தமிழர் வரலாற்றை அழிக்கும் திராவிடம்
தேர்தல்களில் திராவிட கட்சிகள் முன்வைக்கும் வாதங்களில் முக்கியமானவை, 'தமிழ் வளர்ச்சி, தமிழர் வரலாற்று மீட்பு' ஆகியவை. இந்த வாதங்கள் உண்மையானவையா?
கீழடி அகழாய்வு தமிழகம் முழுதும் புகழடைய காரணம் என்ன? கீழடி மூன்றாம் கட்ட அகழாய்வை மத்திய அரசு நிறுத்தியதும், நான்காம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறையே நடத்தியதுமே ஆகும். நான்காம் கட்ட அகழாய்வில்தான் தமிழ் பிராமியின் பழமை 2,600 ஆண்டுகள் என்ற முடிவு வந்தது. அதனை காட்டி 'தமிழர் வரலாற்றை பின்னோக்கிக் கொண்டு சென்றது திராவிடம்' எனும் பிரசாரங்கள் முன்வைக்கப்பட்டன.
இதே தமிழக தொல்லியல் துறை, கீழடி அகழாய்விற்கு முன்னர் ஏன் தமிழர் பழமையை வெளியே கொண்டு வரவில்லை? மத்திய அரசு ஓர் அகழாய்வை மூடியது என்பதால், அதற்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் ஏன் தாங்களாகவே தமிழர் வரலாற்றை ஆய்வு செய்யவில்லை?
கடந்த 1968 மற்றும் 1969ல் கொற்கையில் தமிழக தொல்லியல் துறை அகழாய்வை நடத்தியது. வெறும் 12 குழிகள் தோண்டப்பட்டன. இவற்றில் நான்காவது குழியில் கிடைத்த ஒரு அடுப்பு கரியை கார்பன் கால கணிப்பு செய்தபோது, அதன் காலம் 2,800 ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரியவந்தது. அந்த அகழாய்வில் பல பானை ஓடுகளும் கிடைத்தன.
அப்போதே அங்கு தமிழ் பிராமி பானை ஓடுகளும் கார்பன் கால கணிப்பிற்கு ஏற்ற, நெல், எலும்பு, கரி போன்ற பொருட்களும் அருகருகே கிடைக்குமா என்று தேடி இருந்தால், 1970க்கு முன்பாகவே தமிழ் பிராமியின் பழமையை 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது என்று நிறுவி இருக்கலாம்.
கொற்கை அகழாய்வு
தமிழக தொல்லியல் துறை அந்த அகழாய்வை தொடரவில்லை. மாபெரும் சான்று கிடைத்தும், வெறும் 12 குழிகளோடு கொற்கை அகழாய்வு மூடப்பட்டது. கீழடி அகழாய்வெல்லாம் நடந்த பின்னர், கொற்கை அகழாய்வு, மீண்டும் 2021ல் துவங்கப்பட்டது.
அப்போதும் அங்கு 2,800 ஆண்டுகள் பழமையான ஒன்பது அடுக்கு செங்கல் கட்டுமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கீழடி அகழாய்வை மத்திய அரசு தொடர்ந்து நடத்தாததை விட ஆகப் பெரிய துரோகம் கொற்கை அகழாய்வை தமிழக அரசு தொடர்ந்து நடத்தாதது. தமிழகத்தில் அதை பேசுவோர் இல்லை. ஓர் ஆய்வை, 50 ஆண்டுகள் தாமதித்து, அதையும் ஒரு வெற்றியாக கூறி, ஓட்டும் கேட்க திராவிடத்தால் மட்டுமே முடியும்!
இப்போதும் தமிழர் வரலாறு தொடர்பான மிக முக்கிய ஆவணங்கள் திராவிட அரசுகளால் தொடர்ந்து மறைக்கப்படுகின்றன.
தஞ்சை தமிழ் பல்கலைக் கழகமும், தமிழ் மரபு அறக்கட்டளை என்ற அமைப்பும் சேர்ந்து, கடந்த 2010ல் பழைய ஓலைச் சுவடிகளை ஆவணப்படுத்துவதாக கூறி அவற்றை சேகரித்தனர்.
