திராவிடத்தை அழிக்க வேண்டும் எனச் சொல்வது மடத்தனம்: கமல்
"தேர்தல் வரும் போது மட்டும் 8 முறை மோடி வருவார். வெள்ளம் வந்த போது நிதி தரவில்லை. அவசர தேவைக்கு உதவாத அரசு, நல்ல அரசு கிடையாது" என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
தி.மு.க.,வின் ஸ்ரீபெரும்புதுார் வேட்பாளர் டி.ஆர். பாலுவை ஆதரித்து நங்கநல்லுாரில் கமல்ஹாசன் பேசியதாவது:
எனக்கென்று எதையும் கேட்பதற்காக நான் வரவில்லை, நமக்கென்று நல்ல காலம் பிறப்பதற்காக வந்துள்ளேன். சிலர், 'நீங்கள் ஒரு சீட் வாங்கி இருக்கலாம்' என்கிறார்கள், நான் வேண்டாம் என்கிறேன். இப்படியொரு சூழலில் அதையெல்லாம் பார்த்து கொண்டிருக்க முடியாது.
ஒரு நல்ல திட்டத்தை எந்த அரசாக இருந்தாலும், அவர்களுக்கு பின் வரும் அரசு அந்த திட்டத்தை நடக்கவிடாமல் செய்வது நாட்டுக்கு நல்லது கிடையாது.
தமிழக அரசின் நல்ல திட்டங்களை செய்யவிடாமல் தடுப்பது மத்திய அரசு தான். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு ஒப்பு கொண்டது, ஆனால், இதற்குத் தேவைப்படும் 34,000 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு தரவில்லை. 68 ஆயிரம் கோடி ரூபாயை மாநில அரசே ஏற்று கொண்டுள்ளது.
வெள்ள பாதிப்பு வரும் போது இங்கு வர வேண்டும் என்ற எண்ணம் மோடிக்கு கிடையாது. தேர்தல் வரும் போது மட்டும் 8 முறை மோடி வருவார். வெள்ளம் வந்த போது நிதி தரவில்லை. அவசர தேவைக்கு உதவாத அரசு, நல்ல அரசு கிடையாது.
சர்வாதிகாரத்தை எதிர்ப்பதற்கு இளமையில் ஸ்டாலின் கஷ்டப்பட்டுள்ளார். மக்களுக்கு சர்வாதிகாரம் பிடிக்காது. மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் தரமான கல்வியை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார்.
திராவிட மாடலை சிலர் கிண்டல் செய்கின்றனர். திராவிட மாடல் என்பது நாடு பின்பற்ற வேண்டிய மாடல். எல்லோருக்குமானது திராவிட மாடல். திராவிடத்தை அழிக்க வேண்டும் எனச் சொல்வது மடத்தனம், அடுத்த இன்னொரு வாய்ப்பு தந்தால் தேர்தலே இருக்காது என்ற சூழலை பா.ஜ., உருவாக்கிவிட்டது. தேசியக் கொடியின் நிறத்தை ஒரே நிறமாக மாற்ற வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து