ஆ.ராசா - திராவிட இயக்கத்தின் தொடர்ச்சி
ஈ.வெ.ராமசாமி தலைமையில் திராவிட இயக்கம் துவங்கிய நாள் முதலாக அதனுடைய முக்கியக் கொள்கைகள் இரண்டு. ஆரம்ப நாட்களில் இவை அணையா நெருப்பாக வெளிப்படையாக எரிந்து கொண்டிருந்தன. பிற்காலத்தில் அரசியல் காரணங்களுக்காக உள்ளே எடுத்துச் செல்லப்பட்டு, அணைந்து விடாமல் சில கழகக்கொள்கைச் செம்மல்களால் பாதுகாக்கப்படுகின்றன. அணையவில்லை, எரியாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம் என்று அவர்களில் சிலர் விடாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
இந்திய விடுதலைக்கு எதிர்ப்பு, ஈ.வெ.ரா.,வுக்கு முன்பே நீதிக் கட்சி காலத்தில் துவங்கி விட்டது. கடந்த 1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டிக்காதது மட்டுமல்லாமல், அதை எதிர்த்துப் போராடிய மக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்த அரசை ஆதரித்தது நீதிக் கட்சி.
கடந்த 1927ல் 'சைமனே திரும்பிப் போ' இயக்கத்தில் துவங்கி, தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு முக்கியமான காலகட்டத்திலும் ஆங்கிலேயருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தவர் ஈ.வெ.ரா. அவர் தலைமையில் இயங்கிய நீதிக் கட்சி, 1938ல் தமிழ்நாடு தனி நாடாக, ஆங்கிலேயருக்கு விசுவாசமாக பிரித்தானிய அரசின் இந்தியச் செயலரின் கீழ் இயங்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.
நம்பிக்கையில் இருக்கிறேன்
'விடுதலை நாளை துக்க நாளாகக் கொள்ள வேண்டும்' என்று அவர் சொன்னது நமக்கு நன்றாகத் தெரிந்ததே. இறக்கும் வரை தமிழ்நாடு இந்தியாவை விட்டுப் பிரிய வேண்டும் என்ற நிலைப்பாடோடு அவர் இருந்தார்.
அவரது சீடரான அண்ணாதுரை, 1963ல் பிரிவினை வாதத்தைக் கைவிட்டார் என்பது உண்மை. 'பிரிவினையைக் கைவிட்டு விட்டோமே தவிர அதற்கான காரணங்கள் இருக்கின்றன' என்றும் சொல்லிக் கொண்டிருந்ததும் உண்மை. இதை நான் சொல்லவில்லை, முதல்வர் ஸ்டாலின், 3.2.2019ல் கொடுத்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார். அவரே, 16.3.2018ல் ஈரோட்டில் நடந்த பத்திரிகை சந்திப்பு ஒன்றில், 'திராவிட நாடு பிரிந்தால் அதை நான் வரவேற்பேன்' என்றும், 'வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்' என்றும் சொல்லியிருக்கிறார்.
எனவே, இந்திய ஒற்றுமையை ஆதரிக்கிறோம் என்று தி.மு.க., தலைமை சொல்வது தற்காலிகப் போர் தந்திரம் மட்டும்தான் என்றும், கட்சியின் நீண்ட காலக் குறிக்கோள் பிரிவினை என்றும், நாம் நினைத்தால் அதற்கு அடிப்படை இருக்கிறது.
தி.மு.க.,விற்காக உயிரைக் கொடுத்து வேலை செய்யும் லட்சக்கணக்கான தொண்டர்கள் இவ்வாறு நினைக்கின்றனர் என்று நான் சொல்லவில்லை. ஆனால், கட்சியின் பெருந்தலைகள் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பிரிவினையைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது அவர்கள் இன்னும் பிரிவினை நெருப்பை அணையாமல் பாதுகாக்க முயன்று கொண்டிருக்கின்றனர் என்பதைத் தான் காட்டுகிறது.
