பா.ம.க., கொடி, சின்னம் இல்லை: நிர்வாகிகளுக்கு 'டோஸ்'
தர்மபுரி லோக்சபா தொகுதி, பா.ம.க., வேட்பாளர் சவுமியா, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதியில் நேற்று காலை, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு அதிகாரப்பட்டி நோக்கி புறப்பட்ட அவர், தர்மபுரி, பா.ம.க., கிழக்கு மாவட்ட செயலர் அரசாங்கத்தை மொபைல் மூலம் தொடர்பு கொண்டு, 'பா.ம.க., கட்சி கொடிகளை தவிர, கூட்டணி கட்சி கொடிகள் அதிகளவில் உள்ளன.
'மக்கள் பார்வையில் படும்படி, பா.ம.க.,வின் சின்னமான மாம்பழம் வரையப்படவில்லை. கூட்டமும் குறைவாக உள்ளது. நிர்வாகிகளுக்கு சரிவர தகவல் கொடுக்கப்பட்டதா, இல்லையா' என கேள்வி மேல் கேள்வி கேட்டு, 'டோஸ்' விட்டார்.
பா.ம.க., நிர்வாகிகள் கூறியதாவது:
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், வன்னியர் சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியான பூதநத்தம், மெனசி, மருக்காலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், பா.ம.க.,வினர் குறைந்தளவே கூடினர். பா.ம.க.,வில் கோஷ்டி பூசலால் நிர்வாகிகளுக்கு, வேட்பாளர் சவுமியா வருகை குறித்து, முறையாக தகவல் தெரிவிக்கவில்லை.
இதனால், புதுப்பட்டி, இருளப்பட்டி, சாமியாபுரம் கூட்ரோடு, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவு கட்சியினர் வரவில்லை. இதையறிந்து சவுமியா, மாவட்ட செயலரை மொபைலில் அழைத்து டோஸ் விட்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து