அமைச்சர் 'ஓபன் டாக்' காங்கிரஸ் கொந்தளிப்பு
'தேனி தொகுதி தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெறாவிட்டால் மறுநாளே அமைச்சர், மாவட்ட செயலர் பதவிகளை ராஜினாமா செய்வேன்' என்ற அமைச்சர் மூர்த்தியின் பேச்சு தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்., நிர்வாகிகளை காட்டமாக்கியுள்ளது.
இதுகுறித்து காங்., நிர்வாகிகள் கூறியதாவது:
தேனி தொகுதியில் அமைச்சர் மூர்த்திக்கு உட்பட்ட மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க.,வில் சோழவந்தான், அலங்காநல்லுார் உள்ளிட்ட பகுதிகள் வருகின்றன. 2019ல் தேனியில் காங்., இளங்கோவன் தோல்விக்கு, சோழவந்தான் தொகுதியில் ஓட்டுகள் குறைந்தது தான் காரணம்.
அப்போது காங்., நிர்வாகிகள் இதை சுட்டிக்காட்டியபோது தி.மு.க., பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், அப்போதே மாவட்ட செயலர், எம்.எல்.ஏ., என தி.மு.க., தலைமையில் 'பவர் சென்டராக' மூர்த்தி இருந்தார். தி.மு.க., கூட்டணி, 38 தொகுதிகளில் அப்போது வெற்றி பெற்றதால் ஒரு தோல்வியை, பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
தற்போது தேனியில் தி.மு.க.,வே களத்தில் இறங்கியுள்ளது. முதல்வர் ஸ்டாலினோ 'வேட்பாளரை ஜெயிக்க வைக்காவிட்டால் அமைச்சர் பதவிக்கு ஆபத்து வரும்' என கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதனால் இந்த முறையும் சோழவந்தான் தொகுதியில் ஓட்டுகள் குறைந்து தோல்விக்கு காரணமாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் அமைச்சருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது தி.மு.க., போட்டியிடுவதால் அச்சம் ஏற்பட்டு இப்படி உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.
மதுரையில் மார்க்., கம்யூ., வேட்பாளராக வெங்கடேசன் மீண்டும் போட்டியிடுகிறார். மூர்த்தியின் கீழ் மேலுார், கிழக்கு தொகுதிகளும் வருகின்றன. ஆனால், வெங்கடேசனுக்கு மட்டும் ஏன் உணர்ச்சிவசப்படவில்லை. அவர்களும் கூட்டணிக் கட்சி தானே. தி.மு.க., வேட்பாளர் என்றால்தான் அவர்கள் உணர்ச்சிவசப்படுவார்களா?
இவ்வாறு அவர்கள் கொந்தளிக்கின்றனர்.
வாசகர் கருத்து