'நம்ம கோவை, நம்ம அண்ணா': களமிறங்கும் 12,000 தன்னார்வலர்கள்
'நம்ம கோவை, நம்ம அண்ணா' என்ற முழக்கத்துடன், கோவை தொகுதியில் போட்டியிடும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு தேர்தல் பணியாற்ற, 12 ஆயிரம் தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் போட்டி யிட்டார். அப்போது, அவருக்கு தமிழகத்தையும் தாண்டி, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து நுாற்றுக்கணக்கானோர், தன்னார்வத்துடன் முன்வந்து தேர்தல் பணியாற்றினர். அதேபோல் இந்த முறையும் தொண்டர் படை திரண்டு வருகிறது.
தன்னார்வலர்களை திரட்டி ஒருங்கிணைப்பவர் பா.ஜ., ஆதரவாளரும், 'மார்க் 1' திருமணம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்தை நடத்தி வரும் சுதர்சன் என்பவர். இது பற்றி சுதர்சன் கூறியதாவது:
'கோவையில் உங்களுக்காக கட்சி சாராத பலர் தேர்தல் பணியாற்ற விரும்புகிறார்கள்' என்று அண்ணாமலையிடம் தெரிவித்தேன். 'நன்றாக செய்யுங்கள்' என்றார். என் தொடர்பில் உள்ள 7,000 பேருக்கு, 'தேர்தல் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள், உங்கள் விபரங்களை அனுப்பவும்' என்று தகவல் அனுப்பினேன். உடனடியாக 1,200 பேர் முன்வந்தனர். அவர்கள் வாயிலாக இதுவரை, 12,430 பேர் சேர்ந்துள்ளனர்.
நேற்று முன்தினம், 10 ஆயிரம் பேரை தாண்டியதும், அவர்களிடம் அண்ணாமலை பேசி ஊக்கப்படுத்த ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தோம். அனைவரும் உற்சாகமாக இருக்கின்றனர்.
இணைந்து உள்ளவர்களில், முழு நேரம், பகுதி நேரம் மற்றும் வீட்டிலிருந்தபடியே பணியாற்றுபவர்கள் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் அவரவர் ஆர்வத்திற்கேற்ப பணிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஆனால், அனைவரும் செய்ய வேண்டியது என ஐந்து பணிகள் கொடுக்கப்பட்டு உள்ளன. அவை;
l தங்கள் தொடர்பில் உள்ளவர்களிடம் பேசி அல்லது வாட்ஸாப் வாயிலாக தொடர்புகொண்டு பா.ஜ.வுக்கு ஓட்டளிக்கச் செய்ய வேண்டும்.
l தங்கள் வீட்டைச் சுற்றியுள்ள 20 வீடுகளுக்கு சென்று, அவர்களுடன் உரையாடி பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும்.
l தன்னார்வலர் குழுவாக, அவர்கள் வசிக்கும் தெரு, பகுதி, அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்கு சென்று உரையாட வேண்டும்
l தன்னார்வலர் குழுவாக ஒரு ஓட்டுச்சாவடியை தேர்வு செய்து, அதில் உள்ள 300 வீடுகளுக்கும் சென்று பிரசாரம் செய்ய வேண்டும்.
l அனைவரும் தங்கள் 'பேஸ்புக், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம், யு--டியூப், வாட்ஸாப்' உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில், மோடி ஏன் மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும்; கோவையில் ஏன் பா.ஜ., வெற்றி பெற வேண்டும்; கடந்த 10 ஆண்டுகால மோடி அரசின் சாதனைகள் பற்றி எழுத வேண்டும். ஆதாரங்களுடன் பேசி வீடியோ பதிவிட வேண்டும். இந்த ஐந்து முக்கிய பணிகளை வைத்து, தன்னார்வலர்கள் செயல்படுகிறார்கள்.
'நம்ம கோவை, நம்ம அண்ணா' என்ற முழக்கத்தோடு, ஏப்ரல் 17 வரை இந்த பணிகளை செய்ய இருக்கிறோம். இதற்காக, கோவை ராம்நகரில் அலுவலகம் திறந்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து