Advertisement

365 நாட்களும் எம்.பி.,க்களுக்கு வேலை உண்டு!

இந்திய பார்லிமென்ட் என்பது பெருங்கடல். அதில் மூழ்கி முத்தெடுப்பது, எம்.பி.,யின் தனிப்பட்ட திறமையில் இருக்கிறது. பார்லிமென்டில் ஒரு எம்.பி., பேசுகிறார் என்றால், அவர் உலகின் முன்பு பேசுகிறார் என்று பொருள். பார்லிமென்டில் எம்.பி.,க்கள் பேசுவதை, டில்லியில் அனைத்து நாட்டு துாதரகங்களிலும் அதிகாரிகள் உன்னிப்பாக கேட்பர்.

எம்.பி.,க்கள் எப்போதாவது ஒரு முறை அவரவர் தாய்மொழியில் பேசலாம். ஆனால், ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் பேசினால்தான் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகளைச் சென்று சேரும். எனவே, இதில் எம்.பி.,க்கள் கவனம் செலுத்த வேண்டும்.

லோக்சபாவில், 272 எம்.பி.,க்கள் ஆதரவு இருந்தால்தான் மத்திய அரசு நீடிக்க முடியும். இதிலிருந்து எம்.பி.,யின் அதிகாரத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். பார்லிமென்டில் 32க்கும் அதிகமான நிலையாணை குழுக்கள் உள்ளன.

மத்திய அமைச்சர்களின் தலைமையில் நடக்கும் ஆலோசனைக் குழுக்களும் உள்ளன. கட்சிகளுக்கு உள்ள எம்.பி.,க்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இந்த நிலையாணை குழுக்களில் எம்.பி.,க்கள் இடம்பெற முடியும். ஒரு எம்.பி.,க்கு இரண்டு குழுக்களில் உறுப்பினராக வாய்ப்பு கிடைக்கும்.

365 நாட்களும் வேலை



லோக்சபா கூடும் நாட்கள் மட்டும்தான் நமக்கு தெரியும். ஆனால், பார்லிமென்ட்டின் செயல்பாடுகள் ஆண்டின் 365 நாட்களும் இருக்கும். நிலையாணை குழுக்கள், துறை வாரியான ஆலோசனை, நிலையாணை குழுக்களின் சுற்றுப்பயணம் என, எம்.பி.,க்களுக்கு வேலைகள் இருந்து கொண்டே இருக்கும்.

கல்வி, தொழில், ரயில்வே, வேளாண்மை, நகர்ப்புற வளர்ச்சி, ஊரக வளர்ச்சி, உள்துறை, வெளியுறவு, பாதுகாப்பு, நிதி, நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட முக்கியமான துறைகளின் நிலையாணைக் குழுக்களின் உறுப்பினராக இருக்கும் எம்.பி.,யால், அவரது தொகுதி மக்களுக்கும், அவருடைய மாநில மக்களுக்கும் ஏராளமான நன்மைகளைச் செய்ய முடியும்.

எனவே, ஒரு எம்.பி.,யின் திறமை என்பது, அவர் எந்த துறையின் நிலையாணை குழுவில் இருக்கிறார் என்பதிலேயே தெரிந்துவிடும். முதல் முறை எம்.பி.,க்களுக்கு அனுபவம் வாய்ந்த எம்.பி.,க்களும், அதிகாரிகளும் பயிற்சி அளிப்பர். முன்கூட்டியே கொடுக்கப்படும் கேள்விகளுக்கு, கேள்வி நேரத்தில் பதில் பெறலாம். சபாநாயகரின் முன் அனுமதி பெற்ற 'ஜீரோ' நேரத்தில் முக்கியமான பிரச்னைகள் குறித்து கேள்வி கேட்கலாம்; அரசின் கவனத்தை ஈர்க்கலாம்; விவாதங்களில் பங்கெடுக்கலாம்.

கவன ஈர்ப்பு தீர்மானம், ஒத்திவைப்பு தீர்மானம், நம்பிக்கையில்லா தீர்மானம், வெட்டு தீர்மானம் கொண்டு வந்து முக்கியப் பிரச்னைகளை தேசிய அளவில், ஏன் உலக அளவில் கவனத்திற்கு கொண்டு வரலாம்.

