திராவிட கட்சிகளை தவிர்க்க முடியாது: கார்த்தி எம்.பி., சிறப்பு பேட்டி

அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர், தமிழ்நாடு காங்., செயற்குழு உறுப்பினர். கடந்த 2019 தேர்தலில் சிவகங்கையில் 3,32,244 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பி., ஆனவர். தொகுதியில் காங்., கட்சியினர் எதிர்ப்பையும் மீறி, மீண்டும் 2024 தேர்தலில் போட்டியிட கட்சி தலைமை இவருக்கு வாய்ப்பு தந்துள்ளது.

தேர்தல் களத்தில் இவருக்கு உறுதுணையாக தி.மு.க., - காங்., கட்சியினர், தந்தை சிதம்பரம், மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திராவிட கட்சிகளின் ஆதரவில் தொடர்ந்து இங்கு வெற்றிபெற்று வரும் கார்த்தி எம்.பி., நம்மிடம் பேசியதாவது:

காங்., மாநில தலைவர் பதவி கேட்டும் கிடைக்காததற்கு காரணம் என்ன? கிடைத்திருந்தால் கட்சியை வளர்க்க தங்களின் திட்டம் என்னவாக இருந்திருக்கும்?



நான் மாநில தலைவர் ஆவது தற்போதைக்கு முடிந்துபோன விஷயம். செல்வப்பெருந்தகை சட்டசபை குழு தலைவராக இருந்தார். இதனால் அவரை மாநில தலைவராக நியமித்து உள்ளனர். இதை நான் முழுமையாக ஏற்கிறேன். தற்போதைக்கு சிவகங்கை தொகுதியில் காங்., வெற்றி பெற்று, 'இண்டியா' கூட்டணிக்கு பலம் சேர்ப்பது ஒன்று தான் என் குறிக்கோள்.

சிவகங்கை தொகுதியை சிதம்பரம், கார்த்திக்கு எழுதி கொடுத்துவிட்டீர்களா என காங்., - - தி.மு.க.,வினர் அவரவர் கட்சி தலைமையிடம் புலம்புகின்றனரே?



ஒருசில நபர்கள் தேர்தல் வரும்போதெல்லாம் தனக்கும் சீட் ஒதுக்க வேண்டும் என கட்சி மேலிடத்தில் விருப்பத்தை வேறு விதமாக வெளிப்படுத்தினர். கடந்த 2014ல் கூட்டணி இல்லாதபோது என்னை தவிர வேறு யாரும் விருப்பத்தை தெரிவிக்கவில்லை. கடந்த 2019ல் கூட்டணி அமைந்த போது ஒரு குறிப்பிட்ட நபர் விருப்பம் தெரிவித்தார். கட்சி எனக்கு வாய்ப்பு தந்து, வெற்றி பெற்றேன். 2024ல் நான் வாய்ப்பு கேட்டேன். அவரும் மீண்டும் தனக்கு வாய்ப்பு கேட்டார். வாய்ப்பு கேட்கும் போது சில விமர்சனங்களை வைத்தார்.

ஆனால், எனக்கு தான் கட்சி மேலிடம் வாய்ப்பு தந்துள்ளது. மீண்டும் 2029ல் அதே நபர் விருப்பத்தை தெரிவித்தால், நான் தப்பு என சொல்லமாட்டேன். பல பேர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பது தவறு இல்லை.

10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் தானே சிவகங்கை இருக்கிறது? இங்கு எம்.பி.,யாக இருந்து என்ன சாதித்தீர்கள்?



'தினமலர்' நாளிதழ் படிப்பவர்கள் ஓரளவுக்கு மேல்தட்டு, விபரம் தெரிந்தவர்களாக இருப்பர். எனக்கு நேரடியாக நிர்வாகத்தில் தலையிடும் அதிகாரம் இல்லை. ஒரு எம்.பி.,யின் அதிகாரம் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அரசு திட்டத்தை கொண்டு வர அழுத்தம் தரலாம். புதிய திட்டம் அரசு அறிவித்தால் இங்கு கொண்டு வரலாம். மத்தியில் இருக்கும் அரசாங்கம், தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

தமிழக அரசு நான் கேட்ட மூன்று கோரிக்கைகளில், அரசு சட்டக்கல்லுாரி, வேளாண் கல்லுாரி ஆகியவற்றை நிறைவேற்றி தந்தது. சிவகங்கைக்கு வேலுநாச்சியார் பெயரில் மகளிர் போலீஸ் பயிற்சி மையம் கேட்டுள்ளேன். அதையும் தருவதாக தெரிவித்து உள்ளனர்.

திருப்பூர், சேலம், கரூர் போல முன்னணி மாவட்டமாக சிவகங்கையை மாற்ற முடியுமா?



