தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு எதிராக பிரசாரம் தமிழ்நாடு சீர்மரபினர் நல சங்கம் முடிவு
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வுக்கு எதிராக பிரசாரம் செய்வதுடன், வீடு வீடாகச் சென்று, அவர்களுக்கு ஓட்டளிக்கக் கூடாது என வலியுறுத்த, தமிழ்நாடு சீர்மரபினர் நலசங்கம் முடிவு செய்துள்ளது.
சங்க நிர்வாகிகள் வெளியிட்ட அறிக்கை:
'சீர்மரபினருக்கு வழங்கப்படும் இரட்டை சான்றிதழ் முறையை ஒழித்து, சீர்மரபினர் பழங்குடி என ஒரே சான்று வழங்கப்படும்' என, கடந்த சட்டசபை தேர்தலில், முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக, கடந்த மார்ச் 16ம் தேதி முதல்வர் அலுவலகம் செய்திக் குறிப்பு வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்து, விரைவில் அரசாணை வெளியிடக் கோரினோம். ஆனால், சீர்மரபினர் 68 சமூகங்களை சீண்டும் விதமாக, உலகில் எங்கும் இல்லாத அளவிற்கு, தி.மு.க., அரசு செய்து வரும் குளறுபடிகளை பார்த்து நொந்து போனோம்.
தொடரும் குழப்பம்
கடந்த, மார்ச் 16ல் அரசு வெளியிட்ட தெளிவுரைக் கடிதம், சமூக ஊடகங்களில் வெளியானது. அதில், இரண்டு சான்றுகளுக்கு பதிலாக, ஒரே தாளில் டி.என்.சி., - டி.என்.டி., என சான்று வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இது குழப்பத்தை ஏற்படுத்தியது. இதை சுட்டிக்காட்டியும் அரசு கண்டுகொள்ளவில்லை.
நேற்று முன்தினம் ஆன்லைனில் வருவாய்த் துறை வழங்கிய சான்று, குளறுபடியின் உச்சத்தை எட்டியுள்ளது. ஒரே தாளில் மூன்று சான்று வழங்கப்பட்டுள்ளது. தாளின் வலதுபுறம் மேல் பகுதியில், டி.என்.சி., - டி.என்.டி., என்றும், சான்றிதழ் டி.என்.சி., என்றும், குறிப்பில் மத்திய அரசுக்கு டி.என்.டி., சான்று வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டி.என்.டி., என ஒரே சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற எளிமையான கோரிக்கையை புரிந்துகொள்ளாததை பார்க்கும்போது, சீர்மரபினர் 68 சமூகங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது தெரிகிறது.
வீடு வீடாக பிரசாரம்
எனவே, இந்த தேர்தலில் அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு எதிராக பிரசாரம் செய்யவும், வீடு வீடாகச் சென்று, 68 சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சொல்லி அழுது, அவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது என வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
அறிக்கையில், 'கியூ.ஆர்.குறியீடு' முறையில், 2021 சட்டசபை தேர்தலில், ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என ஸ்டாலின் அளித்த வாக்குறுதி; இந்த தேர்தல் பிரசாரத்தின்போது, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டு வந்துள்ளதாக, முதல்வர் பேசிய வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து