அதிருப்தியை பதிவு செய்யலாம்



நிலையாணை குழு, ஆலோசனைக் குழு கூட்டங்கள் நடக்கும் போது, அதிகாரிகளிடம் எம்.பி.,க்கள் கேள்விகள் கேட்கலாம். எம்.பி.,க்கள் என்னென்ன கேள்விகள் கேட்கப் போகின்றனரோ என்று, அதிகாரிகள் தயார் செய்து கொண்டு வர வேண்டும். அந்த அளவுக்கு எம்.பி.,யின் கேள்விகள் இருக்க வேண்டும். அதற்கு தேர்வுக்கு தயாராகும் மாணவன் போல எம்.பி.,க்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகள் பற்றிய ஞானம் இருக்க வேண்டும்.

முக்கியமான சட்ட மசோதாக்கள், நிலையாணை குழுக்களில் விவாதிக்கப்படும். அதில் தனக்கு உடன்பாடு இல்லை யென்றால், எழுத்துப்பூர்வமாக தன் அதிருப்தியை எம்.பி., தெரிவிக்க முடியும். அது ஆவணமாகி காலம் காலமாக நிலைத்து நிற்கும். கனிமங்கள், ரியல் எஸ்டேட் சம்பந்தமான சட்டங்களில், என் அதிருப்தியை பதிவு செய்திருக்கிறேன்.

ஒரு எம்.பி.,யின் முக்கிய கடமை, அவரது மாநில உரிமைகளைப் பாதுகாப்பது. மாநில உரிமைகளைப் பாதுகாத்தால் தான் மாநிலத்திற்கான தேவைகளை பெற முடியும். அதுபோல, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான செயல்பாடுகளையும் எம்.பி.,க்கள் தட்டிக் கேட்க முடியும்; தடுக்க முடியும்.

நல்லுறவு அவசியம்



பார்லிமென்டில், மத்திய அரசின் கொள்கை உரையான ஜனாதிபதி உரை என்பது, மிக முக்கியமானது. அந்த விவாதத்தில், எம்.பி.,க்கள் தங்களது கருத்துகளை, தங்கள் மாநிலத்தின் தேவைகளை வலியுறுத்த முடியும். ஒரு எம்.பி., சிறப்பாக செயல்பட வேண்டுமானால், சபாநாயகர், அதிகாரிகளுடன் நல்லுறவைப் பேண வேண்டும். அப்போதுதான் கேள்வி நேரம், ஜீரோ நேரம், விவாதங்களில் பங்கேற்க, அதிகமான வாய்ப்புகளைப் பெற முடியும்.

லோக்சபாவில் பேசியதோடு கடமை முடிந்து விட்டது என, இருந்து விட்டால் ஒன்றும் நடக்காது. பேசிய பின், அதை செயல்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து, தொடர்ந்து கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும்.

பார்லிமென்டில், அரசின் அனைத்து ஆவணங்களும் இருக்கும்; அவற்றை படிக்க வேண்டும். பார்லிமென்ட் கூடும் நாட்களில் முழுநேரமும் பங்கேற்க வேண்டும். மற்ற எம்.பி.,க்கள் பேசுவதை கூர்ந்து கவனிக்க வேண்டும். அப்போதுதான் எப்படி பேச வேண்டும்; எதை பேசக் கூடாது என்பது தெரியும். அனைவருடனும் நல்ல தொடர்பும் கிடைக்கும்.

25 கோடி ரூபாய்



ஒவ்வொரு எம்.பி.,க்கும், ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் வீதம், 5 ஆண்டுகளுக்கு 25 கோடி ரூபாய் தொகுதி வளர்ச்சி நிதி கிடைக்கும். இதை கல்வி, சுகாதாரம், விவசாயம் தொடர்பான பணிகளை பயன்படுத்தினால், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். குடிநீர் தொட்டிகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆராய்ச்சி கூடங்களுக்கு கம்ப்யூட்டர்கள், மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்களை, என் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து கொடுத்திருக்கிறேன்.

தமிழகத்திலிருந்து லோக்சபாவிற்குச் செல்லும் 39 எம்.பி.,க்கள்தான், 8 கோடிக்கும் அதிகமான தமிழக மக்களின் பிரதிநிதிகள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

-டி.கே.ரங்கராஜன், முன்னாள் எம்.பி., மா.கம்யூ.,



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்