பிரசித்தி பெற்ற கோவில், சர்ச், மசூதிகள் உள்ளன. அதை சுற்றி கோவில் சுற்றுலா தலங்கள் உருவாக்கலாம். பழமையான பங்களாக்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு, ராஜஸ்தான் போன்று சுற்றுலா மையமாக மாற்றலாம். செட்டிநாடு உணவுக்கு தனி வரவேற்பு உள்ளது. அதை முன்னிறுத்தி சுற்றுலா தலம் உருவாக்கலாம். அதே போன்று தென்னை, கரும்பை வைத்து விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்கலாம்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் துவங்கி வைத்த சிவகங்கை 'கிராபைட்' உப தொழில் வளர்ச்சிக்கு ஏன், இதுவரை மத்திய அரசிடம் வலியுறுத்தவில்லை?



'கிராபைட்' நிறுவனம் தமிழக அரசின் கீழ் செயல்படுவது. கடந்த 10 ஆண்டுகள், தமிழகம் அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தது. எனக்கு முன் அக்கட்சி எம்.பி., தான் இருந்தார். அவரிடமும் இதை பற்றி நீங்கள் கேள்வி கேளுங்கள். எனக்கு தெரிந்தவரை 'கிராபைட்' துகளின் தெளிவு 97 சதவீதம் மேல் வளராததால், உப தொழில்கள் செய்வதில் இங்கு தொழில்நுட்ப ரீதியிலான சிக்கல் இருப்பதாக எனக்கு தெரிகிறது.

தொழில்நுட்ப ரீதியாக திட்டம் தந்தால், தமிழக அரசை அணுகி உப தொழிற்சாலைகள் நிறுவ வலியுறுத்தப் படும். இந்த கேள்வியை அ.தி.மு.க., விடமும் கேட்க வேண்டும்.

தி.மு.க.,வினருக்கு ஆன்மிகம் என்பதே பிடிக்காது. ஆனால், நீங்கள் கடவுளை முழுமையாக நம்புபவர். ஆன்மிகத்திற்கு ஆதரவாக தைரியமாக பொது கூட்டங்களில் பேசுகிறீர்கள். அவர்களுடன் சேர்ந்து எப்படி பயணம் செய்கிறீர்கள்?



நான் வணங்காத கடவுளே இல்லை. தி.மு.க., ஆன்மிகத்திற்கு எதிரான அமைப்பு என்பது தவறு. மதுரையில் நடந்த கூட்டத்தில் தான் முதல்வர் ஸ்டாலின் ஒரு கணக்கு கொடுத்தார். அவர் ஆட்சியில் இருந்தது 1,069 நாட்கள். ஆனால் 1,500 கோவில்களுக்கு மேல் கும்பாபிஷேகம் செய்துள்ளார். தி.மு.க., எந்தவிதத்திலும் ஆன்மிகம், தனிமனித மத நம்பிக்கைக்கு எதிரான இயக்கம் கிடையாது. அதில் எந்தவித முரண்பாடும் இல்லை.

மதுரை - தொண்டி, காரைக்குடி, காரைக்குடி -- துாத்துக்குடி, திண்டுக்கல் -- காரைக்குடி அகல ரயில்பாதை திட்டம் கொண்டு வர என்ன முயற்சி எடுத்தீர்கள்?



ரயில்வே திட்டம் சார்பாக, 43 கோரிக்கைகளை மத்திய அரசிடம் வைத்துள்ளேன். இங்குள்ள ரயில்வே பொது மேலாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை. நான் வழங்கிய அனைத்து திட்டங்களையும் ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி விட்டனர். பா.ஜ., அரசின் ஒரே குறிக்கோள், வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்பது தான். பயணியரின் நலனுக்கான ரயில்வே திட்டங்களை கொண்டு வர முயற்சிக்கவில்லை. ரயில்வே திட்டம் சார்ந்த கோரிக்கைளை புத்தகமாக வெளியிட்டுள்ளேன்.

சிவகங்கை அருகே முத்துப்பட்டி 'ஸ்பைசஸ்' பூங்கா முழுமையாக செயல்படாமல் உள்ளது. ஒரு எம்.பி.,யாக என்ன முயற்சி எடுத்துள்ளீர்கள்?



காங்., அரசு தான் இங்கு 'ஸ்பைசஸ் பூங்கா' திறந்தது. ஆனால், நான் எவ்வளவோ முயற்சித்தும், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை. நான் அடிக்கடி மத்திய வர்த்தக அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி முயற்சி எடுத்தேன். அதன்படி ஒரு சில யூனிட்கள் வந்தன. இன்னும் தருவர் என எதிர்பார்க்கிறோம். இன்னும் வாடகையை குறைக்க வேண்டும் என தொழில் முனைவோர் கோரிக்கை வைக்கின்றனர். தேர்தலுக்கு பின் அது குறித்து கலெக்டரிடம் பேசி, நல்ல முடிவு எடுக்கப்படும்.

