'வடைபோவது இ.பி.எஸ்.,சுக்கு தெரியுமா?'
அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வின் எதிர்க்கட்சிகளாக மாறிவிட்ட நிலையிலும் கூட, பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் யாருமே, பழனிசாமி குறித்தோ, அ.தி.மு.க.,வின் செயல்பாடுகள் குறித்தோ எவ்விதமான விமர்சனமும் வைப்பதில்லை.
ஏற்கனவே நடந்த நான்கு பிரசாரக் கூட்டங்களிலும் பிரதமர் மோடி, அ.தி.மு.க.,வையும் பழனிசாமியையும் விமர்சிப்பார் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் இருந்தது. ஆனாலும், மோடி ஒரு வார்த்தை கூட விமர்சிக்கவில்லை.
இது பா.ஜ., தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், தலைவர்கள் மோடியின் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டு தெளிவாக உள்ளனர். அதனாலேயே, மோடியைப் போல அவர்களும் அ.தி.மு.க.,வை விமர்சிக்காமல் உள்ளனர்.
இதுகுறித்து, பா.ஜ., முக்கியத் தலைவர் ஒருவர் கூறியதாவது:
அரசியல் என்று வந்து விட்டால், எல்லாமே கணக்கு தான். ஜெயலலிதா மறைவுக்குப் பின் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சி, தமிழகத்தில் சிறப்பாக நடந்ததற்கு பிரதமர் மோடியும் பா.ஜ.,வும் உதவியவை ஏராளம். ஆனாலும், பழனிசாமி கூட்டணியை விட்டு விலகும் முடிவை அறிவித்தார். அதற்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கட்சியின் மறைந்த தலைவர் ஜெயலலிதாவை விமர்சித்ததை காரணம் காட்டினார்.
உண்மையில் விலகலுக்கு அது காரணம் அல்ல. சிறுபான்மையின ஓட்டுகளுக்காகவும், கட்சியின் ஒரு சில தலைவர்களின் நிர்பந்தத்துக்காகவும் தான் பா.ஜ., கூட்டணியை விட்டுச் சென்றார் பழனிசாமி.
புறம் தள்ளல்
ஆனாலும், அவர் யதார்த்தம் உணர்ந்து பா.ஜ.,வை நோக்கி திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு, அமித் ஷா மற்றும் மோடி வரை பா.ஜ., தலைவர்கள் எல்லோரிடமும் இருந்தது. அதற்காக, இருதரப்பு நலன் விரும்பிகள் பலரும் பல்வேறு வகையிலும் முயற்சி எடுத்தனர். எடுத்த முடிவில் உறுதியாக இருப்பேன் என்று சொல்லி, பலருடைய முயற்சிகளையும் புறம் தள்ளி விட்டார் பழனிசாமி.
இது பா.ஜ., தரப்புக்கு, பழனிசாமி மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இருந்தபோதும், அ.தி.மு.க., மற்றும் பழனிசாமி மீது பா.ஜ.,வினர் யாரும் எந்த விமர்சனமும் வைக்கவில்லை.
இதிலும் ஒரு அரசியல் கணக்கு இருக்கிறது. அ.தி.மு.க., என்பது தி.மு.க., எதிர்ப்பால் வளர்ந்த கட்சி. கடந்த மூன்றாண்டுகளாக எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்தாலும், தி.மு.க., மீது கடுமையான விமர்சனம் எதையும் அ.தி.மு.க., வைத்து, பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்ற வருத்தம், அக்கட்சியின் கடைக்கோடி தொண்டன் வரை பெரும் புகைச்சலாக இருக்கிறது.
அதேநேரம், தி.மு.க.,வை மிகக் கடுமையாக எதிர்க்கும் பா.ஜ.,தான் அ.தி.மு.க., தொண்டர்களுக்கு ஆறுதலாக உள்ளது. அதனால், பா.ஜ., மீது அவர்களுக்கு ஒரு சின்ன ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, இன்று வரை அ.தி.மு.க., மீதும் தங்கள் மீதும் மரியாதையோடு இருக்கும் பா.ஜ.,வுக்கு வரும் லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
புகழ்ந்து பேசுவது ஏன்?
குறிப்பாக, இதுவரை, அ.தி.மு.க.,வுக்கு பலமான தொகுதிகளாக அறியப்படும் ஈரோடு, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட கொங்கு பகுதிகளில் இருக்கும் அ.தி.மு.க.,வினரே இப்படியொரு முடிவுக்கு வந்திருப்பதாக, பா.ஜ., தரப்பில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரிய வந்திருக்கிறது.
அந்த பகுதிகளில் உள்ள கவுண்டர் இனத்து மக்கள், பழனிசாமி தங்கள் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு ஆதரவாக உள்ளனர். தற்போது அதே இனத்தில் இருந்து பா.ஜ.,வைச் சேர்ந்த அண்ணாமலையும் உருவெடுத்துள்ளதால், அரசியலில் வேகமாக செயல்படும் அவருக்காக வரும் தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க கவுண்டர்களும் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வாறு அந்த தலைவர் கூறினார்.
அ.தி.மு.க.,வினரிடம் கேட்டபோது, எதிர்தரப்பு என்று சென்று விட்டபின், விமர்சனம் தவிர்க்க முடியாதது. ஆனால், பா.ஜ., தரப்பு இதில் நாசூக்காக நடந்து கொள்வதன் பின்னணி அ.தி.மு.க., ஓட்டுகளை தங்கள் பக்கம் இழுப்பதற்குத்தான். அதனால்தான் அண்ணாமலை விமர்சித்த பின்பும், பிரதமர் மோடி எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசுகிறார். அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்கள் ஓட்டுகளையும் மோடி, பா.ஜ., பக்கம் இழுக்க திட்டம் போட்டே காரியமாற்றுகிறார். கள யதார்த்தம் தெரியாமல் அரசியல் செய்து கொண்டிருக்கிறார் பழனிசாமி. மொத்தத்தில் வடை பறிபோவது தெரியாமல் இருப்பதுகூட ஒருவிதத்தில் அறியாமைதான்'' என்றனர்.
வாசகர் கருத்து