ஓ.பி.எஸ்., பெயரில் 5 பேர் போட்டி: பின்னணியை சொல்லும் ரவீந்திரநாத்
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் வேறு சிலர் போட்டியிடுவது குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் சிட்டிங் எம்.பி.யுமான ரவீந்திரநாத் விளக்கம் அளித்துள்ளார்.
தேனியில் செய்தியாளர்களிடம் ரவீந்திரநாத் கூறியதாவது:
தேனி தொகுதியில் 2 ஆண்டுகள் கொரோனா தாக்கத்தால் பணிகளை செய்ய முடியவில்லை. 3 ஆண்டுகளில் 850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகளை செய்துள்ளேன்.
காங்கிரஸ் ஆட்சியில் மதுரை-போடி அகல ரயில் பாதை திட்டப்பணி நடைபெறாமல் இருந்தது. இதனை சரிசெய்ய 403 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்று நிறைவேற்றினேன். தற்போது ரயில் போக்குவரத்து துவங்கியுள்ளது. இதனால் ரயில்வே துறைக்கு 2 கோடி ரூபாய் வரையில் லாபம் கிடைத்து வருகிறது.
இதுபோன்ற பல்வேறு திட்டங்களை மத்திய அரசின் வாயிலாக நிறைவேற்றியுள்ளேன். தற்போது அ.தி.மு.க.,வை மீட்டெடுக்க தேனி தொகுதியை தினகரனுக்கு நன்றிக்கடனாக கொடுத்துள்ளோம். ராமநாதபுரத்தில் போட்டியிடும் பன்னீர்செல்வமும் தினகரனும் அ.தி.மு.க.,வை மீட்டெடுப்பார்கள்.
அ.தி.மு.க.,வை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் டி.டி.வி.தினகரன் இருக்கிறார். இருவரும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் உறதியாக கட்சியை காப்பாற்றுவார்கள்.
மதுரை மாவட்ட அ.தி.மு.க., ஐ.டி.விங் அணியை சேர்ந்த சிங்கராஜ் என்பவர், ஒ.பன்னீர்செல்வம் என்று பெயர் வைத்த நபரை உசிலம்பட்டியில் இருந்து ராமநாதபுரத்தில் போட்டியிட அழைத்துச் சென்றுள்ளார். பழனிசாமி தரப்பினர் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து