உங்கள் தந்தை ஏழு முறை எம்.பி.,யாகி மத்திய அமைச்சர் பதவிகளை வகித்தும், சிவகங்கையில் காங்., வளரவே இல்லை. தொடர்ந்து அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., ஆதரவில் தான் நீங்களும், உங்கள் தந்தையும் வெற்றி பெற்றுள்ளீர்கள். கட்சியை வளர்ப்பதில் நீங்கள் ஏன் ஆர்வம் காட்டவில்லை?



என்னை பொறுத்தமட்டில், காங்., தமிழ்நாட்டிலேயே கட்டுமான வசதி, கட்டமைப்புடன் சிறப்பாக இருக்கும் தொகுதி சிவகங்கை தான். இங்கு பூத் கமிட்டி அமைத்து, அடையாள அட்டை தந்துள்ளோம். அடிக்கடி கட்சி நிகழ்ச்சிகள் நடத்தி, தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறோம்.

கடந்த, 2014 தேர்தலில் கன்னியாகுமரிக்கு அடுத்து இங்கு தான், லட்சக்கணக்கான ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளோம். சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளை சேர்த்தால் கூட இவ்வளவு ஓட்டு வரவில்லை. இது எனக்காக வந்த ஓட்டு அல்ல. இங்கு இருக்கும் காங்., கட்டமைப்பால் தான் கிடைத்துள்ளது.

சிவகங்கை தொகுதியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள், காரைக்குடியை போன்று சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட தொகுதிகளுக்கு வருமா?



மத்தியில் காங்., அரசு அமைந்தால், கண்டிப்பாக வளர்ச்சி பணிகள் வேகமாக வரும். ஆனால், பா.ஜ., அரசுக்கு 10 ஆண்டுகளில் தமிழகத்தின் மீது எந்தவித அக்கறையும் இல்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பூமி பூஜை போட்டு, கட்டி முடிக்க முடியவில்லை. ஆனால், கோவில் பூமி பூஜை போட்டு சீக்கிரம் கட்டி முடிக்கின்றனர்.

இதில் இருந்து அவர்கள் எதற்கு முக்கியத்துவம் தருகின்றனர் என்பது புரியும். வேளாண் கல்லுாரி திருப்பத்துாருக்கும், சட்டக்கல்லுாரி காரைக்குடிக்கும், மருத்துவ கல்லுாரி சிவகங்கை தொகுதிக்கும் வந்துள்ளன. அடுத்து மகளிர் போலீஸ் பயிற்சி கல்லுாரி சிவகங்கையில் துவங்கப்படும்.

அரசியலில் இன்னும் எந்த நிலையை அடைய ஆசைப்படுகிறீர்கள்?



அரசியலில் என் ஆசைக்கு எல்லையே இல்லை. நான் தீவிர முருக பக்தன். அவர் என்ன சொல்கிறாரோ அந்த வழியில் செல்கிறேன். பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலுக்கு தான் அதிகம் செல்கிறேன். ஏன், ஐ.நா., சபை பொது செயலர் ஆக வேண்டும் என்ற ஆசை கூட உண்டு.

2024 தேர்தலில் சிவகங்கை தொகுதிநிலவரம் எப்படி உள்ளது? உங்களுக்கு போட்டியாக யாரை நினைக்கிறீர்கள்?



எனக்கு போட்டியாக யாரையும் பார்க்கவில்லை. சிவகங்கை தொகுதி மட்டுமல்ல, தமிழகம் முழுக்க ஒரே நிலவரம் தான். தி.மு.க., - - காங்., தலைமையிலான இண்டியா கூட்டணி முன்னணியில் உள்ளது. 2வது இடத்தில் அ.தி.மு.க.,வும், 3வது இடத்தில் பா.ஜ., கூட்டணி உள்ளது.

கூட்டணி பலத்தில் தான் வெற்றி பெறுகிறேன் என்று சொல்வதில் எனக்கு தயக்கமோ, கூச்சமோ கிடையாது. நான் பலமுறை சொல்லியிருக்கிறேன், லோக்சபா தேர்தலில் வேட்பாளரை விட கூட்டணி, கட்சி, சின்னம் தான் நிற்கும்.

இது வரை அ.தி.மு.க., -- தி.மு.க., கூட்டணியை தவிர்த்து விட்டு தமிழகத்தில் யாரும் வெற்றி பெற்றதாக என் வாழ்நாளில் பார்க்கவில்லை.


Kasimani Baskaran - Singapore, சிங்கப்பூர்
14-ஏப்-2024 11:08 Report Abuse
Kasimani Baskaran எல்லையில்லா அளவில் திருவிளையாடல்களையும் லீலைகளையும் திராவிடக்கட்சிகள் தமிழகத்தில் அறங்கேற்றி விட்டார்கள். அனைவரும் சம்பாதிக்க வேண்டும் என்பது அந்தக்கால திராவிடக்கோட்பாடு. அதை மறந்துவிட்ட படியால் இனி உபிஸ் கூட திராவிடக்கட்சிகளுக்கு கல்தா கொடுப்பார்கள்.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்