ஆம் ஆத்மியை அழிக்க சதி நடக்கிறது: கோர்ட்டில் சீறிய கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி கட்சியை அழிப்பதற்கு அமலாக்கத்துறை மூலம் சதி நடப்பதாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சுமத்தினார்.
டில்லியில் புது மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, மதுவை விற்பதற்கான உரிமம் பெற்றவர்களுக்கு 144 கோடி ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் விதிகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் 30 கோடி ரூபாய் டெபாசிட் பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து, மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு தலைமைச் செயலரிடம் டில்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா கேட்டுக் கொண்டார். இது தொடர்பான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் டில்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து, தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தாக எழுந்த புகாரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், ஒருமுறை கூட அவர் நேரில் ஆஜராகவில்லை.
அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். கெஜ்ரிவாலின் இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கெஜ்ரிவாலிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், 7 நாள் அவகாசம் கோரி டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கோரியது.
அதில், 'செல்போன் மற்றும் லேப்டாப்களின் பாஸ்வேர்டை கெஜ்ரிவால் தெரிவிக்கவில்லை. அதனால் டிஜிட்டல் ஆதாரங்களைக் கைப்பற்ற முடியவில்லை. அதனை ஹேக் செய்து தகவல்களை எடுக்க வேண்டியுள்ளதால் கெஜ்ரிவாலை விசாரிக்க மேலும் 7 நாள்கள் அவகாசம் வேண்டும்' எனக் குறிப்பிட்டது.
இது தொடர்பான வாதத்தின்போது, இந்தியில் தன்னுடைய வாதத்தை தானே முன்வைத்தார் கெஜ்ரிவால். அப்போது பேசிய அவர், "நான் ஒரு சி.எம். இதுவரையில் எந்தவித கிரிமினல் குற்றங்களிலும் நான் ஈடுபட்டது இல்லை. எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் என்னைக் கைது செய்துள்ளனர். என்னை எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் விசாரித்துக் கொள்ளட்டும்.
என்னை சிக்கவைக்கவே அறிக்கைக்கு மேல் அறிக்கையாக தயார் செய்கின்றனர். என் அரசைக் கலைத்துவிட வேண்டும் என நினைக்கின்றனர். இந்த வழக்கில் சாட்சியம் அளித்தவர்களிடம், என் பெயரைக் கூறுமாறு நெருக்கடி கொடுத்துள்ளனர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தில் என் பெயரை சேர்த்துள்ளனர்" என அமலாக்கத்துறை மீது சராமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுகளை மறுத்த அமலாக்கத்துறை தரப்பு, "சாட்சியம் அளித்தவர்களின் பெயர்களை கெஜ்ரிவால் சொல்கிறார். இதனால் அவர்கள் பிறழ் சாட்சியாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. கோவா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி பயன்படுத்திய பணமே, ஹவாலா மூலம் பெறப்பட்ட பணம் தான்.
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் அரசு உள்ளது. அங்குள்ள மூத்த அதிகாரிகள் பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடமும் விசாரிக்க வேண்டியுள்ளது" என வாதிட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஏப்ரல் 1ம் தேதி வரையில் கெஜ்ரிவாலின் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து