சதியை உடைத்து வெல்வேன்: அண்ணாமலை சிறப்பு பேட்டி
கட்சியின் தமிழக தலைவர் என்ற முறையில், களத்தில் சூறாவளி பிரசாரம்; கோவை தொகுதி வேட்பாளர் என்ற வகையில், வீதி வீதியாக ஓட்டு கேட்பு என, ஒரு மாதமாக ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நமக்கு அளித்த பேட்டி:
கோவை தொகுதி முடிவை தேசமே உன்னிப்பாகக் கவனிக்கிறது. உண்மையில் களநிலவரம் எப்படியிருக்கிறது?
படுசூடாக இருக்கிறது. அதற்கு காரணம் நான் அல்ல; அதிகாரம், பணம், படை பலம் என்று அனைத்தையும் ஒட்டு மொத்தமாக களத்தில் இறக்கி விட்டிருக்கிற தி.மு.க., தான். ஆனாலும், வாக்காளர்கள் மிகத் தெளிவாக இருக்கின்றனர். 70 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருக்கும் அரசியல் இயக்கத்தையும், அரசியலையும் மாற்றிக் காட்ட வேண்டும் என்ற எழுச்சி உருவாகி இருக்கிறது. அதை கோவை மக்கள் நிகழ்த்திக் காட்டுவர்.
உங்களை எதிர்ப்பதில், அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் சேர்ந்தே இயங்குவதாக சொல்கிறார்களே?
அ.தி.மு.க., - தி.மு.க., மட்டு மல்ல; தமிழக அரசு உயரதிகாரிகள், உளவுப்பிரிவு, நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், பெரிய பெரிய பணமுதலைகள் என, அனைவரும் சேர்ந்து இயங்குகின்றனர். ஏனெனில், இரண்டு அரசியல் கட்சிக்குமாக உள்ள கட்டமைப்பு உடைந்தால், அதை வைத்து வாழ்ந்தவர்கள் ஏமாற்றமடைவர்.
உதாரணமாக, மதுபான தொழிற்சாலை நடத்தும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கோவையில் ஏன் முகாமிட்டிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வரும், 2026ல் மதுபான ஆலைகள் இருக்காது. அதற்கு பயந்து தான் அவர் இங்கு முகாமிட்டுள்ளார்.
எந்த சூழலிலும், நான் அல்லது நீ இருக்க வேண்டும்; இதைத் தவிர்த்து மற்றவர்கள் யாரும் அரசியல் களத்தினுள் நுழைந்து விடக்கூடாது என்பதில், இரு திராவிட கட்சிகளும் தெளிவாக இருக்கின்றன. அதனால் தான், நான் ஜெயித்து விடக்கூடாது என்பதில், இருவரும் கூட்டாகச் செயல்படுகின்றனர். சதியை உடைத்து செல்வேன்.
தமிழகத்தில், காங்., உடனான தி.மு.க., கூட்டணி பலமாகத் தானே இருக்கிறது?
தி.மு.க., கூட்டணியில் காங்., மட்டுமல்ல; பல கட்சிகளும் எப்போதும் இணைந்தே இருக்கும். ஏனென்றால், அக்கட்சியால் தனித்து வெற்றி பெறவே முடியாது. ஆங்காங்கே ஜாதி ஓட்டு, மத ஓட்டுகளை அறுவடை செய்ய, சில கட்சிகளால் மட்டுமே முடியும்; அதனால், கூட்டணியில் பல கட்சிகளையும் இணைத்து வைத்துள்ளனர். கூட்டணி இல்லாவிட்டால், தி.மு.க.,வுக்கு தேர்தலில் கிடைப்பது பூஜ்ஜியம் தான்.
கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான, 643 ஏக்கர் நிலத்தை, தமிழக அரசு 2,089 கோடி ரூபாய் செலவிட்டு கையகப்படுத்தி, அதில் பணிகளை துவங்க ஆணையும் வெளியிடப்பட்டது. எப்போது விமான நிலைய விரிவாக்கப் பணிகள் துவங்கும்?
மத்திய அரசு காலம் தாழ்த்தவில்லை; இனியும், 87 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி கொடுக்கவில்லை. இது தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, தமிழக முதல்வருக்கு மூன்று முறை வெவ்வேறு கால கட்டங்களில் கடிதம் எழுதியிருக்கிறார்.
நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் இருப்பதால், அந்த இடத்தை தவிர்த்து விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள, பழைய திட்டத்தை மாற்றி, புதிதாக திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும்.
கடந்த 2014ல், 74 விமான நிலையங்கள் இருந்ததை, 2024க்குள், 151 விமான நிலையம் என இரட்டிப்பாக்கி இருக்கிறோம். கோவையில் விரிவாக்கம் செய்யப்படாததற்கு நிலம் கையகப்படுத்தாததே காரணம். அதை நிறைவேற்ற வேண்டும் அல்லது அந்த நிலத்தைத் தவிர்த்து பணிகளைத் துவக்க வேண்டும். இது தமிழக அரசின் கையில் தான் உள்ளது.