இந்தப் பின்புலத்தில் தான் ராசா, “தி.மு.க., இல்லாவிட்டால் இந்தியா இருக்காது. நாங்கள் தனியாகப் போய் விடுவோம்” என்று சொன்னதைப் புரிந்து கொள்ள வேண்டும். நான், பிரதமர் மோடி, 'தி.மு.க.,வை இல்லாமல் செய்வோம்' என்று சொன்னதை ஆதரிக்கவில்லை. ஆனால், அதற்குப் பதில் பிரிவினை தான் என்று ராசா சொல்வதை தி.மு.க.,வினரில் பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இந்திய அரசியல் சட்டம் நமக்கு அளித்திருக்கும் ஜனநாயகத்தின் அடிப்படையிலேயே பா.ஜ.,வை எதிர்கொள்ள வேண்டும் என்றுதான் அவர்கள் நினைப்பர்.
அடுத்த நெருப்பு பிராமண ஒழிப்பு. நீதிக் கட்சியின் வரலாற்றை தெரிந்தவர்கள், அது, 1916ல் வெளியிட்ட பிராமணர் அல்லாதார் அறிக்கையை மறந்திருக்க மாட்டார்கள். அவ்வறிக்கை பிராமணர்கள் அரசு பதவிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
ஆனால், அதற்குக் காரணம் அவர்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டனர் என்பதுதான் என்கிறது. அது, பிராமணர்கள் மற்றவர்களைப் படிக்க விடாமல் தடுத்தனர் என்று சொல்லவில்லை. மாறாக, கல்வியைப் பொறுத்தவரை எங்களில் பலர் பிராமணர்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டனர் என்கிறது.
ஈ.வெ.ரா., வந்த பின் தான், பிராமணர்கள் பிறரை கற்க விடாமல் தடுத்தனர் என்ற மிகவும் கேவலமான, வரலாற்றிற்குப் புறம்பான பொய், கூசாமல் சொல்லப்பட்டது. கல்வியை தடுத்தனர் என்ற காரணத்தைக் காட்டி, ஈ.வெ.ரா., கடந்த நுாற்றாண்டின் முப்பதுகளில், பிராமணர்களை யூதர்களோடு ஒப்பிட்டார். அவர்களைப் போலவே விரட்டி அடிக்கப்பட வேண்டியவர்கள் என்பதையும் சொல்லிக் கொண்டிருந்தார்.
காமராஜருக்கு எழுதிய கடிதம்
ஐம்பதுகளின் இறுதிகளில் பிராமணர்களைக் கொன்றால் குற்றம் இல்லை என்று சொல்ல ஆரம்பித்தார். பிராமணர்கள் பிறவியிலேயே அயோக்கியர்கள் என்ற பொருளில் “வாயில் நாக்கில் குற்றம் இருந்தால் ஒழிய வேம்பு இனிக்காது. தேன் கசக்காது. பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய புலி புல்லைத் தின்னாது. ஆடு மனிதரைத் தின்னாது. அது போலவாக்கும் பார்ப்பனத் தன்மை,” என்று 23.4.57ல் சொன்னார்.
நேரு, 5.11.57ல் காமராஜருக்கு எழுதிய கடிதத்தில் ஈ.வெ.ரா.,வை மனநோய் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறச் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈ.வெ.ரா.,வின் மறைவிற்குப் பின் பிராமணர்களைத் தாக்க இப்பொய் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. ஆ.ராசாவும் அடிக்கடி இதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். கூடவே ஓர் உண்மையையும் சொல்கிறார். பிராமணர்களை தமிழ்நாட்டில் அரசு பதவிகளிலிருந்து இல்லாமல் செய்துவிட்டோம் என்பதையும் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
ஆ.ராசா மட்டுமன்று, வேறு சில திராவிடப் பெருந்தலைகளும் பிராமணர்களை தமிழகத்திலிருந்து விரட்டி அடித்து விட்டோம் என்று பெருமையோடு சொல்லிக் கொள்கின்றனர். இதுதான் திராவிடத் தலைமையின் நிலைப்பாடு.
தி.மு.க.,வின் இன்றைய தொண்டர்களில், மிகப் பெரும்பாலானோர் பிரிவினையை வெறுப்பவர்கள். பிராமண எதிர்ப்பை ஆதரிக்காதவர்கள். இவர்கள் கையில் கட்சி சென்றடையும் வரையில் இவ்விரு நெருப்புகளும் உள்ளே எரிந்து கொண்டுதான் இருக்கும்.
-பி.ஏ.கிருஷ்ணன், எழுத்தாளர்
வாசகர் கருத்து