ரூ.2 கோடியில் 127 கோவில்கள் புத்துயிர்: பா.ஜ.,வால் பட்டியல் சமூகத்தினர் உற்சாகம்
தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளில், அனைவரின் எதிர்பார்ப்பும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை மீது தான் உள்ளது. தி.மு.க.,வில் கணபதி ராஜ்குமாரும்; அ.தி.மு.க.,வில் சிங்கை ராமச்சந்திரனும் போட்டியிடுகின்றனர்.
கோவையில் பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் இடங்களில் உள்ள கிராம கோவில்கள், பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாமல் உள்ளன. இதற்காக, திராவிட கட்சிகளிடம் உதவி கேட்டும் தீர்வு கிடைக்கவில்லை என, அந்த சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் இடங்களுக்கு சென்று, அங்குள்ள மக்களை சந்தித்த பா.ஜ.,வினர், 'கோவில்களை புனரமைத்து தருவதுடன், கோவில்களில் தொடர்ந்து பூஜைகள் நடத்த உதவிகள் செய்து தரப்படும்' என்று, சமீபத்தில் வாக்குறுதி அளித்தனர்.
அதை தொடர்ந்து, பா.ஜ., ஆன்மிக வழிபாட்டு பிரிவினர், கோவை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று புனரமைக்கப்பட வேண்டிய கோவில்களின் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் முதல் கட்டமாக, 127 கோவில்களில், 2 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகளை செய்வதற்கான பொறுப்பை, பா.ஜ.,வின் ஆதரவாளர்களாக உள்ள தொழில் முனைவோர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கோவையில் சூலுாருக்கு உட்பட்ட பட்டத்தரசி அம்மன் கோவில், பெருமாள் கோவில், மதுரை வீரன் கோவில் உட்பட, 127 கோவில்களில் புனரமைப்புக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பணி செய்ய வேண்டிய கோவில்கள் தொடர்பாக கணக்கு எடுக்கும் பணி நடக்கிறது. இதை தேர்தல் ஆதாயத்திற்காக செய்யவில்லை. மத்திய அரசின் திட்டங்களால், பட்டியல் சமூகத்தினர் பல்வேறு வகைகளில் பயன் அடைந்துள்ளனர். அவர்கள், பா.ஜ.,வுக்கு உறுதியாக ஓட்டளிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து