எம்.பி., சீட்டுக்காக தற்கொலையா : கணேசமூர்த்தி மறைவால் கலங்கிய வைகோ
"தி.மு.க., கூட்டணியில் திருச்சி தொகுதி என அறிவித்த பிறகும் கூட கணேசமூர்த்தி மகிழ்ச்சியுடன் இருந்தார். அவர் மறைந்தார் என்ற செய்தியை நம்ப முடியவில்லை" என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.
ஈரோடு தொகுதியில் 2019ம் ஆண்டு ம.தி.மு.க., சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். தற்போது தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தமுறை, ஈரோடு தொகுதி ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்படாததால் கணேசமூர்த்தி மனஉளைச்சலில் இருந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், கடந்த 24ம் தேதி அதிகப்படியான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கணேசமூர்த்தியின் உறவினர்கள், அவரை கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை குறித்து ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, அவரது மகன் துரை வைகோ உள்ளிட்டவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
ஆனால், மருத்துவ சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று (மார்ச் 28) காலை உயிரிழந்துவிட்டார். கணேசமூர்த்தியின் இறப்பு குறித்து வைகோ கூறியதாவது:
கொள்கையும் லட்சியமும் பெரிது என வாழ்ந்தார். சமீபகாலமாக அவர் மனஅழுத்தத்தில் இருந்தாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர். அதனை விவரிக்க விரும்பவில்லை. திருச்சி தொகுதி அறிவித்த பிறகும் கூட அவர் மகிழ்ச்சியுடன் தான் இருந்தார். இப்படி ஒரு முடிவுக்கு வருவார் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.
விவசாயிகளுக்காக கடுமையாக போராடியவர். மக்கள் நலனுக்காக வாழ்ந்தவர். அவர் மருந்து குடித்தார் என்பதையே என்னால் நம்ப முடியவில்லை. அவ்வளவு மனஉறுதி வாய்ந்தவராக இருந்தார். எம்.பி சீட் கிடைக்காததால் உயிர் நீத்தார் என்ற செய்தி ஒரு சதவீதம் கூட உண்மையில்லை. எங்களை நடு ஆற்றில் விட்டுவிட்டு போவார் என நினைத்துப் பார்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து