லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணும் பணி கணினியில் சுழற்சி முறையில் அலுவலர்கள் தேர்வு
நாமக்கல்: நாமக்கல் லோக்சபா தொகுதியில், ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களை, கணினி மூலம் சுழற்சி முறையில் முதற்கட்டமாக தேர்வு செய்யும் பணி, மாவட்ட தேர்தல் அலுவலர் உமா தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
நாமக்கல் லோக்சபா தொகுதியில், சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு என, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிக்கான தேர்தல், கடந்த, ஏப்., 19ல் நடந்தது. தொடர்ந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி, விவிபேட் ஆகியவை, திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில் நுட்ப கல்லுாரியில், ஓட்டு எண்ணும் மையத்தில், மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
வரும், ஜூன், 4ல் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அதில், 6 சட்டசபை தொகுதிகளுக்கும், தலா, 14 மேசைகள் வீதம், மொத்தம், 84 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஓட்டு எண்ணும் பணியை, தலா, 102 தேர்தல் நுண்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் என, மொத்தம், 306 பேர் நியமிக்கப்பட உள்ளனர். கூடுதலாக, 306 பேர் தயார் நிலையில் உள்ளனர்.
தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் ஜோஷி, மின்னணு ஓட்டுப்பதிவு செயலாளர் மதுசூதன குப்தா ஆகியோர் தலைமையில், ஓட்டு எண்ணிக்கை குறித்த ஆலோசனை கூட்டம், காணொளி காட்சி மூலம் நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலர் உமா பங்கேற்றார். டி.ஆர்.ஓ., சுமன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பார்த்தீபன், பிரபாகரன், முத்துராமலிங்கம், பாலாகிருஷ்ணன், லோகநாயகி, தாசில்தார் திருமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து