அண்ணாமலை குறிவைக்கும் 10 தொகுதிகள்: தனி திட்டம் போடும் சங் பரிவார்

தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, மூன்றாவது அணி அமைக்க முயற்சித்து வரும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 10 தொகுதிகளை குறிவைத்து வெற்றிக்கான வியூகங்களை வகுத்து வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

பா.ஜ., கூட்டணியை அ.தி.மு.க., முறித்துக் கொண்ட நிலையில், பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளை இணைத்து, வலுவான மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், ஜி.கே.வாசனின் த.மா.கா., ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தேவநாதன் யாதவின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகியவை பா.ஜ., கூட்டணியில் இணைந்துள்ளன. பா.ம.க., - தே.மு.தி.க.,வுடன் பா.ஜ., தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறது.

அதிகரித்த செல்வாக்கு



கடந்த 2014ல் பா.ஜ., அமைத்த மூன்றாவது அணிக்கு 18 சதவீத ஓட்டுகளும், இரண்டு எம்.பி.,க்களும் கிடைத்தன. தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு அதிகரித்துள்ள செல்வாக்கு, அ.தி.மு.க., பிளவுபட்டிருப்பது, தி.மு.க., அரசு மீதான அதிருப்தி, மீண்டும் மோடி தான் பிரதமர் என்று வரும் கருத்துக் கணிப்புகள் ஆகியவற்றால், வரும் லோக்சபா தேர்தலில் வெற்றிச் சூழல் பா.ஜ.,வுக்கு சாதகமாக உள்ளதாக கூறும் அண்ணாமலை, போட்டியிடும் தொகுதிகளில் இருந்து 10 தொகுதிகளை மட்டும் குறிவைத்து தனி கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் பா.ஜ., தனித்து போட்டியிட்டு கணிசமான ஓட்டு சதவீதத்தை பெற்ற கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், தென் சென்னை, வேலுார், கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய 10 தொகுதிகளில் தனி கவனம் செலுத்தி, அவற்றில் வெற்றி பெற அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நெருக்கடி கொடுக்கலாம்



பா.ம.க., - தே.மு.தி.க.,வும் மூன்றாவது அணியில் இணைந்து விட்டால், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, சிதம்பரம், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், ஆரணி, துாத்துக்குடி உள்ளிட்ட மேலும் 10 தொகுதிகளில் தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணிக்கு கடும் நெருக்கடியை கொடுக்கலாம் என்றும் பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தை கடந்த ஆண்டே பிரதமர் மோடி, அமித் ஷா, பா.ஜ., தலைவர் நட்டா ஆகியோரிடம் அண்ணாமலை முன்வைத்ததாகவும், அதன்படியே அவரது செயல்பாடுகள் இருப்பதாகவும் பா.ஜ., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

சங் பரிவார் தனி யோசனை



வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய ஆர்.எஸ்.எஸ்., - வி.எச்.பி., உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள்முடிவு செய்துள்ளன.இதற்காக சட்டசபை தொகுதிக்கு, 100 பேரை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தவும் ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

கடந்த 1991 லோக்சபா தேர்தலில் சோதனை முயற்சியாக, கர்நாடகாவில் பெங்களூரு தெற்கு, மங்களூரு ஆகிய தொகுதிகளை தேர்ந்தெடுத்து, ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றின.

அந்த இரு தொகுதிகளிலும், 1991 முதல் தொடர்ந்து எட்டு லோக்சபா தேர்தலிலும் பா.ஜ.,வே வென்று வருகிறது. அதுபோல, வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் நான்கு தொகுதிகளை தேர்வு செய்து, பா.ஜ.,வை வெற்றி பெறச் செய்ய சங் பரிவார் அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்