நீலகிரி வாக்காளர்களில் 10 ஆயிரம் பேர் மாயம்
நீலகிரி மாவட்டத்தில், 10 ஆயிரம் வாக்காளர்களை பட்டியலில் காணவில்லை என்ற விபரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி லோக்சபா தொகுதியில், நீலகிரி மலை மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கூடலுார் தொகுதிகள் உள்ளன.
அதில், ஊட்டி தொகுதியில், ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 256 வாக்காளர்கள் உள்ளனர்.
கூடலுார் தொகுதியில், ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 614 வாக்காளர்கள்; குன்னுார் தொகுதியில், ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 754 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தின் முதுகெலும்பாக உள்ள தேயிலை, மலை காய்கறி விவசாய தொழில்களில் ஏற்றம் பெறாததால், தொழில் செய்வோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தது.
நாளடைவில் பொருளாதார நெருக்கடியால் வேலைவாய்ப்புகளை இழந்த விவசாயிகள், வேலைவாய்ப்புகளைத் தேடி, கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
அதன்படி, ஊட்டி தொகுதியில், 6,500 பேர், குன்னுாரில், 2,500 பேர், கூடலுாரில், 1000 பேர் என, 10 ஆயிரம் வாக்காளர்களை பட்டியலில் காணவில்லை. அனைவரும் சமவெளிப் பகுதிகளுக்கு வேலைவாய்ப்பு தேடிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
தேயிலை, மலை காய்கறி விவசாயத்தில் ஏற்பட்டுள்ள சுணக்கம், இங்கு வேலை வாய்ப்புக்கான தொழில் வளங்கள் குறைவு ஆகியவை, வாக்காளர்கள் இடம்பெயர முக்கிய காரணமாகிவிட்டது.
வாசகர் கருத்து