அ.தி.மு.க., வேட்பாளருக்கு இவ்வளவு சொத்துகளா?
ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனக்கு 582 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் ஈரோடு அ.தி.மு.க., வேட்பாளராக ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பா.ஜ.,வின் ஓ.பி.சி., அணியின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த இவர், கடந்த நவம்பர் மாதம் அ.தி.மு.க.,வில் இணைந்தார். இவர், மொடக்குறிச்சி தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., சரஸ்வதியின் மருமகன் ஆவார்.
ஈரோடு தொகுதியில் போட்டியிடுவதற்காக மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுங்கராவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அத்துடன் தன் சொத்து விவரங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஆற்றல் அசோக்குமாருக்கு 526 கோடியே 53 லட்சத்து 9500 ரூபாய் அசையும் சொத்துகள் உள்ளன. வங்கிக் கணக்குகளில் 6.99 கோடி ரூபாயும் 10.01 கிலோ தங்கமும் கையில் ரொக்கமாக 10 லட்சமும் உள்ளன. அசையா சொத்துகளாக 56,95 கோடி சொத்துகள் உள்ளன. சொந்தமாக வாகனம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள அசோக், கடனாக 12 லட்சம் கடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவரது மனைவி கருணாம்பிகா குமாருக்கு ரூ.47 கோடியே 38 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகளும் 22 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகளும் உள்ளன.
ஆற்றல் அசோக்குமாரை எதிர்த்துப் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் பிரகாஷ் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், தனக்கு 4.89 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து