பன்னீர்செல்வத்திற்கு இ.பி.எஸ்., வைக்கும் 'செக்'
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் வெற்றியை தடுக்கும் வகையில், ஓட்டுகளை பிரிப்பதற்கு வசதியாக, அவரது பெயர் கொண்ட ஐந்து பேர் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்து, வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
தேர்தலில் பன்னீர்செல்வம் வெற்றி பெற்றால், மத்திய அமைச்சராகும்பட்சத்தில் அ.தி.மு.க.,வை மீட்டெடுக்க, அவருக்கு பா.ஜ., மேலிடம் மறைமுகமாக உதவி செய்யும் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கருதுகிறார்.
இதனால், பன்னீர்செல்வத்தின் வெற்றியை தடுக்கும் வகையில், முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில், ஓ.பன்னீர்செல்வம் பெயர் கொண்ட நான்கு பேரை தேர்வு செய்து, அவர்களை ராமநாதபுரம் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வைக்கப்பட்டுள்ளதாக பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பொருமுகின்றனர்.
அவர்கள் நான்கு பேரும் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதால், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு எந்த சின்னம் என தெரியாமல் வாக்காளர்கள் குழப்பமாகி, ஏதாவது ஒரு பன்னீர்செல்வம் பெயரில் சுயேச்சை சின்னத்தில் ஓட்டுப்பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது.
இப்படி ஒரு குழப்பத்தால், பன்னீர்செல்வத்தின் தேர்தல் வெற்றியை தடுக்க முடியும்; ஓட்டு எண்ணிக்கையின் சதவீதத்தையும் குறைக்க முடியும் என, பழனிசாமி தரப்பில் இப்படியொரு முயற்சி எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
முகத்தில் கரி பூசுவர்
பன்னீர்செல்வம் கடந்த 25ம் தேதி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட, வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் மதுரையிலிருந்து ராமநாதபுரம் வரும் வழி நெடுகிலும், 2,000க்கும் மேற்பட்ட வாகனங்களில், மக்கள் தன்னெழுச்சியாக வரவேற்று, தங்களது வெற்றிக்கனியை தேர்தல் களத்தில் சமர்ப்பிப்போம் என தெரிவித்தனர். அதை அறிந்த பழனிசாமி கும்பலின் அள்ளக் கைகளில் ஒரு சிலர், பன்னீர்செல்வம் பெயரில் ஆறு நபர்களை தமிழகம் முழுவதுமிருந்து வரவழைத்து, அந்த அப்பாவிகளை வேட்புமனு தாக்கல் செய்ய வைத்துள்ளனர். இதை எப்படி சொல்வது என தெரியவில்லை. எங்கள் மக்கள் தெளிவாக, தர்மத்தின் பக்கம், நியாயத்தின் பக்கம் ஓட்டளிக்கக் கூடியவர்கள். சூழ்ச்சிகார கும்பலின் முகத்தில் மக்கள் கரியை பூசுவர்.
-ஜெயபிரதீப், பன்னீர் இளைய மகன்
பெரம்பலுார் லோக்சபா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக, அ.ம.மு.க., வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலர் சேகர் என்பவரின் மகன் அருண் நேரு நேற்று பெரம்பலுார் மாவட்ட தேர்தல் அலுவலர் கற்பகத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தார். பி.இ., பட்டதாரியான இவர் சென்னையில் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். பெரம்பலுார் லோக்சபா தொகுதியில், அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார்.இந்நிலையில், பா.ஜ., கூட்டணியில் உள்ள அ.ம.மு.க., ஒன்றிய செயலர் சேகர் தன் மகன் அருண் நேருவை போட்டியிட வைத்திருப்பது, ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வத்துக்கு ஏற்படுத்தப்படும் குழப்பம் போன்றது என லோக்கல் தி.மு.க.,வினர் கொந்தளிக்கின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் பன்னீர்செல்வம் ஏற்கனவே சுயேச்சையாக மனு தாக்கல் செய்த நிலையில், அவரே மேலும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். இவர் தவிர ராமநாதபுரம் தெற்கு காட்டூர் ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வாகைக்குளம் ஒச்சாத்தேவர் மகன் பன்னீர்செல்வம், மதுரை, சோலை அழகுபுரம் ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வம் என மேலும் மூன்று பேர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தனர்.இதுவரை பன்னீர்செல்வம் என்ற பெயரில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தையும் சேர்த்து ஐந்து பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
வாசகர் கருத்து