த தேர்தல்களில் ஒதுக்கியது போல, இந்த தேர்தலிலும் பானை சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் கமிஷனில் வி.சி., மனு கொடுத்தது.
இந்த மனு நிராகரிக்கப்பட்டதால், டெல்லி உயர் நீதிமன்றத்தை வி.சி., அணுகியது. அங்கு தேர்தல் கமிஷன் முன்வைத்த வாதத்தில், 'கடந்த 2 பொதுத்தேர்தல்களில் குறைந்தபட்சம் 1 சதவீத வாக்குகளைக் கூட பெறாத காரணத்தால் பொதுச் சின்னத்துக்கான கோரிக்கையை பரிசீலிக்க இயலவில்லை' என்று கூறியது.
"வி.சி.,யின் கோரிக்கை மீது தேர்தல் கமிஷன் முடிவெடுக்க வேண்டும்" என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பானை சின்னத்தை ஒதுக்க இயலாது என தேர்தல் கமிஷன் தெரிவித்தது.
இதனால், பானை சின்னம் கிடைக்குமா என்ற சந்தேகம் வி.சி., நிர்வாகிகள் மத்தியில் எழுந்தது. பானை சின்னம் நமது உரிமை என திருமாவளவன் உறுதி கொடுத்ததால், தேர்தல் பிரசாரத்தில் அக்கட்சி தீவிரம் காட்டியது.
இந்நிலையில், வி.சி.,க்கு பானை சின்னத்தை ஒதுக்கி சிதம்பரம் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்னா உத்தரவிட்டார். விழுப்புரம் தொகுதியிலும் அக்கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
"தேர்தல் கமிஷன் உறுதியாக தெரிவித்த பிறகும், வி.சி.,யின் கைகளுக்கு பானை வந்தது எப்படி?" என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து வி.சி., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
'பானை சின்னத்தை ஒதுக்க முடியாது' என தேர்தல் கமிஷன் கூறவில்லை. அது, 3 விஷயங்களை சுட்டிக் காட்டியது. ஒன்று, 'கடந்தகால தேர்தல் கணக்கு வழக்குகளை முறையாக ஒப்படைக்கவில்லை.
அடுத்து, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிக்கான வரவு செலவு கணக்குகளை முறையாக தாக்கல் செய்யவில்லை. மூன்றாவது, சின்னம் கோரி ஒதுக்கப்பட்ட மனுவில் அதிகாரபூர்வ பொறுப்பாளரின் கையொப்பம் இல்லை' எனக் கூறி மனுவை நிராகரித்தது.
தவிர, சின்னம் கோரி மனு கொடுத்தபோது, வி.சி.,யின் பழைய அலுவலகமான தி.நகர், சின்னையா தெருவின் முகவரியை கொடுத்துள்ளனர். தற்போது கே.கே.நகரில் ஓர் அலுவலகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், மனுவில் பழைய முகவரியே உள்ளது. அந்தவகையில், அனைத்து விஷயங்களிலும் வி.சி., அலட்சியமாக இருப்பதாக தேர்தல் கமிஷன் கருதியது.
இதற்கிடையில், கட்சியில் புதிதாக இணைந்த ஒருவர், 'எனக்கு மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களை நன்றாக தெரியும். நான் பார்த்துக் கொள்கிறேன்' என்றார். அதை திருமாவளவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அதேநேரம், '2 தொகுதிகளில் நின்றால் கேட்கும் சின்னத்தைக் கொடுக்கலாம்' என்ற விதி இருக்கிறது. இதனால் எளிதில் சின்னத்தைப் பெற்றுவிடலாம் என திருமாவளவன் நம்பினார்.
தவிர, சுயேட்சை வேட்பாளராக பானை சின்னத்தைக் கேட்டாலும் கிடைத்துவிடும். 'வி.சி.,யை தவிர வேறு சுயேட்சை யாராவது பானை சின்னத்தைக் கேட்டாலும் அவரை சரிசெய்துவிடலாம்' என்ற பேச்சும் எழுந்தது.
அதனால் தான், 'பானை இல்லை என யாரும் பதற்றப்பட வேண்டாம்' என, திருமாவளவன் கூறினார். நாங்கள் எதிர்பார்த்ததுபோலவே, பானை சின்னம் கைக்கு வந்தது.
இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.
வாசகர் கருத்து