நான் சிரித்தால் தவறு, உதயநிதி சிரித்தால் சரியா : பழனிசாமி கேள்வி
"மக்களுக்கு தேவையான நிதிகளை பெற்று தரவும், சிறுபான்மை இன மக்களை பாதுகாக்கவும், சுதந்திரமாக செயல்படவும் பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகி தேர்தலை சந்திக்கிறோம்" என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
துாத்துக்குடியில் நடந்த பிரசார கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது:
2011ல் தே.மு.தி.க.,-அ.தி.முக., கூட்டணியில் ஜெயலலிதா முதல்வரானார். இப்போதும் அதே கூட்டணி அமைந்துள்ளது. தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தி.மு.க., வுக்கு ஜால்ரா போடும் கட்சிகளாக மாறிவிட்டன. மக்கள் பிரச்னைக்கு ஸ்டாலின் குரல் கொடுக்கவில்லை.
தமிழகத்தில் விலைவாசி உயர்வு, விவசாயிகள் போராட்டம், அரசு ஊழியர்கள் போராட்டம் என பல பிரச்னைகள் உள்ளன. இதற்கு தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் எந்தக் கட்சிகளும் வாய் திறப்பதில்லை.
கடந்தாண்டு வந்த மிக்ஜாம் புயலுக்கே ஸ்டாலின் தடுமாறிவிட்டார். கனமழை வருவதற்கு முன்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இந்த அரசு எந்த எச்சரிக்கையையும் தரவில்லை. திறமையற்ற முதல்வராக பொம்மை முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்.
துாத்துக்குடி வெள்ளத்தை பார்க்கக்கூட முதல்வர் வரவில்லை. ஆனால், இண்டியா கூட்டணி பேச்சுக்காக டில்லி சென்றார். மக்கள் துடித்து கொண்டிருந்தபோது, போர்க்கால அடிப்படையில் எந்த பணிகளையும் அவர் அவர் செய்யவில்லை. அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் தான் முக்கியம்.
அ.தி.மு.க., ஆட்சியில் துாத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பக்கில் ஓடை திட்டத்தைக் கூட கிடப்பில் போட்டுவிட்டனர். இப்படிப்பட்ட ஆட்சி தேவையா என்பதை மக்கள் உணர வேண்டும்.
அ.தி.மு.க., கள்ளக் கூட்டணி வைத்திருப்பதாக முதல்வர் சொல்கிறார் . இது அவர்களின் பழக்கம்போல இருக்கிறது. இதுவரை எந்தக் கட்சி தலைவரும் இதுபோல பேசியது கிடையாது.
2019ல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் நான் பிரதமரோடு இருந்ததை உதயநிதி கொச்சைப்படுத்துகிறார். நான் பல்லைக் காட்டியதாக கூறுகிறார். பிரதமர் உடன் உதயநிதி இருக்கும் படத்தில் அவரும் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கிறார். நான் சிரித்தால் தவறு. நீங்கள் சிரித்தால் சரியா?
அ.தி.மு.க., மறைமுகமாக யாருக்கும் ஆதரவு அளிக்காது. நாங்கள் நினைத்திருந்தால் பா.ஜ., உடன் கூட்டணி வைத்திருப்போம். எங்களுக்கு அவசியம் இல்லை. தி.மு.க.,வை போல் பதவி வெறிபிடித்த கட்சி அ.தி.மு.க., அல்ல. மத்தியிலும் மாநிலத்திலும் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே இவர்களின் திட்டம்.
மக்களுக்கு தேவையான நிதிகளை பெற்று தரவும், சிறுபான்மை இன மக்களை பாதுகாக்கவும், சுதந்திரமாக செயல்படவும் பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகி தேர்தலை சந்திக்கிறோம். ஸ்டாலினுக்கு பதவி பெரிது. எங்களுக்கு மக்கள் பெரிது.
1999ல் லோக்சபா தேர்தலில் பா.ஜ., உடன் கூட்டணி மத்தியில் அதிகாரத்தை அனுபவித்தனர். அடுத்து, அந்தர் பல்டி அடித்து காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து அதிகாரத்தில் இருந்தனர். இவர்கள் தான் கொள்கை கூட்டணியாம்.
இதே காங்கிரசை விமர்சித்தவர் தான் ஸ்டாலின். எமர்ஜென்சியில் கொடுமைப்படுத்தினார்கள் எனக் கூறிவிட்டு, அதே காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது, 'கோபேக் மோடி' என்றவர், ஆளும்கட்சியானதும் 'வெல்கம் மோடி' என இரட்டை வேடம் போடுகிறார்.
ஸ்டாலினும் உதயநிதியும் வெளியில் வீர வசனம் பேசுவார்கள். பிரதமரை பார்த்ததும் சரண் அடைந்துவிடுவார்கள். இந்த தேர்தலில் உங்கள் முகத்திரை கிழிக்கப்படும்.
தேரதல் பத்திரம் வாயிலாக திமுகவுக்கு 656 கோடி ரூபாய் வந்தது. மற்ற கட்சிகள் கொள்ளையடித்ததைப் பற்றிப் பேசும் ஸ்டாலினுக்கு, தி.மு.க., கொள்ளையடித்ததைப் பற்றி தெரியவில்லையா. துாத்துக்குடிக்கு அ.தி.மு.க., அரசு செய்த எந்த நலத்திட்டங்களையும் தி.மு.க., அரசு செய்யவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து