ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி
செங்கல்பட்டு, : ஸ்ரீபெரும்புதுார் லோக்பசா தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு, அ.தி.மு.க., வேட்பாளர் பிரேம்குமார், த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட 31 பேர் போட்டியிட்டனர்.
ஓட்டுப்பதிவு
இந்த தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையம், சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மையத்தில், பல்லாவரம், தாம்பரம், ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு தரைத்தளத்திலும், மதுரவாயல், அம்பத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு முதல் தளத்திலும், ஆலந்துார் சட்டசபை தொகுதிக்கு இரண்டாம் தளத்திலும், ஓட்டு எண்ணும் மையங்கள் உள்ளன.
ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும், 12 ஸ்டராங்க் ரூம்களில், 4,874 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வி.வி.பேட் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த மையத்தில், 24 மணி நேரமும், போலீசார், எல்லை பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆலோசனை
இந்நிலையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி, மாவட்ட கலெக்டர், தேர்தல் நேர்முக உதவியாளர் சுப்பிரமணி, தாசில்தார் சிவசங்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், ஓட்டு எண்ணும் மேற்பார்வையாளர், உதவியாளர், நுண் பார்வையாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள், வரும் ஜூன் 4ம் தேதி காலை 6:00 மணிக்கு, மையத்திற்கு வருதல் உள்ளிட்ட ஓட்டு எண்ணும் நடைமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து