காப்பகங்களில் வசிப்போர் ஓட்டளிக்க வசதி செய்யப்படுமா?
காப்பகங்களில் விடப்பட்டுள்ள முதியோர், மாற்றுத்திறனாளிகள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற, நேரிலோ அல்லது தபால் வாயிலாகவோ ஓட்டளிக்க, தேர்தல் கமிஷன் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் தலைவர் வில்சன் கூறியதாவது:
தமிழகம் முழுதும், 4,000த்துக்கும் மேற்பட்ட தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இவர்களில் பலர், தங்களின் நிரந்தர வசிப்பிட லோக்சபா தொகுதியில் இருந்து, வெகுதொலைவில் உள்ள காப்பகங்களில் இருக்கின்றனர். மாநிலம் முழுதும் உரிய அங்கீகாரம் இல்லாமல், பல காப்பகங்கள் உள்ளன.
அவற்றில் விடுபட்டுள்ள வாக்காளர்களின் முழுமையான விபரம், மாவட்டநிர்வாகங்களிடம் இருப்பதாக தெரியவில்லை.
அதேநேரம் காப்பகங்களில் விடப்பட்டுள்ள தகுதியான முதியோர், மாற்றுத்திறனாளிகள் நாட்டின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் அவர்கள் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யும் பொறுப்பு தேர்தல் கமிஷனுக்கு உள்ளது.
கடந்த, 2019 லோக்சபா தேர்தலின்போது சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் தங்கியுள்ள நிரந்தர நோயாளிகள், வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதேபோல், இந்த தேர்தலிலும், தமிழகம் முழுதும் அங்கீகாரம் பெற்றும், பெறாமலும் உள்ள தனியார் காப்பகங்களில் விடப்பட்டுள்ள முதியோர், மாற்றுத்திறனாளிகள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற நேரிலோ அல்லது தபால் வாயிலாகவோ ஓட்டளிக்க வைக்க, தேர்தல் கமிஷன் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரையைச் சேர்ந்த காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் செய்யது பாபு தேர்தல் கமிஷனை வலியுறுத்தி, மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி சங்கீதாவிடம் மனு கொடுத்துள்ளார். கடிதத்தில், ''மதுரை மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோர், கல்லுாரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் என இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களுக்கும் தபால் ஓட்டுரிமை வழங்க வேண்டும்'' என கேட்டுக் கொண்டுள்ளார். கலெக்டர்மூலம் வந்த கடிதத்தை, தமிழக தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரதா சாஹு, இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
வாசகர் கருத்து