கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் ஸ்டாலின்: சென்னையில் இருந்து 'ரிமோட் ஆப்பரேஷன்'

கொங்கு மண்டலத்தில் வலுவிழந்து நிற்கும் தி.மு.க.,வுக்கு வலு சேர்க்கும் வகையில் தருமபுரி, பொள்ளாச்சியில் நடந்த அரசு விழாவில், கொங்கு மண்டலத்துக்கான பல திட்டங்களை முதல்வர் அறிவித்து, கொங்கு மண்டலத்தில் தி.மு.க.,வுக்கு உள்ள 'ஓட்டை'யை அடைக்க புதிய வியூகம் வகுத்துள்ளார்.

கொங்கு மண்டலம் எப்போதும் அ.தி.மு.க.,வின் கோட்டை என்ற போதிலும், 2019 லோக்சபா தேர்தலில் மட்டும், இம்மண்டலத்தில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் வென்றனர். ஆனால், 2021 சட்டசபை தேர்தலில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி,தருமபுரி மாவட்டங்களில், தி.மு.க., குறைந்த எம்.எல். ஏ.,க்களையே வென்றது.

தனி திட்டங்கள்



வலுவான அமைச்சர்கள் இல்லாததால், கோவையை தற்போது அமைச்சர் முத்து சாமியும், சேலத்தை அமைச்சர் நேருவும், கிருஷ்ணகிரியை சக்கரபாணியும், தருமபுரியை பன்னீர்செல்வமும் பொறுப்பு அமைச்சர்களாக இருந்துகவனிக்கின்றனர்.

கோவை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் அதிகரித்து உள்ளதால், தி.மு.க., கூட்டணியில் யாரை நிறுத்தினாலும், வெற்றி பெறச் செய்வது சிரமம்.

தவிர, தி.மு.க., ஆட்சிக்கு வந்து, மூன்று ஆண்டுகளில் கொங்கு மண்டலத்துக்கென தனி திட்டங்கள் அறிவித்து, செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதை சரிக்கட்டும் வகையில், சமீபத்தில் நடந்த தருமபுரி அரசு விழாவில், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களுக்கான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

பிரசார யுக்தி



நேற்று பொள்ளாச்சியில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு, 1,500 கோடி ரூபாய்க்கு மேலான திட்டங்களை அறிவித்துள்ளார்.

ஏற்கனவே நிதியின்றி தடுமாறும் தமிழக அரசால், இத்திட்டங்களை செயல்படுத்துவதில் சிரமமும், தாமதமும் ஏற்படும். இருந்தும், அறிவிப்பை வெளியிட்டு, இவற்றை பிரசார யுக்தியாக்கிக் கொள்ள கட்சியினருக்கு கட்டளையிட்டுள்ளார்.

கொங்கு மண்டல விசிட்டில், அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, ஒருங்கிணைந்து செயல்படவும், கோஷ்டி பிரச்னையை தீர்க்கவும் பஞ்சாயத்து நடத்தி முடித்துள்ளார்.

குறிப்பாக, செந்தில் பாலாஜி சிறையில் உள்ளதால், கரூர் மாவட்டத்தில் தி.மு.க., கூட்டணியில் ஒருங்கிணைப்பு குறைந்துள்ளது. அவர் கூடுதலாக கவனித்த கோவை மாவட்டத்தில், தன் ஆதரவாளர்களை நியமித்து கட்டுக்குள் வைத்திருந்தார்.

அவர் சிறை சென்றதால், ஈரோடு அமைச்சர் முத்துசாமி பொறுப்பேற்று, செந்தில் பாலாஜி நியமித்த நபர்களை தவிர்த்து, பழைய ஆட்கள், தனக்கு விசுவாசமானவர்களை வைத்து காய் நகர்த்துவதால், நிர்வாகிகள் இடையே ஒற்றுமையில்லை.

நீலகிரி, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களிலும் அமைச்சர்கள் இருந்தாலும், மூன்று முதல் நான்கு கோஷ்டிகளாகவும், மேலிட அளவில் முதல்வர் ஸ்டாலின் கோஷ்டி, அமைச்சர் உதயநிதி கோஷ்டி எனவும் பிரிந்துள்ளனர்.

அதேபோல, சேலத்துக்கு நேரு அவ்வப்போது வந்து சென்றாலும், மாவட்ட அளவில் ஒருவரது கட்டுக்குள் கொண்டு வர இயலாத நிலையே தொடர்கிறது. தருமபுரி, கிருஷ்ணகிரியில், அ.தி.மு.க., மற்றும் பா.ம.க., ஆதிக்கத்துக்கு இடையே, தி.மு.க.,வை கரை சேர்ப்பது கடினமாக இருப்பதை முதல்வர் உணர்ந்துள்ளார்.

இதனால், சென்னையில் இருந்தபடி முதல்வரும், லோக்சபா தேர்தல் வரை அமைச்சர் உதயநிதியும், கொங்கு மண்டலத்தை கவனிக்க திட்டம் வகுத்துள்ளனர். சேலத்தை கவனிக்கும் நேரு, தேர்தல் முடியும் வரை தருமபுரி, கிருஷ்ணகிரியை சேர்த்து ஒருங்கிணைக்கவும் யோசனை தெரிவித்துள்ளார்.

புதிய வியூகம்



நீலகிரி, திருப்பூர், நாமக்கல், ஈரோடு என உள்ளூர் அமைச்சர்கள் உள்ள இடங்களில், தேர்தலில் தோற்றால் பதவி பறிபோகும் என்ற எச்சரிக்கையை ஸ்டாலின்மீண்டும் விடுத்துள்ளார்.

குறிப்பாக, ஈரோடு, தருமபுரி, சேலம், திருப்பூர் தொகுதிகளில் தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற வேண்டும் என்பதை இலக்காக வைத்து, நலத்திட்ட உதவி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் என முதல்வர் ஸ்டாலின் புதிய வியூகத்தை வகுத்துள்ளார். கொங்கு மண்டலத்தில் முதல்வரே நேரடியாக கவனம் செலுத்துவதால், மாவட்ட செயலர்கள் பதவி தப்புமா என்ற கவலையில் உள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்