கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத ஸ்டாலின் :கோவை பிரசாரத்தில் அண்ணாமலை கேலி
கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட விநாயகபுரம், சிவானந்தபுரம், சின்னவேடம்பட்டி, அஞ்சுகம் நகர், சின்னமேட்டுப்பாளையம், சரவணம்பட்டி ஜங்சன் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அண்ணாமலை வாக்காளர்களிடம் பேசியதாவது:
கோவையின் அடையாளங்களுள் ஒன்றான சிறுவாணி குடிநீரையே மக்கள் மறந்துபோகும் அளவிற்கு, தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகிக்கின்றனர். குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் மக்களின் அடிப்படை தேவையான சாலை, தெருவிளக்கு, சாக்கடை வசதிகளை சரியாக செய்து கொடுக்க முடியாத தமிழக முதல்வர், உலகத்தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை கோவையில் அமைக்க உள்ளாராம்.
கோவை மாநகர் 2022ல் துாய்மை இந்தியா திட்டத்தில் தேசிய அளவில் 42வது இடத்தில் இருந்தது. தற்போது 182வது இடத்திற்கு போனது. இதற்கு காரணம் தி.மு.க., அரசு. முதலில் கோவை நகரில், 1 கி.மீ., துாரத்துக்கு நம்ம முதல்வர் ஸ்டாலின் நடந்து சென்று பார்க்க வேண்டும். அப்போது தான் மக்களின் சிரமத்தையும் தேவையையும் அவர் புரிந்து கொள்ள முடியும்.
அதனால் அடிப்படை தேவைகளையே நிறைவு செய்யாத தி.மு.க., அரசு சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை கட்டிக் கொடுக்குமா? கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், வானம் ஏறி வைகுண்டம் போனாராம் என்ற பழமொழி முதல்வர் ஸ்டாலினுக்கு பொருந்தும்.
இவ்வாறு அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
வாசகர் கருத்து