தாம்பரத்தில் சிக்கிய ரூ.4 கோடி : ஐ.டி வளையத்தில் நயினார்
பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணி அளவில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பும். இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் சில நிமிடங்கள் நின்று செல்லும். நேற்று இரவு இந்த ரயில் வாயிலாக நெல்லைக்கு பணம் கடத்தப்படுவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் குளிர்சாதன பெட்டியில் சோதனை செய்தபோது, ரூ.4.5 கோடி ரூபாய் சிக்கியுள்ளது. சுமார் 6 பைகளில் இந்தப் பணம் கொண்டு செல்லப்பட இருந்தது. இப்பணத்துடன் பிடிபட்ட 3 பேரையும் தாம்பரம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், தாம்பரத்தில் பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது. நயினாருக்கு சொந்தமாக புரசைவாக்கத்தில் இயங்கி வரும் புளூ டயமன்ட் என்ற விடுதியின் ஊழியர்கள் இந்தப் பணத்தை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இது நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணமா என்பது குறித்து இதுவரையில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. இதையடுத்து, புரசைவாக்கத்தில் உள்ள புளூ டயமன்ட் ஓட்டலில் போலீசார் சோதனை நடத்தினர்.
தொடர்ந்து, விருகம்பாக்கத்தில் வசிக்கும் நயினாரின் உறவினரான முருகன் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. போலீசாரின் விசாரணையில் கைதான நவீன், சதீஷ், பெருமாள் ஆகியோர் பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பணத்தை நெல்லை விரைவு ரயிலில் கொண்டு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், 4.5 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில் வருமான வரித்துறை விசாரணை நடத்த உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 'ஏப்., 6ம் தேதி நெல்லை செல்லும் விரைவு ரயிலில் 4.5 கோடி பணத்தை நேற்று கைப்பற்றியுள்ளனர். இந்தப் பணத்தை நெல்லை பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக எடுத்துச் செல்லப்படுவதாக அவரது உதவியாளர் உள்பட 2 பேர் தெரிவித்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பல கோடி ரூபாய் பணத்தை ரகசிய இடங்களில் பதுக்கி வைத்துள்ளதாக சந்தேகப்படுகிறோம். பா.ஜ., தங்கள் வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களில் பணம் விநியோகிக்க திட்டமிட்டுள்ளது.
எனவே, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை செய்ய வேண்டும். பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் சோதனை நடத்த வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து