கருணாநிதி இருந்திருந்தால்... : அன்புமணி ஆதங்கம்
"ஸ்டாலினை சுற்றி 4 அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் வியாபாரிகளாக உள்ளனர். அவர்களுக்கு சமூகநீதியைப் பற்றி என்ன தெரியும்?" என, பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
அரக்கோணத்தில் பா.ம.க., வேட்பாளர் கே.பாலுவை ஆதரித்து அன்புமணி பேசியதாவது:
தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் இனி தமிழகத்துக்கு வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம். இவர்கள் காலாவதியான கட்சிகள். இந்த தேர்தலில் போடப்படும் அடித்தளம் என்பது, அடுத்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., அல்லாத ஓர் கூட்டணி அரசு அமைய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
இது தமிழக பெண்களின் விருப்பமாக உள்ளது. 'இந்தக் கட்சிகள் எல்லாம் அகன்று புதிய ஆட்சி வராதா?' என மக்கள் காத்துக் கொண்டுள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன் வேட்பாளர் யார்... நேர்மையானவரா... தொகுதிக்கு எதாவது செய்வாரா என மக்கள் நினைத்தனர்.
ஆனால், இப்போதெல்லாம் வேட்பாளர்களைப் பார்க்காமல் சின்னத்தையும், எவ்வளவு கொடுப்பார்கள் என்று மட்டுமே பார்க்கிறார்கள். இதற்குக் காரணம், இந்த இரண்டு கட்சிகளும் தான். இவர்களால் தமிழகத்துக்கு எந்த புதுமையான திட்டங்களையும் கொடுக்க முடியாது.
'பா.ஜ., உடன் பா.ம.க எப்படி கூட்டணி சேர்ந்தது?' என ஸ்டாலின் கேட்கிறார். நாங்கள் திடீரென்று இந்தக் கூட்டணியில் சேரவில்லை. 1999ல் வாஜ்பாய் அரசில் கூட்டணியில் இருந்தோம். அதே கூட்டணியில் தானே ஸ்டாலினும் இருந்தார். அதை மறந்துவிட்டு எங்களை கேள்வி கேட்கிறார்.
2014, 2019 லோக்சபா தேர்தல்கள், 2021 சட்டசபை தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் எனத் தொடர்ந்து பா.ஜ., கூட்டணியில் இருக்கிறோம். எந்த அணியில் இருந்தாலும் சமூக நீதியை ஒரு துளியும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. சமூக நீதி என்றால் என்னவென்று ஸ்டாலினுக்கு தெரியாது.
ஆனால், கருணாநிதிக்கு சமூக நீதியைப் பற்றி தெரியும், அவர் இருந்திருந்தால் இன்றைக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வந்திருக்கும். ஸ்டாலினை சுற்றி 4 அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் வியாபாரிகளாக உள்ளனர். அவர்கள் சொல்வதைத் தான் ஸ்டாலின் கேட்கிறார். அவர்களுக்கு சமூகநீதியைப் பற்றி என்ன தெரியும்?
2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., உடன் கூட்டணிக்கு வர மாட்டோம் என்றதும், தேர்தல் தேதி அறிவிக்கின்ற சில மணிநேரங்களில் அதாவது 12 மணியளவில் ஜி.கே.மணியிடம் பழனிசாமி ஒரு பட்டியல் கொடுத்தார்.
'இவ்வளவு தொகுதிகளைக் கொடுக்கிறோம். இதில் கையெழுத்து போட்டால் சட்டம் கொண்டு வருகிறோம்' என்றார். எவ்வளவு பெரிய அநீதி இது. கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாவிட்டால் சட்டம் கொண்டு வர மாட்டோம் என்றார்.
அதற்கு மருத்துவர் ராமதாஸ், ' வெற்று பேப்பரில் கையெழுத்து போடுகிறேன். எங்களுக்கு சீட் வேண்டாம். இடஒதுக்கீடு போதும்' என்றார். உள்ஒதுக்கீட்டை ஐகோர்ட் ரத்து செய்த பிறகு இதுவரைக்கும் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என பழனிசாமி பேசவில்லை.
பழனிசாமியை சார்ந்து இதே சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் உள்ளனர். அவர்களும் இதுவரை பேசவில்லை. உச்ச நீதிமன்றமும், 'வன்னியர் உள்ஒதுக்கீடு கொடுப்பதில் தடையில்லை. உரிய தரவுகளோடு கொடுங்கள்' என்றது.
இதற்காக முதல்வர் ஸ்டாலினை பலமுறை பார்த்துவிட்டோம். எவ்வளவு முறை பேசியும் ஸ்டாலினுக்கு சட்டம் கொண்டு வர மனதில்லை. இந்த தொகுதியின் அமைச்சராக இருக்கும் துரைமுருகன் மனது வைத்திருந்தால், ஸ்டாலினிடம் கேட்டிருக்கலாம்.
தி.மு.க.,வில் செல்வாக்கு படைத்தவராக ஜெகத்ரட்சகன் இருக்கிறார். அவர் ஒருமுறையாவது ஸ்டாலினிடம் பேசியிருக்கலாம். இது சாதி பிரச்னை அல்ல. சமூக நீதி பிரச்னை.
இவ்வாறு அன்புமணி பேசினார்.
வாசகர் கருத்து