அப்போது, 2010 நவம்பரில் ஆர்வலர் அண்ணாமலை சுகுமாறன் என்பவர், தேனி தேவாரம் பகுதியில் வசித்த மருத்துவர் சுப்புராஜ் என்பவரிடம், பல பழமையான ஓலைச் சுவடிகள் இருப்பதை கண்டறிந்தார். அவற்றில் இரண்டு ஓலைச் சுவடிகளை 'ராஜராஜனின் வரலாறு' என்று மருத்துவர் சுப்புராஜ் கூறினார். அதனை மேலோட்ட மாகப் படித்தபோது, கூறப்பட்டது உண்மைதான் என்பதை ஆர்வலர் அண்ணாமலை சுகுமாறன் அறிந்தார். அந்த ஓலைச் சுவடிகளை 'ராஜராஜன் 1000' நிகழ்வில் வைக்கலாம் என கேட்டார். மருத்துவர் சுப்புராஜ் யாரையும் நம்பி ஓலைச் சுவடிகளை தர தயாராக இல்லை. அவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார்.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு அண்ணாமலை சுகுமாறன் தகவல் அளித்தார். சில நாட்கள் கழித்து, தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி., போலீசார் மருத்துவர் சுப்புராஜின் வீட்டுக்கு இரவில் சென்று, ஓலைச் சுவடிகளை எடுத்தனர். மருத்துவர் சுப்புராஜ் தானே அவற்றை அரசுக்கு கொடுத்ததாகவே செய்தி வெளியிட்டனர். இது குறித்த செய்திகள் ஊடகங்களில் பரவலாக வெளிவந்தன. 'தினமலர்' நாளிதழ் கூட கடந்த, 2010 அக்., 21ல், '1,000 ஆண்டுகள் பழமையான ராஜராஜ சோழன் காலத்து ஓலைச்சுவடிகள் அரசிடம் ஒப்படைப்பு' -என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது. அந்த சுவடிகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதிப்பிக்கப்படவில்லை.
கடந்த 2020ல் வரலாற்று ஆர்வலர்கள் ஆர்.டி.ஐ.,யில் கேட்டபோது 'அது குறித்து எந்த தகவலும் இல்லை' என்ற பதிலே கிடைத்தது. மேல்முறையீட்டு வழக்கிலும் உரிய பதில் கிடைக்கவில்லை. அந்த சுவடிகள் என்ன ஆயின என்றே தெரியவில்லை.
அதிக வெப்பம்
மேலும் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் இப்படியாக சேமிக்கப்பட்ட எத்தனை சுவடிகள் உள்ளன? என்னென்ன நுால்கள் உள்ளன? என்ற கேள்விகளுக்கு, 'சுவடிகளுக்கு நம்பர் போடவில்லை, இன்னும் பிரித்துப் பார்க்கவில்லை' என்பவையே பதில்களாக கிடைத்தன. ஓலைச் சுவடிகளை எண்ணிப் பார்க்கவே, 10 ஆண்டுகளாக முடியவில்லையாம். இந்த நிலையில்தான் தமிழகத்தில் வரலாற்று ஆவணங்கள் உள்ளன. கல்வெட்டுப் படிகளின் நிலையோ இன்னும் மோசம்.
கடந்த 1890கள் முதல் எடுக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகளின் படிகள், 1911ல் ஊட்டியில் இருந்தன. ஆனால் 'திராவிட கல்வெட்டுகள்' என்று பெயரிடப்பட்ட காரணத்தால், அவை கடந்த 1966ல் மைசூரு கொண்டு செல்லப்பட்டன. அந்த படிகள் அங்கு பாதுகாக்கப்படவும் இல்லை, பதிப்பிக்கப்படவும் இல்லை. 50 ஆண்டுகளுக்கும் மேலாக மைசூரில் கேட்பாரற்று அழிந்து கொண்டிருந்த, 50,000த்திற்கும் மேற்பட்ட தமிழ் கல்வெட்டு பிரதிகளை திராவிட ஆட்சியாளர்கள் திரும்பியும் பார்க்கவில்லை.
பின்னர் வரலாற்று ஆர்வலர்களின் வழக்கு மற்றும் கோரிக்கைகளால், சமீபத்தில்தான் அவற்றில் சிறு பகுதி சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அதிக வெப்பத்தில் கல்வெட்டுப் பிரதிகள் அழியும் என்பதால் அவை சென்னையிலும் அழிவின் விளிம்பில்தான் உள்ளன.
திராவிட அரசுகளின் அறிவின்மை, அலட்சியம் மற்றும் உள்நோக்கங்களால் தொடர்ந்து அழியும் தமிழர் வரலாற்று ஆவணங்களை மொத்தமாக கணக்கெடுத்தால் தமிழகத்தில் மிக அதிக ஆவண அழிப்பு நடந்த காலகட்ட மாக திராவிட அரசுகளின் காலகட்டத்தைத்தான் நாம் கூற முடியும்.
தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட நிலையில், மக்களுக்கு வரலாற்று விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள காலத்தில்கூட, இவர்கள் இப்படித்தான் செயல்படுகின்றனர் என்பது அதிர்ச்சிக்கு உரியது. இந்நிலையில், 'திராவிடம் தமிழர் வரலாற்றைப் பாதுகாக்கும்' என்பதெல்லாம் கொடூர நகைச்சுவை மட்டுமே.
-மன்னர் மன்னன், பத்திரிக்கையாளர்
வாசகர் கருத்து