ரூ.653 கோடி 'ஆற்றல்' அசோக்குமார் யாரு?
ஈரோடு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் 'ஆற்றல்' அசோக்குமார், 54, தாக்கல் செய்த சொத்து பட்டியலின் ஆற்றலை பார்த்து பொதுமக்கள் மட்டும் அல்லாது அரசியல்வாதிகளும் ஆடிப்போயுள்ளனர். இவர் சொத்து மதிப்பு ரூ.653.47 கோடி! இப்போது, இவர் யாரென மக்கள் கூகுளில் தேடி வருகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் 'ஆற்றல்' அசோக்குமார் என்ற பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. தன் ஆற்றல் அறக்கட்டளை வாயிலாக, 10 ரூபாய்க்கு காலையில் இட்லி, சட்னி, சாம்பார்; மதியம், 10 ரூபாய்க்கு கலவை சாதம்; 10 ரூபாய்க்கு மருத்துவ உதவி வழங்கி வருகிறார்.
மேலும், கோவில் மற்றும மயான சீரமைப்பு, காலனி பகுதிகள் மற்றும் அரசு பள்ளிகளுக்கு அடிப்படை வசதி செய்து தருவது, குழந்தைகள் படிப்பு தேவைக்கு நிதி அல்லது பொருளாக உதவி என, தொண்டுப்பணி செய்து வருகிறார்.
குடும்பம்
ஈரோடு அருகே சோளங்காபாளையத்தில் வசிக்கும் இவரது தந்தை ஆறுமுகம், பேராசிரியர். தாயார் கே.எஸ்.சவுந்தரம், கடந்த 1991 - 96ல் அ.தி.மு.க.,வில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.,யாக இருந்தவர். தற்போது, பா.ஜ.,வில் உள்ளார்.
இவரது மனைவி கருணாம்பிகா. இவர்களுக்கு, 2 மகன்கள் உள்ளனர்.
மனைவியின் தாயார் டாக்டர் சி.கே.சரஸ்வதி, தற்போது மொடக்குறிச்சி, பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
அசோக்குமார், கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் பி.இ., மின் பொறியியல் படித்து; அமெரிக்காவில் உள்ள கென்டகி லுாயிஸ்வில் பல்கலை மற்றும் இண்டியானாபோலிஸ் பல்கலைகளில் முதுகலை பட்டங்களை பெற்றுள்ளார். அமெரிக்காவில் தொழில்நுட்ப விற்பனை ஆய்வாளராக பணியாற்றி உள்ளார். இதனால், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட பல மொழிகள் அத்துப்படி. பழகுவதற்கு எளிமையானவர் என அ.தி.மு.க.,வினர் சொல்கின்றனர்.
தொழில்
இவரது குடும்பத்தினர் ஈரோடு, சேலம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் சென்னையில் 'தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல்' என்ற பெயரில் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். இவற்றை அசோக்குமார் நேரடியாக நிர்வகிக்கிறார்.
தாயாரால் அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு, பா.ஜ.,வில் இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில துணை தலைவராக செயல்பட்டார். ஈரோடு லோக்சபா தொகுதியை குறிவைத்து காய் நகர்த்தினார். ஆனால், பா.ஜ., மாவட்ட-, மாநில நிர்வாகிகளுடன் இவருக்கு ஒத்துப்போகவில்லை. லோக்சபா தேர்தலில் ஈரோடு தொகுதி இவருக்கு கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டது.
அந்த அதிருப்தியால், பா.ஜ.,வில் இருந்து விலகி, நேரடியாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்தார். ஈரோடு தொகுதியில் தனக்கு வாய்ப்பு தரப்படும் என உத்தரவாதம் பெற்று, அ.தி.மு.க.,வில் ஐக்கியமானார்.
தன் சகாக்கள், இளைஞர்கள் கொண்ட குழுக்கள் வாயிலாகவும், அ.தி.மு.க., நிர்வாகிகள் வாயிலாகவும் தனித்தனியாக தேர்தல் பணி செய்கிறார்.
இவர், தன் பள்ளி நிர்வாகம் வாயிலாகவும், விவசாயம் உட்பட சில தொழில்கள் வாயிலாகவும் வருவாய் ஈட்டுவதால், எம்.பி., தேர்தலை ஒரு கை பார்க்கவும், இதில் தோல்வி கிட்டினாலும் அடுத்த சட்டசபை தேர்தலில் பதவியை கைப்பற்றவும் திட்டமிட்டு தேர்தல் களத்தில் உள்ளார்.
சொத்து
இவரது பெயரில், 583.48 கோடி ரூபாய் மற்றும், இவரது மனைவி கருணாம்பிகா பெயரில், 69.98 கோடி ரூபாய் மதிப்பில் அசையும், அசையா சொத்துக்கள் உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு, 653.47 கோடி ரூபாய்.
'நான் தொழில் மற்றும் விவசாயம் செய்கிறேன். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக தேர்தலில் நிற்கவில்லை. எதையாவது செய்ய பதவி வேண்டும். அதற்காக நிற்கிறேன்' என பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
வாசகர் கருத்து