ஜிபே மூலம் பணம்: அண்ணாமலைக்கு எதிராக தி.மு.க., புகார்
கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு ஜிபே வாயிலாக பா.ஜ., நிர்வாகிகள் பணம் செலுத்துவதாக தேர்தல் கமிஷனில் தி.மு.க., புகார் மனு கொடுத்துள்ளது.
லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். கோவை பா.ஜ., வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்ட போதே, "நேர்மையான அரசியலை முன்னெடுக்கிறோம். இந்த தேர்தலில் ஒரு பைசா கூட செலவழிக்க மாட்டேன்" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், வாக்காளர்களுக்கு பா.ஜ., நிர்வாகிகள் பணம் கொடுப்பதாக தி.மு.க., புகார் எழுப்பியுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட தி.மு.க., சட்டத்துறை அணியின் நிர்வாகி ஒருவர் அனுப்பியுள்ள புகாரில் கூறியுள்ளதாவது:
கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக வாக்காளர்களுக்கு ஜிபே வாயிலாக பணம் அனுப்பி வருகிறார். தேர்தல் நடத்தை விதிகளின்படி நேற்று மாலையுடன் தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் தொகுதியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும்.
ஆனால், கோவை அவிநாசி சாலையில் உள்ள ஓர் அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனர். அவர்கள் வாக்காளர்களுக்குப் போன் செய்து ஜிபே மூலம் பணம் விநியோகம் செய்து வருகின்றனர்.
சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார் மற்றும் கரூரை சேர்ந்த சிவக்குமார் ஆகியோர் பணப்பட்டுவாடா பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து