5 கோடியா... 16 கோடியா: மதுரை வேட்பாளர்களின் ஆர்.டி.ஐ மோதல்
"மதுரைக்கு தனது எம்.பி., நிதியை சு.வெங்கடேசன் சரியாக பயன்படுத்தவில்லை" என அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு, மா.கம்யூ., வேட்பாளர் சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார்.
மதுரை லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் மா.கம்யூ., வேட்பாளராக சு.வெங்கடேசனும் அ.தி.மு.க., சார்பாக டாக்டர் சரவணனும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், சு.வெங்கடேசனின் செயல்பாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரவணன், "சு.வெங்கடேசன், தனது எம்.பி., நிதியை முறையாகப் பயன்படுத்தவில்லை. அரசு செய்யும் வேலைகளுக்கு அவர் பெயர் எடுத்துக் கொள்ள பார்க்கிறார்.
2019 முதல் 2023 வரை 17 கோடி அளவுக்கு ஒதுக்கப்பட்ட எம்.பி., நிதியில் 5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதில் 4.3 கோடி ரூபாயை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்" என விமர்சித்திருந்தார்.
இதற்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார், சு.வெங்கடேசன். அதில் கூறியிருப்பதாவது:
தொகுதி மேம்பாட்டு நிதியில் 17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும் 5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் தெரிவித்திருந்தார்.
அதற்கு நான், '5 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட 17 கோடிகளில் 245 திட்டங்களுக்கு 16.96 கோடி வரை பயன்படுத்தப்பட்டுள்ளது' என்று பதில் அளித்தேன்.
அதற்கு விளக்கம் அளித்துள்ள சரவணன், ஆர்.டி.ஐ., பதிலை ஆதாரமாக வெளியிட்டுள்ளார். ஆனால், அந்தப் பதில் உண்மைக்கான ஆதாரமாக இல்லை.
அந்த பதிலிலேயே 260 திட்டங்கள் 16.60 கோடிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும், 228 திட்டங்கள் ரூ 15.26 கோடிகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது என்றும் 155 திட்டப் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது என்றும் அதே ஆர்.டி.ஐ., தெரிவித்துள்ளது.
அந்த ஆர்.டி.ஐ., பதில் அக்டோபர் வரையிலான தகவல்களை மட்டுமே கொண்டுள்ளது. அதற்கு பிந்தைய 5 மாதங்களின் விவரம் அதில் இல்லை. எனவே, அவதூறை ஆரம்பித்து வைத்து அதை முடித்து வைத்தும் உள்ளார். ஆர்.டி.ஐ., பதிலின் முழு விவரங்களை வெளியிடாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்தது அவரின் பதிலில் வெளிவந்துவிட்டது.
சட்ட நடவடிக்கை எடுப்பதாக அறிவித்த பின்னர், இந்த ஆர்.டி.ஐ ஆவணத்தை சரவணன் வெளியிட்டுள்ளார். 5 கோடிதான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் உண்மை அல்ல என்பது அவர் வெளியிட்டுள்ள ஆவணம் மூலமாகவே வெளிவந்துள்ளது.
அனைத்து திட்டங்களிலும் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. அனைத்துப் பணிகளும் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
இவ்வாறு அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து