குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிராக ஈ.வெ.ரா., போராடினாரா?
நுாற்றாண்டு கண்ட இயக்கங்கள் தங்களது வரலாற்றை எழுதுவது இயல்பு தான். ஆனால், இன்றைய அரசியல் இருப்பை தக்க வைப்பதற்காக தங்களது வரலாற்றில் இல்லாததையும் இட்டுக்கட்டி எழுதுவது, பெரும் ஏமாற்று. திராவிட இயக்கங்களும் இதற்கு விதிவிலக்கல்ல!
ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடி யதாக சொல்லிக் கொண்டாலும், ஆங்கி லேயர்களின் ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிராக திராவிட இயக்கமும் அதன் தலைவர்களும் ஒரு நாளும் போராடியதாக வரலாறில்லை.
ஆனால், தமிழகத்தை 30 ஆண்டுகளுக்கும் மேல் துன்புறுத்திய குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக ஈ.வெ.ரா.,வும் நீதிக்கட்சியும் போராடினர் என்றும், முத்துராமலிங்க தேவர் போராடவில்லை எனவும் வரலாறு எழுத முற்பட்டு இருக்கின்றனர். எது உண்மை என்று பார்ப்போம்?
பிரிட்டிஷ் அடிமை இந்தியாவில் பழங்குடி சமூகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட பெரும் வன்முறைகளில் ஒன்று தான், குற்றப் பரம்பரை சட்டம். பிரிட்டிஷ்- - இந்திய வனச் சட்டம் - 1878, 1927, உப்பு சட்டம் - 1888, காவல் சட்டம் - 1816, -1888 போன்ற சட்டங்களின் வழியாக, தங்கள் தற்சார்பு வாழ்க்கையை இழந்த பழங்குடிகளை குற்றவாளி முத்திரை குத்தும் நோக்கோடு கொண்டு வரப்பட்ட சட்டம் தான் குற்றப் பரம்பரை சட்டம்.
திருட்டு, வழிப்பறி, கூட்டு கொள்ளை போன்றவற்றை தடுப்பதற்காக இச்சட்டம் கொண்டு வரப்பட்டதாக சொன்னாலும், பிரிட்டிஷ் ஆட்சியின் நலன்களை பாதுகாப்பதே இதன் உண்மையான நோக்கம்.
கடந்த 12.10.1871 அன்று குற்றப் பரம்பரை சட்டம் வட இந்திய மாகாணங்களில் அமலுக்கு வந்தது. 01.03.1911 அன்று சென்னை மாகாணத்திற்கும் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 1879ல் பிறந்த ஈ.வெ.ரா., 1911ல் தன் 32வது வயதில் தான் ஈரோடு சங்கங்களில் தலைமை வகிப்பதன் வாயிலாக பொது வாழ்விற்கு வருகிறார்.
அப்போது சென்னை மாகாணத்தில் இச்சட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, 80 சமூகங்களை சேர்ந்த, ஏழு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்ட போது ஈ.வெ.ரா.,வோ, நீதிக்கட்சி தலைவர்களோ வாய் திறக்கவில்லை.
கடந்த 1920 ஏப்ரல் 3ல், இச்சட்டத்திற்கு எதிராக எழுந்த பெருங்காமநல்லுார் கலகத்தில் மாயக்காள் என்ற பெண் உட்பட, 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் இதே நிலை தான். இந்த சட்டத்தால் மக்கள் நாடு கடத்தப்பட்ட போதும், கிராமங்கள் திறந்தவெளி சிறையாக்கப்பட்ட போதும் இவர்கள் பேசவில்லை.
கிறிஸ்துவ மிஷனரிகளால் நிர்வகிக்கப்படும் தண்டனை குடியேற்றங்களில் பழங்குடி வழிபாட்டை அழித்து மத திணிப்பு நடப்பதற்கு எதிராக பம்பாய் அரசாங்க குழு கூட, கடந்த 1939ல் கண்டன அறிக்கை வெளியிட்டது. ஆனால் நீதிக்கட்சி வாய் திறக்கவில்லை. ஏனென்றால் அப்போது தான் பிரிட்டிஷ் கொண்டு வந்த இரட்டை ஆட்சி முறையை ஏற்று நீதிக்கட்சி ஜமீன்தார்கள் அமைச்சராக பதவி அனுபவித்துக் கொண்டு இருந்தனர்.