சிறு, குறு நடுத்தர தொழில் துறையினர் மேற்கொள்ளும், 'ஜாப் ஆர்டர்'களுக்கு, 2017ல் ஜி.எஸ்.டி., அறிமுகத்தின் போது, 18 சதவீதமாக வரி இருந்தது.ஆறு மாதத்திற்கு பின், 12 சதவீதமானது. அதையே இப்போது வரை ஜி.எஸ்.டி.,யாகச் செலுத்தி வருகின்றனர். அதை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். ஜி.எஸ்.டி., ஆண்டு வரவு - செலவு கணக்கு சமர்பிப்பதை எளிமைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதே...?
ஜி.எஸ்.டி.,யை பொறுத்தவரை, தேசிய அளவில் சிங்கிள் டேக்ஸ், சர்வதேச அளவில் காமன் டேக்ஸ் எந்தெந்த நாடுகளில் இருக்கிறதோ, அந்த நாடுகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. நம் நாடு, 8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஒரு லெவலுக்கு மேலே சரியான முறையிலான ஜி.எஸ்.டி., - ரேஷனலைஸ்டு பகிர்ந்தளிக்கப்படும். சதவீதத்தை குறைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில், 'இல்லீகல் பவர் சென்டர்'கள் நிறைய இருப்பதால், ஜி.எஸ்.டி.,யில் அதிக இழப்பு ஏற்படுகிறது.
தமிழகத்தில், 'இல்லீகல் பவர் சென்டர்'கள் இருக்கும் தகவலை, தமிழக மக்களிடம் சரியாக கொண்டு சென்றிருக்கிறீர்களா?
நான் வெளியிட்ட தி.மு.க., பைல்சில், சபரீசன் நிறுவனங்கள் பற்றியும், 'மணி லாண்டரிங்' செய்வது குறித்தும், மக்களிடம் தெளிவாக விளக்கியிருக்கிறேன். மருமகனுக்கும், எனக்கும் அரசியல் ரீதியாக சம்மந்தம் இல்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். பின்னர் எதற்காக, சபரீசன் நிறுவனத்திலிருந்து தி.மு.க.,வின் சோசியல் மீடியாவிற்கு, 7 கோடி ரூபாய் கொடுக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன், கோவையிலுள்ள ஒரு பிரபல ஹோட்டலில் சபரீசன், 'ரிவியூ மீட்டிங்' நடத்தியுள்ளார். அதில், போலீஸ் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அதில் பல தகவல்களை, அதிகாரிகள் அவரிடம், 'ரிப்போர்ட்' செய்துள்ளனர்.
நான் பிரசாரத்தை நிறைவு செய்து திரும்பும் போது, போலீசார் பிரசார வாகனத்தில் செல்லக்கூடாது என்று கூறி வழிமறித்தனர். இதனால், தேவையற்ற வாக்குவாதங்களும், பிரச்னைகளும் ஏற்பட்டன. இந்த வேலைகள் எல்லாமே, 'இல்லீகல் பவர் சென்டர்'கள் தரும் உத்தரவுகள் தான். இதை ஒழிக்க, இரண்டு திராவிட கட்சிகள் அல்லாமல், மாற்று கட்சி ஆட்சிக்கு வர வேண்டும். அவர்களை மக்கள் முன் தோலுரித்துக் காட்ட வேண்டும்.
வெளிநாடுகளில் நடைபெறும் தொழில் கண்காட்சியை பார்வையிட, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது. அது நிறுத்தப்பட்டுள்ளதே?
புதுடில்லியில், 'பாரத் டெக்ஸ்' என்ற சர்வதேச கண்காட்சி நடந்தது. அதில் 4,500 வெளிநாட்டு நிறுவனங்கள், நம் நாட்டை நோக்கி வந்தன. அப்படி இருக்கும் சூழலில், நாம் ஏன் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும்; அதற்கு மானியம் தேவையில்லை.
'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், கோவையில் இறக்குமதி மாற்று மையம் துவங்கப்படுமா?
கோவைக்கு, 'டிபன்ஸ் காரிடார்' திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதை எந்த வகையிலும் சிறப்பாக செயல்படுத்த முடியாமல் தடுக்கிறது தமிழக அரசு. அதேபோல் 'டிபன்ஸ் இன்குபேசன்' திட்டம் கொடிசியாவில் துவங்கப்பட்டுள்ளது. இவற்றை தமிழக அரசு எந்த சூழலிலும் அங்கீகரிக்கவோ, நல்ல முறையில் செயல்படவோ விடுவதில்லை.
கோவையிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் வன உயிரினச் சுற்றுலா ஏற்படுத்தப்படுமா?
கோவை, மலைப்பகுதிகளால் சூழப்பட்ட அழகிய நகரம். இங்குள்ள மலை மற்றும் வனப்பகுதியை கொண்டு, 'வைல்டு லைப் டூரிசம்' ஏற்படுத்தலாம். பந்திப்பூரில் கர்நாடக அரசு இதை நிறுவியுள்ளது. அதேபோல, 'ஜங்கிள் லார்ட் ரிசார்ட்'டும் அந்த அரசால் நடத்தப்படுகிறது. அதுபோன்று நடத்த, தமிழக அரசு ஒரு சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இதற்கு உதவுவதற்கு மத்திய அரசு தயாராகவுள்ளது.
