வாரிசு கோட்டாவில் வரவில்லை : டி.ஆர்.பி.ராஜாவை சாடிய அண்ணாமலை
"பிரதமர் மோடியைப் பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை என்பது மக்களுக்குத் தெரியும்" என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கோவை போன்ற நகரத்தில் கஞ்சா இல்லை என ஸ்டாலினால் நிருபிக்க முடியுமா. இது போன்ற மோசமான ஆட்சியை இந்திய அரசியலில் யாரும் நடத்தியது இல்லை.
தன் தந்தை சம்பாதித்த பணத்தை வைத்து டி.ஆர்,பி.ராஜா அரசியலுக்கு வந்துள்ளார். அவர் தந்தை பாலு கொள்ளையடிக்காத பணத்தை பயன்படுத்தவில்லை என்றால், டி.ஆர்.பி., ராஜா யார்?
அவர் அப்பா கொள்ளையடித்த பணத்தை கோவை மக்களிடம் கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்கிவிடலாம் என நினைத்து விட்டாரா. கோவை மக்கள் பீனிக்ஸ் பறவை போன்றவர்கள்.
மற்ற ஊர்களில் இருந்து இங்கு வந்து சுயமாக தொழில் துவங்கி நாட்டின் முக்கியமான நகரமாக மாற்றியுள்ளனர். டி.ஆர்.பி. ராஜாவுக்கு இந்த மண்ணில் இடம் கிடையாது. அப்பா பெயரை வைத்து நான் பிழைக்கவில்லை. கோட்டா முறையில் இங்கு யாரும் வரவில்லை.
தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் என்னுடைய புராணத்தைப் பாடிக் கொண்டிருக்கின்றன. 2002ல் கோவைக்கு என்ன மனநிலையோடு வந்தேனோ, அதே மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன்.
கோவைக்கு சேவை செய்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனக்கு அடையாளம் தந்தது, கோவை தான். கோவையின் மாற்றத்திற்காகவும், இங்கே அதிகமாக இருக்கும் போதை கலாசாரம், தீவிரவாத கலாசாரத்தை பா.ஜ., ஒழிக்கும். போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தை கோவையில் உருவாக்குவோம்.
வாசகர் கருத்து