ஆனால், இப்போது, இல்லாத ஒரு சில விஷயங்களை சொல்லி ஈ.வெ.ரா., வும் நீதிக்கட்சியும் குற்றப் பரம்பரையாக வரையறுக்கப்பட்டவர்களுக்கு துணை நின்றதாக நிரூபிக்க, திராவிட சிந்தனையாளர்கள் விரும்புகின்றனர்.
பொய் 1
கடந்த 1937ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நீதிக்கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த போது, “1920ம் ஆண்டுக்கு முன்பு கல்விக்காக சென்னை மாகாணத்தில் ஆண்டு ஒன்றுக்கு, 1 கோடியே 40,00,000 ரூபாய் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், நீதிக்கட்சி என்னும் பார்ப்பனரல்லாதார், மந்திரி பதவி அடைய நேர்ந்து கல்வி இலாகாவில் ஆதிக்கம் பெற்ற பின், கல்விக்காக ஓராண்டுக்கு 2 கோடியே 25,00,000 ரூபாய் ஒதுக்கி வைத்து அதற்கேற்றாற்போல் பள்ளிக்கூடங்களையும் கலாசாலைகளையும், சர்வகலா சாலைகளையும் ஒன்றுக்கு இரண்டாக, மூன்றாக அதிகப்படுத்தி,'சண்டாளர்'கள், 'மிலேச்சர்'கள், 'சூத்திரர்'கள் ஆகிய மக்கள் யாவரும் இலவசமாகவும் கட்டாயமாகவும் படிக்க வேண்டும் என்கின்ற திட்டம் ஏற்படுத்தி அமலுக்கும் கொண்டு வந்து விட்டனர்,” என்று பேசியது குற்றப் பரம்பரையால் பாதிக்கப்பட்ட மக்களின் கல்விக்காக நீதிக்கட்சி செய்தது என, 'கீற்று' இணையதள கட்டுரை ஒன்று குறிப்பிடுகிறது.
உண்மை
இது ஈ.வெ.ரா.,வின் தேர்தல் பரப்புரை அல்ல. தேர்தல் முடிந்து, ராஜாஜி பதவியேற்று ஆறு மாதங்களுக்குப் பின், 26.12.1937 அன்று குடியரசில் தலையங்கமாக வெளியானது.
கல்விக்கான தொகையை அதிகரித்தது பிரிட்டிஷ் அரசு தானே தவிர, நீதிக்கட்சி அல்ல. சென்னை மாகாண நிதிநிலை அறிக்கையில், 1882ல் கல்விக்கு ஒதுக்கப்பட்ட 4 சதவீத நிதி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 1937ல் 14 சதவீதமானது. அதுவும் அந்த தலையங்கத்தில் குறிப்பிட்ட தொகையல்ல. நீதிக்கட்சி ஆட்சிக்கு வரும் முன், 1917 - -18ல் 94 லட்சமாக (11%) இருந்த கல்வி நிதி, ஆட்சி முடிந்து 1927க்கு முன்பு வரை, 11 சதவீதமாகவே தொடர்ந்தது என, இந்திய அரசின் நிதி மற்றும் வருவாய் கணக்குகள் தெரிவிக்கின்றன.
பொய் 2
கடந்த, 1934ல் முத்துராமலிங்க தேவர் தன் சொந்த சாதியான ஆப்பநாட்டு மறவர் சமூகம், இச்சட்டத்தால் பாதிக்கப் பட்ட போதும், 1937 சட்டசபை தேர்தலில் இச்சட்டத்தை நீக்குவேன் என்று பிரசாரம் செய்து வென்ற பின்னரும், குற்றப் பரம்பரை சட்டத்தை எதிர்த்து எந்த போராட்டமும் நடத்தவில்லை.
உண்மை
கடந்த 1908ல் பிறந்த முத்துராமலிங்க தேவர், தன் 20 வயதிலேயே அரசியலில் ஈடுபட துவங்கினார். மதுரை அமெரிக்கன் மிஷன் பள்ளியில் படிக்கும் போதே இந்த சட்டத்தால் நடக்கும் சித்ரவதைகளை அறிந்து கொண்டார்.