அயோத்தி ராமர் கோவில், உத்தர பிரதேசத்துக்கு ஒரு மிகப்பெரிய, 'ஸ்டார்ட் அப்' ஆக மாறியிருப்பது போல, கோவை தொகுதியிலுள்ள நுாற்றாண்டு பழமையான புராதனக் கோவில் பிரபலப்படுத்தப்படுமா?
மத்திய அரசின் கீழ், 'பிரசாத்' என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் புண்ணிய தலங்கள் மேம்பாட்டுக்கு தேவையான நிதியை, மத்திய அரசு வழங்குகிறது. இந்த நிதியில், கோவிலை சுற்றி கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்; பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசு எந்த நிதியையும் பெறவில்லை.
அந்த நிதியைப் பெற்றால், மத்திய அரசு உள்ளே நுழைந்து விடும் என்பதால், அதைக் கேட்பதில்லை. பக்தர்களிடமிருந்து வரும் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை டிபாசிட் செய்து, வட்டி வருவாயை ஹிந்து சமய அறநிலையத் துறை ஈட்டி வருகிறது. கோவில்களில் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு, அந்த நிதியைப் பயன்படுத்துவதில்லை. மத்திய அரசிடமும் நிதி பெறுவதில்லை.
சிறு, குறு விவசாயிகளுக்கான நில உச்சவரம்பு உயர்த்தப்படுமா?
தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த விவசாய நிலப்பரப்பை கணக்கெடுத்து, அதன்பின் விவசாயிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில், உயர்த்துவதற்குத் தேவையான முயற்சி எடுக்கப்படும்.
கோவையில் தேசிய பஞ்சாலை கழகத்துக்கு சொந்தமான ஐந்து மில்களை இயக்க, தொழிற்சங்கங்கள் கடந்த பத்தாண்டுகளாக முயற்சி செய்தன; முடியவில்லை. மில்களுக்கு சொந்தமாக பல நுாறு ஏக்கர் நிலங்கள் நகரின் மையப்பகுதியில் உள்ளன. அதற்கு ஏதாவது மாற்று திட்டங்கள் உள்ளதா?
மத்திய அரசு அச்சகத்தில், 150 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தில், 'செமி கண்டக்டர்' உற்பத்தி மையம் கொண்டு வரப்படும். மூடப்பட்ட மில்களின் இடத்தில், குத்தகை அடிப்படையில் சில அரசு நிறுவனங்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்தொகையில் ஓய்வு பெற்ற மில் தொழிலாளர்களுக்கு கூடுதலாக பென்ஷன் வழங்கப்படும்.
பாரத பிரதமர் காப்பீட்டு திட்டம் அடித்தட்டு மக்களை முறையாக சென்றடைந்தும், மருத்துவ சிகிச்சையில் தடங்கல் ஏற்படுகிறதே... அதற்கு தீர்வு காண என்ன வழி உள்ளதா?
உண்மை தான்; இப்பிரச்னைகளை களைய ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டு அலுவலகமும் செயல்படுகிறது. மத்திய அரசு சிகிச்சைக்காக நிர்ணயிக்கும் தொகையை, மாநில அரசு ஏற்றுக் கொள்வதில்லை.
இந்த முரண்பாடுகளை, தமிழக அரசு மனிதநேயத்தோடு அணுக வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வாக, நிறைய இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளை ஏற்படுத்த வேண்டும். அதேபோல கோவை - ஈரோடு இடையே ஒரு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
அ.தி.மு.க., 2024 லோக்சபா தேர்தலுக்கு பின் கரைந்து போகும், அந்தக் கட்சி இருக்கவே இருக்காது என்ற தங்களது வாதம் சரியா?
கடந்த 2021ல் தேர்தலில் நாம் ஏன் தோற்றோம்... அதற்கு யார் காரணம் என்று யோசித்தேன். அதன் வாயிலாக வந்த பதில் தான் அது. தினகரன் மற்றும் ஓ.பி.எஸ்., இல்லாமல் தென் மாவட்டங்களில் அரசியல் செய்ய முடியாது.
அப்பகுதிகளில் தனியாக நின்றவர்கள், அதிகபட்ச ஓட்டுகளை பெற்று தோல்வியை தழுவினர். தினகரன் நல்ல தலைவர்; இயல்பானவர். அவரை சுற்றியிருப்பவர்கள் நேர்மையானவர்கள். அதேபோல, பன்னீர்செல்வமும் மிகவும் மென்மையானவர். இவர்கள் இருவரையும் அ.தி.மு.க.,வை விட்டு வெளியேற்றி விட்டனர்.
அப்புறம் எப்படி அ.தி.மு.க., வளரும்; பா.ஜ.,வை விமர்சிப்பவர்களுக்கு நான் பதிலடி தர வேண்டுமென்றே, அ.தி.மு.க.,வை நான் கடுமையாக விமர்சிக்க வேண்டியிருந்தது.
வாசகர் கருத்து