கடந்த 1934ல் குற்றப் பரம்பரை சட்டத்தில் மறவர்களும் இணைக்கப்பட்ட போது எதிர்ப்பு தெரிவித்து கமுதி அருகே அபிராமம் கிராமத்தில் மாநாடு நடத்தினார். முத்துராமலிங்க தேவர், சசிவர்ண தேவர், நவநீத கிருஷ்ண தேவர், பெருமாள் தேவர், வரதராஜுலு நாயுடு என ஐவர் அடங்கிய குழு, இச்சட்டத்தை எதிர்த்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனு மீதான அன்றைய கவர்னர் சர் முகமது உஸ்மான் நடவடிக்கையால், 2,000 பேர் மீதான சட்டம், 341 பேர் என குறைந்தது.
கடந்த 1936 அக்., 10ல் வளநாடு, அக்., 27ல் பேரையூர், அக்., 28ல் கமுதி, அக்., 29ல் மண்டலமாணிக்கம், அக்., 30ல் முதுகுளத்துார், நவ., 1ல் சிக்கல், நவ., 4ல் பெருநாழி, 1938 ஜூலை 27ல் அருப்புக்கோட்டை, 1939 பிப்., 15ல் திருப்பரங்குன்றம், ஜூலை 18ல் உசிலம் பட்டி என, சட்டசபை உறுப்பினராக இருக்கும் போதே கண்டன மாநாடுகள் நடத்தியவர் தான் முத்துராமலிங்க தேவர்.
பொய் 3
கடந்த 1938ல் முத்துராமலிங்க தேவர் இச்சட்டத்தால் திருமங்கலம், செக்கானுரணி பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று சட்டசபையில் பேசிய போது, அன்றைய மாகாண பிரிமீயர் ராஜாஜி அப்படி கோரிக்கைகள் வரவில்லை என சொன்னார். அதற்கு மறுப்பு கூட சொல்லவில்லை என்கின்றனர் ஈ.வெ.ரா., அனுதாபிகள்.
உண்மை
கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி, முத்துராமலிங்க தேவர் உட்பட பலரும் கம்பம் முதல் மதுரை வரையில் பெரிய பேரணியை நடத்தினர். இதை என்.ராமகிருஷ்ணன் தன், 'ஒரு போராட்டச் செம்மலின் வாழ்க்கை பயணம்' நுாலில் குறிப்பிடுகிறார். இச்சட்டத்தை துவக்கத்திலேயே எதிர்த்த மலையாளியான ஜார்ஜ் ஜோசப், இன்றும் மதுரையில் சிலையாக நிற்கிறார். அவரின் பெயர் இன்றும் 'ரோசாப்பூ துரை' என்ற பெயரில் கள்ளர் சமூக குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. நன்றி மறவா தென் மாவட்ட மக்கள் ஜாதி காரணமாகத் தான் முத்துராமலிங்க தேவரை கொண்டாடுகின்றனர் என்பது, வரலாறு தெரியாதவர்களின் பிதற்றல்.
கடந்த 1947ல் இச்சட்டம் நீக்கப்படும் வரை இதை கடுமையாக எதிர்த்தவரை புறந்தள்ளி, தன் வாழ்நாளில் குற்றப் பரம்பரை சட்டத்தை எதிர்த்து பேசாத ஒருவரை சமூகநீதி போராளி என தென் மாவட்ட மக்களை ஏமாற்ற, இன்றும் சில கட்டுக்கதைகள் எழுதப்படுகின்றன. “சிறைக்குச் செல் அல்லது கட்டை விரலை வெட்டிக்கொள்” என கைரேகை சட்டத்திற்கு எதிராகப் பேசியவர் தான் முத்துராமலிங்க தேவர். ஆனால் ஈ.வெ.ரா., அதற்கு எதிராக பேசியதாக, போராடியதாக சொல்லும் ஒன்று கூட, உண்மையான சான்று அல்ல.
-சோ.சரவணன்எழுத்தாளர்
வாசகர் கருத்து